மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திரு நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்க இருக்கிறது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் மண்டலக்கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள்கள் நடக்கும் மண்டலக்கால பூஜைகளின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க உள்ளனர். இந்த ஆண்டுக்கான சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாளிகைபுறம் மேல்சாந்தி தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி நடந்தது.
அதில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்தியாக மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த பி.என்.மகேஷ் தேர்வாகி உள்ளார். மாளிகைபுறம் மேல்சாந்தியாக குருவாயூர், பூங்காட்டுமனயைச் சேர்ந்த பி.ஜி.முரளி நம்பூதிரி தேர்வானார். புதிய மேல்சாந்திகள் கார்த்திகை மாதம் 1-ம் தேதி (நவ.17) பொறுப்பேற்று மண்டலக் கால பூஜைகளை நடத்துகின்றனர். இவர்கள் ஓராண்டுக்கு மேல்சாந்தி பொறுப்பில் இருப்பார்கள்.
மண்டலக்கால, மகரவிளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கோடு தேவசம்போர்டு மற்றும் கேரள அரசு செய்துவருகிறது. மேலும், காவல்துறை, சுகாதாரத்துறை, மின்சார வாரியம், பேரிடர் மீட்புக்குழு என அனைத்துத் துறையினரும் சபரிமலை, பம்பா மற்றும் பக்தர்கள் இடைத்தங்கல் பகுதியான நிலக்கல் ஆகிய இடங்களில் பணிசெய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல வேண்டும். நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மண்டலக்கால, மகரவிளக்கு பூஜையின்போது ஒப்பந்ததாரர்களிடம் ஏற்பட்ட போட்டி காரணமாக ஏலக்காயில் பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி ஒருதரப்பு ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தது. முதற்கட்டமாகப் பரிசோதித்ததில் அது உண்மை என்றும் பூச்சி மருந்து அதிகமாக இருக்கிறது என்பதாகவும் முடிவு வந்தது. இதையடுத்து ஏலக்காய் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சுமார் 6.65 லட்சம் டின் அரவணைகளைப் பக்தர்களுக்கு விநியோகிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரவணை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டாவது ஆய்வில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பூச்சி மருந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதேவேளை, இந்தச் சிக்கலால் பல மாதங்களாக குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் அரவணையின் தேதி காலாவதியாகி முடிந்துவிட்டது. அந்த அரவணையை இனி பக்தர்களுக்கு விநியோகிக்க முடியாது என தேவசம்போர்டு முடிவு செய்தது.
எனவே அவற்றை அழிப்பதற்கு அனுமதி அளிக்கும்படி தேவசம்போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து குடோனில் இருக்கும் 6.65 லட்சம் டின் அரவணைகளை அழிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த 3-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதுவரை அந்த அரவணை டின்கள் அழிக்கப்படாமல் உள்ளன. அவற்றை மண்டலக்காலம் தொடங்குவதற்கு முன்பு அழிக்க அரசும், தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.