ஆவின்… என்றால் அமைதிக்குப் பெயர் பெற்ற பசு. ஆனால், பாலை விற்கும் ஆவின் நிறுவனத்தில் எந்த நேரமும் லஞ்சப் புயலும்… ஊழல் சூறாவளியும் சுழன்றடித்து, ஆவின் என்கிற பெயருக்கே களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. அதனால் எப்போதும் சர்ச்சைகளும், பரபரப்புகளும் ஆவினை வட்டமடித்தபடியே இருக்கின்றன. சமீபத்தில், ‘பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு, ஊத நிற டிலைட் பால் அறிமுகப்படுத்தப்படும்’ என்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்புக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. அது ஓய்வதற்குள் பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமிக்கும், ஆவின் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் பரமசிவத்திற்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
Also Read
ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்; தினமும் 2,500 லிட்டர் பால் திருட்டு – அதிர்ச்சி கிளப்பும் வேலூர் ஆவின்!
பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி பச்சை நிற பாக்கெட் பால் நிறுத்துவது குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில், அவருக்கு எதிராக வெடிதிருக்கிறார் ஆவின் தொழிற்சங்க மாநில செயலாளர் பரமசிவம்.
ஆவின் தொழிற்சங்க மாநில செயலாளர் பரமசிவம் கூறுகையில், “சமீபத்தில் பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி ஆவின் நிறுவனத்தை பற்றியும், பால்வளத் துறை அமைச்சர் பற்றியும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதனால் ஆவின் தொழில் சங்கம் சார்பாக அதற்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆவின் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இந்த நிறுவனத்திற்கு 4 லட்சம் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பால் வழங்கி வருகின்றனர்.
Also Read
வெண்மைப் புரட்சி… சிறப்பாக அமுல்; சீரழிவில் ஆவின்!
தி,மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால் ஆவின் பால் விற்பனை அதிகரித்து, தனியார் பால் விற்பனை குறைந்தது. இதன் காரணமாகத்தான் இப்போது ஆவின் நிறுவனப் பெயரை கெடுக்க முயல்கின்றனர்.
2022-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு விற்பனை ஆன ஆவின் பால், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.130 கோடிக்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி அதிகம் ஆகும்.
இடையில் சில நாள்கள் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவினில் பணிபுரிந்துகொண்டு, அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்த அ.தி.மு.க நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் தற்போது 12 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. பொன்னுசாமி போன்றவர்கள் ஆவின் நிறுவன வளர்ச்சியை கெடுத்து, தனியார் பால் நிறுவனத்திற்கு ஏஜென்டாக செயல்படுவதால், அவர்கள் கூறும் பொய்யான கூற்றுக்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று பேசி உள்ளார்.
பரமசிவத்தின் குற்றச்சாட்டு குறித்து பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். “பரமசிவத்திற்கும் ஆவினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆவின் பணியாளர், பால் விநியோகம், பால் உற்பத்தி ஆகிய எதிலுமே தொடர்பில்லாத இவருக்கு ஆவின் தொழிற்சங்க மாநில செயலாளராக இருக்க எந்தத் தகுதியுமே கிடையாது. அவர் முழுக்க முழுக்க அமைச்சருடைய தூண்டுதலில் பேசுகிறார்.
Also Read
`அமுல் நிறுவனத்தால் கால் பதிக்க முடியாது; ஏன்னா?’ ஆவின் எம்.டி வினீத் ஐ.ஏ.எஸ் சொல்லும் காரணங்கள்!
நான் 20 வருடமாக பால் விநியோகத்தில் இருக்கிறேன். மேலும் ஆவின் பால் பற்றி நேரடி முகவர்தான் பேச வேண்டும் என்பதில்லை. ஆவின் என்பது மக்கள் சொத்து. ஆவினை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். அதனால்தான் ஆவினில் நடக்கும் முறைகேடுகளை பற்றி சுட்டிக்காட்டுகிறோம்.
ஆவினின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது என்னை விமர்சிக்கும் பரமசிவம், அம்பத்தூரிலிருக்கும் ஆவின் பால் பண்ணையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் பிரச்னை மற்றும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு பால் வாகனங்கள் வருவதைப் பற்றியெல்லாம் ஏன் பேசுவதே இல்லை” என்று சாடினார்.
Also Read
ஆவின் பச்சை பால் பாக்கெட் சர்ச்சை: `பச்சைப்பொய் சொல்கிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ்?’ – முழுப் பின்னணி
ஒரு பக்கம் அமுல் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றன. கிட்டத்தட்ட ஆவினை இல்லாமல் செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. இதற்கிடையில் கூட்டுறவு நிறுவனமான, மக்களின் பேராதரவைப் பெற்ற நிறுவனமான ஆவினைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் தமிழக அரசு முழுமையாக ஈடுபடுவது போல் தெரியவில்லை. உண்மையிலேயே ஆவினைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், திறமையாகப் பணியாற்றி கடந்த காலங்களில் ஆவினுக்கு வருவாய் சேர்த்த அதிகாரிகளை அங்கே நியமித்து மீண்டும் தூக்கி நிறுத்தலாம்.
ஆனால், அரசியல்வாதிகளுக்கு அந்த எண்ணம் இருப்பதே இல்லை. இந்த தி.மு.க அரசுதான் என்று இல்லை கடந்த கால அ.தி.மு.க ஆட்சியிலும் சரி, அதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியிலும் சரி தொடர்ந்து ஆவின் என்பது இவர்களுடைய அரசியல் பகடைக்காய்களில் ஒன்றாகவே இருக்கிறது. காரணம், அங்கே பால் பொங்குவது போல், லஞ்சப்பணம் பொங்குவதுதான். அந்த லஞ்சப் பணத்தில் குளிக்கும் ஆசையில்தான் அந்த நிறுவனத்தையே தொடர்ந்து இந்த அரசியல்வாதிகள் குட்டிச்சுவராக்கி வருகிறார்கள்.
Also Read
ஆவின் கரைந்து போவதற்கு தி.மு.க அரசே காரணமாகிவிடும்!
கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் துறையின் அமைச்சர்கள் அடிக்கடி பந்தாடப்பட்டார்கள். அதேபோல் அதிகாரிகளும் பந்தாடப்பட்டார்கள். இந்த தி.மு.க ஆட்சியிலும் இப்போது இரண்டாவதாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன் அமைச்சராக இருந்த ஆவடி நாசர், தூக்கி அடிக்கப்பட்டார். அதேபோல அதிகாரிகளும் தொடர்ந்து பந்தாடப்படுகிறார்கள். இது ஒன்றே போதும் ஆவினில் நடக்கும் ஊழல்களுக்கும் கொழிக்கும் லஞ்சத்திற்கும் சாட்சி. உண்மையிலேயே திமுக அரசு நேர்மையான அரசாக இருந்தால் ஆவினில் நடக்கும் அத்தனை முறைகேடுகளுக்கும் முடிவு கட்டி, அங்கே சர்ச்சைகளுக்கு இடமில்லாத வகையில் அனைத்தையும் சரி செய்து தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும். இதுவே தி.மு.க அரசுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.
Also Read
“பச்சை நிற ஆவின் பாக்கெட் விற்பனை தொடர வேண்டுமா..?” – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு சொல்வதென்ன?
அதைவிடுத்து, ஆவினைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசுபவர்களுக்கு எதிராக யாரையாவது தூண்டிவிட்டு, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் தொடர்ந்து சர்ச்சையாக்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. உண்மையிலேயே பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி, ஆவினுக்கு எதிராக செயல்படுகிறார், ஆவினை அழிக்கப் பார்க்கிறார் என்றால், அதற்கு ஆதாரங்கள் இருந்தால், அவர் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து லாவணி பாடி கொண்டிருந்தால், ஆவினுக்கு சமாதி கட்டியது நாங்கள்தான் என்கிற பெருமை மட்டுமே தி.மு.க-வுக்கு மிஞ்சும்.
ம்ம்ம்ம்மாமாமாாாாா….