அமலாக்கத்துறை அதிகாரி விரட்டிப் பிடிக்கப்பட்டது எப்படி?அண்ணாமலை கூறுவது என்ன?
திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்ததுறை அதுிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி, கடந்த நான்கு மாதங்களாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன் நாக்பூரில் பணியற்றி வந்ததும் தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அங்கீத் திவாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது உள்ள வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 51 லட்சம் கேட்டுள்ளதாகவும், அதில் ஒரு தவணையாக ரூ 20 லட்சம் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், நவம்பர் 31 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த அரசு அதிகாரியிடம் கொடுத்து அனுப்பி, அங்கீத் திவாரியிடம் கொடுக்க வைத்ததாகவும், அந்த பணத்தை அங்கீத் திவாரி பெற்றுக்கொண்டு செல்லும்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொடங்கிய சோதனை, சனிக்கிழமை காலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
விரட்டிப் பிடிக்கப்பட்டது எப்படி?
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே அங்கீத்தை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரைப் பார்த்ததும், பை-பாஸ் சாலையில் இருந்து ‘சர்வீஸ்’ சாலையில் வாகனத்தை திருப்பி தப்ப முயன்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தப்ப முயன்ற அங்கீத் திவாரியை விரட்டிப்பிடித்து, முதலில் அவரை அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி, அவர் லஞ்சமாக பெற்று வந்த ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அங்கீத் திவாரி, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா இல்லத்தில் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
அங்கீத் திவாரி லஞ்சம் வாங்கியது எப்படி?
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரின் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
அந்த அறிக்கையின்படி, புகார் கொடுத்துள்ள அரசு மருத்துவருக்கு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வாட்ஸ் அப்-ல் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும், மறுநாள் காலை விசாரணைக்காக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.
விசாரணைக்கு சென்ற அரசு மருத்துவர் மீது 2018 லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்த உத்தரவு வந்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 3 கோடி ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் மருத்துவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
ஆனால், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும், தான் சட்டத்திற்கு உட்பட்டே பணி செய்வதாக கூறியதனை அடுத்து, அப்போது ஹர்திக் என வாட்ஸ் அப்-ல் அறியப்பட்ட அங்கீத் திவகாரி, தனது உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, ரூ 51 லட்சம் வேண்டும் எனவும், அதனை நவம்பர் 1 ஆம் தேதி தயாராக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்.
பின், அக்டோபர் 31 ஆம் தேதி இரவு, மருத்துவரை தொடர்புகொண்ட அங்கீத் திவாரி, பணம் தயாராக உள்ளதா எனக்கேட்டள்ளார். பணம் தயார் என மருத்துவர் கூறியவுடன், மறுநாள் காலை அழைப்பதாக அங்கீத் திவாரி கூறியுள்ளார். மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி காலை 7.17 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, நத்தம் வழியாக மதுரைக்கு வருமாறும், வழியில் பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, மருத்துவர் நத்தம் தாண்டி, நத்தத்திலிருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் 7.46 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, மருத்துவரின் காரினை பார்த்துவிட்டதாகவும், காரினை நிறுத்துமாறும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், மருத்துவரின் காரின் முன்பக்கம் வந்து தனது காரினை நிறுத்திய அங்கீத் திவாரி, தான் கேட்ட லஞ்சப்பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது, மருத்துவர் தான் 20 லட்சம் ரூபாய் மட்டும்தான் கொண்டு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு வர் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், மருத்துவர் மீதான புகாரினை அவர் முடித்து மேல் அதிகாரிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அங்கு அந்த கோப்புகள் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மீதப்பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அங்கீத் திவாரி, அப்போது மருத்துவரிடம் இருந்த ரூ 20 லட்சத்தை கையில் பெறாமல், காரின் டிக்கியை திறந்து, அங்கே வைக்கச் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவரின் வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவு செய்துள்ளார்.
மீதப்பணத்தை கேட்டு தொடர்சியாக அழைப்பு வந்ததால், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார் மருத்துவர். அதன்அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மறுநாள் காலை, அங்கீத் திவாரியை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அமலாக்க துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை
இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தினர்.
முதலில் அனுமதி மறுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பேச்சு வார்த்தைக்குப்பின் சோதனைக்கு அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியின் அறையில் விடிய விடிய சோதனை செய்த அதிகாரிகள், அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
சோதனை நடைபெறும்போதே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தக்கூடும் என்பதால், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை இரவு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
‘அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – பாஜக தலைவர் அண்ணாமலை
அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பிரதமர் மோதியின் ஆட்சியில் ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய்விட்டன எனக் குற்றம்சாட்டினார்.
“இதுபோல வசூலாகும் லஞ்சப்பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்து செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை,” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “மோதி ஆட்சியில் ஊழல் முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிவிட்டுள்ளன,” என பதிவிட்டிருந்தார்.
அமலாக்கத்துறை அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்ப முயன்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி.
“தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிடச் சென்றுள்ளனர்.
அப்படி குற்றம்சாட்டப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி தவறு செய்யவில்லை என்றால், அவர் ஏன் போலீசாரைப் பார்த்தும் ஓட வேண்டும். நான் குற்றம்செய்யவில்லை எனக் கூறியிருக்கலாமே,” எனக் கேள்வி எழுப்பினார்.
அதேவேளையில், தவறு யார் செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. “லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
மத்திய அரசு அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்யலாமா?
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கான கையேட்டில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான நடைமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான முறைகேடு, ஊழில் உள்ளிட்ட புகார்களை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,தான் விசாரிக்க முடியும்.
ஆனால், அதுவே, மத்திய அரசு அதிகாரி மீது லஞ்சம் தொடர்பான புகாராக இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான கால அவகாசம் இல்லாதபோது, லஞ்ச ஒழிப்பத்துறையினரே நடவடிக்கையை தொடரலாம.
அந்த நடவடிக்கை, லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்யலாம். இந்த கைது நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)