ஐயப்பனை தரிசித்த பாருக்குட்டி அம்மா

1923-ம் ஆண்டு பிறந்த பாருக்குட்டி அம்மா சபரிமலை வரவேண்டும் என முன்பே ஆசைப்பட்டாலும் தனது 100 வயதில்தான் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த்து. கடந்த சில நாள்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் தனது 100-வது வயதில் கன்னிசாமியாக சபரிமலை சென்று தரிசனம் செய்துள்ளார் பாருக்குட்டி அம்மா என்ற மூதாட்டி.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மூந்நானக்குழி சேர்ந்தவர் பாருக்குட்டி அம்மா. இவர் தனது நூறாவது வயதில் மாலையிட்டு முதன்முதலில் கன்னிசாமியாக சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளார். தனது பேரன் கிரீஷ், பேரனின் பிள்ளைகளான அம்ருதேஷ், அன்விதா, அவந்திகா என 14 பேருடன் இருமுடி கட்டி பம்பைக்கு வந்தார். அங்கிருந்து டோலி மூலம் சபரிமலை சன்னிதானம் சென்றார் பாருக்குட்டி அம்மா. மூன்று தலைமுறையைச் செர்ந்தவர்கள் ஒன்றாக ஐயப்ப சுவாமியை தரிசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னிசாமியாக பதினெட்டாம் படி ஏறிச்செல்லும் பாறுகுட்டி அம்மா

கன்னிசாமியாக பதினெட்டாம் படி ஏறிச்செல்லும் பாறுகுட்டி அம்மா

1923-ம் ஆண்டு பிறந்த பாருக்குட்டி அம்மா சபரிமலை வரவேண்டும் என முன்பே ஆசைப்பட்டாலும் நூறாவது வயதில்தான் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பாருக்குட்டி அம்மா கூறுகையில், “முன்பே சபரிமலைக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.

இனி நூறு வயதில்தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என அப்போது தீர்மானித்தேன். அந்த முடிவின்படி இப்போது சபரிமலைக்கு வந்துவிட்டேன்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பாறுகுட்டி அம்மா

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பாறுகுட்டி அம்மா

பொன்னு பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தைப் பார்த்தேன். என் பகவானைப் பார்த்தபோது கண்ணும், மனதும் நிறைந்துவிட்டன. சபரிமலைக்கு வரும் வழியில் எனக்கு நிறையபேர் உதவி செய்தார்கள். அவர்களையும் பகவன் பாதுகாக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தேன். என் பேரன் கிரீஷ்குமாரின் மனைவி ராக்கி இஸ்ரேலில் வேலை செய்கிறார். எனவே பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்” என்றார்.

 

Author