ஏழு விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து: ‘திமுக சொன்னது ஒன்று, செய்வது ஒன்று’ – அதிர்ச்சியில் கிராம மக்கள்

விவசாயிகள் மீது குண்டாஸ்

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சற்று முன்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அருள் என்பவரைத் தவிர மற்ற 6 பேரின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கிராம மக்கள் கூறுவது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா என்ற இடத்தின் அருகே சிப்காட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆனால், இதற்கு மேல்மா கிராமத்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பிறகு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்து. இந்த அமைப்பு கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் சிப்காட்டிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாகப் பேரணி ஒன்றை நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து காவல் துறையினரின் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி புறப்பட்டது.

அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டபோது, போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பிறகு செய்யாறு சார் ஆட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

விவசாயிகள் மீது குண்டாஸ்

இந்த சம்பத்திற்குப் பிறகு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணியாகச் சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றிக் கூடியது என 11 வழக்குகள் போராட்டக்காரர்களின் மீது பதிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நவம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இப்படிக் கைது செய்யப்பட்ட 22 பேரில், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள் ஆறுமுகம், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையையும் அவர்களில் சிலரை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதையும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.

கல்வியாளர் வசந்தி தேவி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஹென்றி திபேன், பியுசிஎல்லின் டாக்டர் வி. சுரேஷ், சென்னை சாலிடாரிட்டி குழுவைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட சிவில் சமூகக் குழுக்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதில் அமைதியாகப் போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் பல்வேறு சிறைகளில் அடைத்ததையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

கைது நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ள கிராமத்தினர்

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் இந்தக் கைது நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ளனர். நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு இப்போது வரை அழுதுகொண்டிருக்கிறார்.

“இரவு இரண்டு மணி இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரப் பகுதியில் எனது மகன் பாலாஜி படுத்திருந்தான். திடீரென்று கூட்டமாக தடியுடன் வந்த காவல்துறையினர் வீட்டைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டு எனது மகனை இழுத்தனர்.

நான் எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கூறி இரவு 2 மணிக்கு அழைத்துச் சென்றனர். இன்று வரை என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை,” என்றார்.

‘திமுக தேர்தலுக்கு முன்பு சொன்னது ஒன்று, இப்போது செய்வது ஒன்று’

விவசாயிகள் மீது குண்டாஸ்

தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் ஒப்புதல் இன்றி எதையும் செய்ய மாட்டோம் என்றார் மு.க. ஸ்டாலின். ஆனால், இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வதோடு, அதை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள் என்கிறார் மேல்மா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான தயாளன்.

“கடந்த 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சிப்காட் அமைப்பதற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. தி.மு.க. அரசும் தொடர்ந்து அதைச் செயல்படுத்த முயல்கிறது. தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பேன் என்றும் விவசாயிகள் ஒப்புதல் இன்றி எதையும் செய்ய மாட்டோம் என்றும் கூறினார். ஆனால், எங்களுக்கு விருப்பம் இன்றியும் இதுபோன்ற செயல்கள் நடந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தப் பகுதியில் மேல்மா, அத்தி, குரும்பூர், சேத்துரை உள்ளிட்ட 11 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும். இது தொடர்பாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயன்றோம். அது நடக்கவில்லை.

பிறகு எங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அருள் என்பவரின் உதவியை நாடினோம். ஆனால் இப்போது அவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது எங்களுக்கு வேதனை தருகின்றது.

எதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி, பாளையங்கோட்டை, கடலூர், கோயமுத்தூர் என வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறார் தயாளன்.

எங்களுக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும், அதைப் பறிப்பது சரியா?

விவசாயிகள் மீது குண்டாஸ்

காந்தீய வழியில் போராடியவர்களைக் கைது செய்திருப்பது என்ன நியாயம் என்கிறார் கைது செய்யப்பட்ட மாசிலாமணியின் மனைவியான எழிலரசி.

“எங்களுக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். நன்கு விளையக்கூடிய எங்களுடைய நிலங்களை அரசு எடுத்து சிப்காட் அமைப்பதாகச் சொல்கிறது. இதை எதிர்த்து காந்திய வழியில் போராடி வந்தோம்.

இந்த நிலையில் எனது கணவரையும் வேறு பல பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் ஆறாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை,” என்கிறார் எழிலரசி.

குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல்துறையிடம் கேட்டபோது, “இந்த எட்டு பேரும் அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுபவர்கள், ஏற்கெனவே எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்களைத் தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக,” கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது தொடர்பாகப் பேச மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

“எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுவர்களில் சிலர் இந்தத் திட்டத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இரண்டு போராட்டங்களிலும் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் என்ன தவறு?” என்கிறார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருள் ஆறுமுகத்தின் சகோதரரான சௌந்தர்.

போராட்டத்தை முடக்கவே இந்தக் கைது நடவடிக்கையா?

இந்தப் போராட்டத்தை முற்றிலுமாக முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது என்கிறது அறப்போர் இயக்கம்.

“குண்டர் சட்டம் போடப்பட்ட 7 பேரில் நான்கு பேரின் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிக்குள் வருகின்றன. தங்களுடைய நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என ஜனநாயக வழியில் விவசாயிகள் போராடுகிறார்கள். அதில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளலாம்.

அதை விட்டுவிட்டு போராட்டத்தில் முன்னால் நிற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது ஏற்க முடியாதது,” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன்.

தமிழக தொழில்துறை வட்டாரங்களில் இது குறித்துக் கேட்டபோது, “இந்த விவகாரத்தில் தொழில்துறை, சிப்காட் ஆகியவை சொல்வதற்கு ஏதும் இல்லை. சிப்காட்டிற்கு நிலத்தைக் கையகப்படுத்தித் தர வேண்டியது மாவட்ட நிர்வாகம்தான். ஆகவே, இது மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை,” என்பதோடு நிறுத்திக்கொண்டனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்களில் போராடியவர்களுக்கு ஆதரவாக நின்ற தி.மு.க., இப்போது இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

விவசாயிகள் மீது குண்டாஸ்

தி.மு.க. தரப்பில் கேட்டபோது, இது குறித்துப் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

இப்போது இந்த விவகாரத்தை அ.தி.மு.கவும் கையில் எடுத்துள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அ.தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தபோது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வந்ததாலும், அந்நிலங்கள் விவசாயப் பணிகளுக்கு பயன்படக்கூடிய நிலமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கைவிட்டது.

விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.

செய்யாறு பகுதியில் ஏற்கெனவே இரண்டு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் செய்யாறு – சிப்காட் அலகு மூன்று என்ற பெயரில், இதை விரிவுபடுத்த 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் 54 அலகுகளாக பிரிக்கப்பட்டு 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் திட்டத்தை அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் நெல், கரும்பு, நிலக்கடலை போன்றவை பிரதானமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.

கூடுதல் செய்திகளை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் மாயகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

Author