எஸ்.ஜே.சூர்யா: இயக்கம், நடிப்பு இரண்டிலும் மிரட்டும் இவரது பின்னணி என்ன?
- எழுதியவர்,காவியா பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி,பிபிசி தமிழுக்காக
சமீபத்தில் வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவில் சிலர் அங்கீகாரத்தைத் தேடுவார்கள், சிலர் பெயர், புகழைத் தேடுவார்கள், வெகு சிலர் மட்டுமே சினிமாவை முதலில் திறம்பட கற்க வேண்டும், காலம் கடந்தும் தன் பெயரை தலைமுறைகள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகல் பாராது, வெற்றி, தோல்வி பாராது உழைத்துக் கொண்டே இருப்பதை மட்டும் இலக்காக வைத்து ஓடிக் கொண்டிருப்பார்கள்.
மேலே சொன்ன இந்த ஃபார்முலாக்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர், கடந்த சில ஆண்டுகளாக, திரையில் தோன்றினால் மற்ற நடிகர்களைப் பார்க்கவிடாமல் தன்னை மட்டுமே கவனிக்க வைக்கும் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் எஸ். ஜே. சூர்யா.
திரையரங்கை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, திரைப்படம் எப்படி என்ற கேள்விக்கு, திரைப்படம் குறித்துப் பேசாமல், “எஸ். ஜே. சூர்யா”வின் நடிப்பு சூப்பர் எனக் கூற வைத்ததே, அவரது ஆகச் சிறந்த வெற்றி.
எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கையின் ஆரம்பக் காலம்
சம்மனசு பாண்டியன், ஆனந்தம் தம்பதியின் மகனான எஸ்.ஜே. சூர்யாவின் இயற்பெயர் சம்மனசு ஜஸ்டின் செல்வராஜ். இவரது சொந்த ஊர் சங்கரன் கோவில் பக்கத்திலுள்ள வாசுதேவ நல்லூர். இவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள்.
எஸ். ஜே. சூர்யா சொந்த ஊரில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, என்னைத் தேட வேண்டாம் எனக் கடிதம் எழுதிவிட்டு சென்னைக்கு ஓடி வந்ததாகவும், அதன் பின்னர், அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அவரே பல தொலைக்காட்சி நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
சினிமா கனவுகளில் மிதந்தவர் அதை அப்படியே விட்டுவிடாமல் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டே, சனி, ஞாயிறு விடுமுறைகளில் பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு நின்றிருக்கிறார். எங்கும் வாய்ப்புக் கிடைக்காத போதும் அவர் சோர்ந்து விடவில்லை.
கலாட்டா யுட்யூப் சேனலின் நேர்காணலில் மறைந்த சின்னத்திரை நடிகர் மாரிமுத்து எஸ்.ஜே.சூர்யா உதவி இயக்குநராய் சேர்ந்த கதையைக் கூறியிருக்கிறார்.
அதில், இயக்குநர் வசந்த் டெல்லியில் ‘ஆசை’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து நாய்க் குட்டி ஒன்றை டெல்லிக்கு ரயிலில் கொண்டு செல்ல ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார்.
அப்போது எப்படியாவது உதவி இயக்குநராகிவிட வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாய்க்குட்டியை பத்திரமாக டெல்லிக்கு கொண்டு சேர்த்து அப்படியே இயக்குநர் வசந்திடம் உதவியாளராய்ச் சேர்ந்ததாகக் கூறினார்.
இயக்குநராக திரை பயணத்தை ஆரம்பித்த எஸ்.ஜே.சூர்யா
அஜீத், சிம்ரன் நடிப்பில் ‘வாலி’ திரைப்படத்தையும், விஜய், ஜோதிகா நடிப்பில் ‘குஷி’ திரைப்படத்தையும் இயக்கி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் எஸ். ஜே. சூர்யா. தமிழ் சினிமாவின் மைல் கல் என இந்த இரு திரைப்படங்களையும் கூறலாம்.
வித்தியாசமான ஒளிப்பதிவு, இளைஞர்களை கட்டிப் போடும் காதல் காட்சிகள், இதுவரை தமிழ் சினிமா கேட்டிராத இசை என இளமை துள்ளும் திரைப்படங்களின் பட்டியலில் வாலி, குஷி இவ்விரு திரைப்படங்களையும் கூறலாம்.
‘வாலி’ திரைப்படத்தில் அஜீத் ஏற்று நடித்த இரட்டை வேடம் தமிழ் சினிமா இருக்கும் வரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல், ‘குஷி’ திரைப்படத்தில் காதலர்களுக்கு இடையிலான ஈகோ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது ட்ரீட்மெண்டாக இருந்தது.
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த காதல் திரைப்படங்களின் வரிசையில் ‘குஷி’ திரைப்படம் என்றும் முதலிடம் பிடிக்கும்.
‘குஷி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. எதிர்பார்த்தபடியே, தெலுங்கில் ‘குஷி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட், ஆனால் இந்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிகராக அறிமுகம்
இயக்குநராக ஜொலித்த எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
‘நியூ’ திரைப்படத்தை அவரே இயக்கி, ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடி சிம்ரன். ‘நியூ’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியானபோது சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’, ‘கள்வனின் காதலி’, ‘வியாபாரி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘நண்பன்’ திரைப்படத்தில் சிறிய வேடம் ஏற்றும், முழு நேர நடிகராக வலம் வந்தார். இதில், சில திரைப்படங்கள் எஸ்.ஜே.சூர்யா எதிர்பார்த்தபடி போகவில்லை. மேலும், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினார். நிறைய சறுக்கல்களையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
சினிமா இதுதான் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ரசிகர்களின் நாடித் துடிப்பை கற்பனையுலகில் சரியாக எந்தொவொரு கலைஞனும் ஒரே அளவில் கணித்து வைத்திருக்க முடியும் என்று கூற முடியாது.
அந்த வகையில், எஸ்.ஜே.சூர்யா சில திரைப்படங்களில் சறுக்கினாலும், மீண்டும் ‘இசை’ திரைப்படத்தின் மூலம் மீண்டு வந்தார். ஆனாலும், அவருக்கு சினிமா பெரிதாக கை கொடுக்கவில்லை. “வை ராஜா வை”, “யட்சகன்” உள்ளிட்ட திரைப்படங்களில் மிகச் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
தொடர் சறுக்கல்களாலும், சரியான பட வாய்ப்புகள் இல்லாததாலும் சிறிது காலம் எஸ்.ஜே.சூர்யா சினிமா வட்டாரங்களில் தென்படவில்லை. ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளும் எஸ்.ஜே.சூர்யா ஃபீல்ட் அவுட் என எழுதத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸாக அமைந்த ‘இறைவி’ திரைப்படம்
கலைஞனுக்கு அழிவே கிடையாது என்பதால், “இறைவி” திரைப்படத்தில் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், எஸ்.ஜே.சூர்யாவை மீண்டும் அழைத்து வந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவின் சினிமா ஃக்ராபில் “இறைவி” திரைப்படம் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் என்றே கூறலாம். அத்திரைப்படத்தில், முதல் திரைப்படம் ஹிட் கொடுத்துவிட்டு, இரண்டாவது திரைப்படத்தை ரிலீசுக்கு கொண்டுவரப் பாடுபடும் சினிமா இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா.
உறவுச் சிக்கல், மனைவியுடன் தகராறு, பிரச்னைகளின் காரணமாக எப்பொழுதும் குடிக்கு அடிமையான ஒரு நடுத்தர வயதுள்ள ஆணை எஸ்.ஜே.சூர்யா நம் கண்முன் கொண்டு வந்திருப்பார்.
மீண்டும் அனைத்துப் பத்திரிகைகளும் எஸ்.ஜே.சூர்யா பற்றியும், அவரது நடிப்புத் திறன் பற்றியும் புகழாரம் சூட்டத் தொடங்கின.
”இறைவி” திரைப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடித்த திரைப்படங்கள் அத்தனையும் அதிரடி ஹிட் திரைப்படங்கள்.
நடிகர்களையும் தாண்டி ஸ்கோர் செய்யும் எஸ்.ஜே.சூர்யா
இறைவி திரைப்படத்தைத் தொடர்ந்து எஸ். ஜே. சூர்யா திரையில் கதாநாயகனாகத் தோன்றினாலும் சரி, குணச்சித்திர நடிகராகத் தோன்றினாலும் சரி ரசிகர்கள் அவருக்கு அருகில் இருக்கும் நடிகர்களையெல்லாம் தாண்டி அவரை ரசித்து திரையரங்குகளில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர்.
குறிப்பாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கையே அதிர வைத்தார்.
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் நல்லவர் போல் நடித்து மக்களை ஏமாற்றும் வில்லன் கதாபாத்திரம். நுனிநாக்கு ஆங்கிலம், வில்லத்தனமான வசனத்தை சிரித்துக்கொண்டே நயவஞ்சகமாகப் பேசுவது என வில்லன் கதாபாத்திரத்திலும், தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
இப்படியாக மிரட்டலான நடிப்பில் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா, இதேவேளையில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தில் மிகவும் ஷட்டிலான வள்ளலார் பக்தராக, பயந்த சுபாவம் உள்ளவராக நடித்து குடும்பங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
அதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா ஒரு எலிக்காக பயந்து ஓடும் காட்சிகள் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.
அதைத் தொடர்ந்து, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் காமெடி, சென்ட்டிமெண்ட் என கலவையான நடிப்பில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
மாநாடு படத்தின் மூலம் உச்சம்
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த டைம் லூப் திரைப்படமான ‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகன் சிம்புவையும் தாண்டி, அவரது துறுதுறுப்பான நடிப்பாலும், கதாபாத்திரத்தை உணர்ந்து ஆக்ரோஷமாக அவர் கூறும் “வந்தான் சுட்டான் ரிப்பீட்டு” வசனம் ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
இணையம் முழுவதும் மாநாடு திரைப்பட கதாநாயகனின் வசங்னகளைவிட எஸ்.ஜே.சூர்யாவின் வசங்சனங்கள் ட்ரெண்டாகின.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடித் தீர்த்தனர். ‘தலைவரே…தலைவரே’ என அவர் பதறும் காட்சிகள் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியன.
‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
இதில், இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா காதல், காமெடி, கோபம், சண்டைக் காட்சி என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.
விஷால் தான் கதாநாயகன் என்றாலும், தனித்துவமான முக பாவனைகள், காமெடியான வசன உச்சரிப்புகள் என எஸ்.ஜே.சூர்யா ஜனரஞ்சகமாக நடித்து திரையரங்குகளில் கைதட்டல்களைப் பெற்றுவிட்டார்.
இயக்குநர், நடிகர் என எந்த வட்டத்துக்குள்ளும் எஸ்.ஜே.சூர்யாவை அடக்க முடியாது. அவர் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, கலையையும், சினிமாவையும் நேசித்து அதைத் திறம்படக் கற்று, மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் என்றே கூற முடியும்.
சவாலான திரைத்துறைக்குள் நுழைந்து இயக்குநராக வென்று காட்டி, பின்னர் நடிப்புத் துறைக்குள்ளும் காலடி எடுத்து வைத்து, அதில் அவ்வப்போது சறுக்கல்கள் வந்தாலும், அதைத் தனது சரியான முடிவுகளால் மீண்டும் வெற்றிப் பாதைக்குள் இழுத்துச் சென்று, இன்று ரசிகர்களின் மனதிலும், தமிழ் சினிமாவிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: