அல்-ஷிஃபா மருத்துவமனை அடியில் ரகசிய சுரங்கமா? இஸ்ரேல் கண்டுபிடித்தது என்ன?
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையிலான மோதல் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாகக் கொண்டு வந்துள்ளது.
மருத்துவமனைக்கு அடியில் சுரங்க அமைப்புகளா?
இந்நிலையில், அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸின் சுரங்கம் இருப்பதாகக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தப் புகைப்படங்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
“அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே ஹமாஸ் ஆயுதக்குழுவின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில் காஸா மருத்துவமனைக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, காஸாவின் முக்கியமான குழந்தைகள் மருத்துவமனையான அல்-ரன்டிசியா மருத்துவமனைக்கு அடியிலும் “மற்றுமொரு ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் சுரங்கத்தை” கண்டறிந்துள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அந்த சுரங்கப் பாதையின் உள்ளே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
அதோடு, இதே மருத்துவமனையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கும் காணொளி ஒன்றையும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது.
மேலும், அல்-கட்ஸ் மருத்துவமனையில் இருந்து “பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்” கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டும் புகைப்படத்தையும் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் பதிவிட்டிருந்தது.
மருத்துவமனைகளுக்கு உள்ளே இருந்தும் அதன் அடியிலிருந்தும் ஹமாஸ் குழுவினர் இயங்கி வருவதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையில், தங்கள் கூற்றை ஆதரிக்கும் உளவுத் தகவல்களும் இருப்பதாகத் தெரிவித்து வருகிறது.
ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் இந்தக் கூற்றை ஹமாஸும் மருத்துவமனைகளின் நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அல் ஷிஃபா மருத்துவமனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் தங்களது சோதனைகளைத் தொடர்ந்து வருகிறது.
கண்டெடுக்கப்பட்ட பணயக் கைதிகளின் உடல்கள்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 17) மாலை வரை, ஹமாஸ் குழுவினரால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் அந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அதில் 65 வயதான யஹுடிட் வைஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோவா மார்சியானோ இருவருடைய உடல்கள், அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இவர்களுள் நோவா மார்சியானோ உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், அவருடைய உடலை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
‘அன்பான பாட்டி’
காஸா எல்லைக்கு அருகேயுள்ள பியரி எனும் பகுதியைச் சேர்ந்த யஹுடிட் வைஸ் தன்னுடைய வீட்டிலிருந்து பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யஹுடிட் வைஸ் அந்த நோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டபோது அவர் தன்னுடைய மருத்துகளைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை என, `பிரிங் தெம் ஹோம் நவ்` (Bring Them Home Now) என்னும் குழு தெரிவித்துள்ளது. இவருடைய உடல் 16ஆம் தேதி அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள கட்டடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
யஹுடிட் வைஸின் கணவர் ஷ்மூயெல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“முழுநேரமும் அன்பான பாட்டியாக இருப்பவர்” என யஹுடிட் வைஸ் குறித்து தெரிவித்துள்ள `பிரிங் தெம் ஹோம்` இணையதளம், கலாசாரம், விளையாட்டு, பயணம், பேக்கிங் உள்ளிட்டவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என விவரித்துள்ளது.
அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
“துரதிருஷ்டவசமாக, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் யஹுடிட் கொல்லப்பட்டார். சரியான நேரத்தில் எங்களால் அவரைச் சென்றடைய முடியவில்லை,” என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். யஹுடிட் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்களை அவர் அளிக்கவில்லை.
நோவா மார்சியானா
மற்றொருவரான இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 19 வயதான நோவா மார்சியானாவின் உடல் இருக்கும் இடத்தை இஸ்ரேல் உளவு அமைப்பால் வழிநடத்தப்படும் படையினர் துல்லியமாகக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இதையடுத்து, நோவாவின் உடல் இஸ்ரேலில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹகாரி தெரிவித்தார்.
நோவாவின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பணயக் கைதிகள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தங்களால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் காஸா நகரத்திற்குள்ளேயே “பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்க அமைப்புகளுக்குள்” மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நோவா மார்சியானா எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த விவரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.
ஆனால், நவம்பர் 9 அன்று இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தான் நோவா இறந்ததாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், ஹமாஸின் இந்தக் கூற்றை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
நோவா நஹல் ஓஸ் கிபுட்ஸில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல்-காஸா எல்லை வழியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நோவா சிக்கினார்.
தாக்குதல் நடந்த அன்று காலையில் தனது மகளுடன் கடைசியாகப் பேசியதாக நோவாவின் தாயார் அடி மார்சியானா ஒரு பேட்டியில் கூறினார்.
தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அழைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் தன் மகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“துப்பாக்கிச் சூடு, அலறல் சத்தத்தை நான் கேட்கவில்லை. அரை மணிநேரம் கழித்து நான் அவளின் செல்போனுக்கு செய்தி அனுப்பினேன், ஆனால் அவள் பதில் அனுப்பவில்லை,” என அவர் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் நோவா தோன்றினார். இதை “உளவியல் பயங்கரவாதம்” என இஸ்ரேல் தெரிவித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)