ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் திருநாள் கருடசேவை வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையில் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு, சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு சாற்றிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றன.

இதற்கு முன்னதாக 21-ம் தேதி மாலை தோமாலை சேவையில் திருப்பதியில் மூலவரான வேங்கடாசலபதிக்கு, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு, நேற்று (செப்.20) காலையிலிருந்தே ஸ்ரீஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யேக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை தொடங்கி பிற்பகலில் நிறைவுபெற்றது.

தொடர்ந்து அவை, ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவற்றைத் திருகோயிலின் ஸ்தானிகர் பெற்றுக்கொள்ள, நான்கு மாடவீதிகளில் அவை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அவை நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதிக்குக் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சார்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Also Read

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்: கோவிந்தா; கோபாலா முழக்கத்துடன் கோலாகலம்!