‘தப்பு செய்தால் தப்பிக்க முடியாது…’ உண்மையை உணர்த்தும் ‘சுபிக்‌ஷா’ சுப்ரமணியன்!

சுபிக்‌ஷா...
பிரீமியம் ஸ்டோரி

News

சுபிக்‌ஷா…

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக மாற வேண்டும் என்பதில் செலுத்திய அக்கறையை நிதி நிலைமையில் செலுத்தவில்லை சுபிக்‌ஷா!

ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் என்பது பெரும்பாலும் கிடைக் காத காம்பினேஷன். இந்தியாவின் முக்கிய மான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள், இத்தகைய கல்வி நிறுவனங்களில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்த ‘சுபிக்‌ஷா’ சுப்ரமணியன், இப்போது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியாக நிற்கிறார் என்பது, பேரதிர்ச்சியே!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ‘விஷ்வபிரியா ஃபைனான்ஸ் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்னும் பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். இதனடிப்படையில், நான்கு ஃபண்டுகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான தொகையை (சுமார் ரூ.137 கோடிக்குமேல்) திரட்டினார் சுப்ரமணியன். இந்தத் தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதாகச் சொன்னார். ஆனால், அதன்படி அவர் நடக்க வில்லை. மொத்தமாக முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர். முதலீட்டுத் தொகையை போலி நிறுவனங்கள் மூலம் சுப்ரமணியன் கைமாற்றி இருக்கிறார்… முதலீட்டாளர்களை ஏமாற்றி இருக்கிறார் என்று அவர்மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படவே, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

‘தப்பு செய்தால் தப்பிக்க முடியாது...’ உண்மையை உணர்த்தும் ‘சுபிக்‌ஷா’ சுப்ரமணியன்!

சுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், 8.92 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. தொடர்புடைய நிறுவனங்களுக்கு 191.98 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்த 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 180 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

என்னதான் நடந்தது..?

ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ முடித்த பிறகு, சிட்டி வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார் சுப்ரமணியன். இரண்டே வாரங்களில் அங்கிருந்து வெளியேறி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றியவர், 1991-ம் ஆண்டு ‘விஷ்வபிரியா’ நிறுவனத்தைத் தொடங்கினார். இது ஒரு நிதிச் சேவை நிறுவனம். அடுத்ததாக, 1997-ம் ஆண்டு ‘சுபிக்‌ஷா’ என்னும் பெயரில் சங்கிலித் தொடர் ரீடெய்ல் ஸ்டோர்களைத் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில், சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் இந்தியாவில் இல்லை. அதை மனதில் வைத்துதான், அந்தச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டார் சுப்ரமணியன். 1997-ம் ஆண்டு சுபிக்‌ஷா என்ற பெயரில் ஒரே ஒரு சூப்பர் மார்க்கெட்டை தமிழகத்தில் தொடங்கினார். அடுத்த ஓராண்டில் 10 ஸ்டோர்கள்; 2000-ம் ஆண்டில் 50 ஸ்டோர்கள் என வேகமாக விரிவாக்கம் செய்தார். இதற்காக, விஷ்வபிரியா எனும் பெயரில் தான் தொடங்கிய நிதி நிறுவனத்துக்குக் கிடைத்த முதலீடுகளை, சட்டவிரோதமாக சுபிக்‌ஷா பக்கம் திருப்பிவிட்டார்.

ஸ்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கடந்து, இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஸ்டோர்களை அமைத்தார். 2007-ம் ஆண்டில் சுமார் 1,650 ஸ்டோர்கள் என விரிவடைந்தது சுபிக்‌ஷா. இதன் விரிவாக்கப் பணிகளுக்காக ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர்ஸ் நிறுவனம் முதலீடு செய்தது.

ஸ்டோர்கள் விரிவாக்கம் ஒருபக்கம் எனில், இன்னொரு பக்கம் அனைத்துப் பிரிவுகளிலும் கவனம் செலுத்தியது சுபிக்‌ஷா. காய்கறி, மளிகை, செல்போன், ஃபார்மஸி என சுபிக்‌ஷாவில் கிடைக்கும் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஆனால், லாபத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விற்பனையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டதால் தொடர்ந்து பெரிய சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்தது சுபிக்‌ஷா. நிலைமையைச் சமாளிக்க, 2007-ம் ஆண்டு சுபிக்‌ஷா சார்பில் ஐ.பி.ஓ கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு சட்டப் பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக மாற வேண்டும் என்பதில் செலுத்திய அக்கறையை, நிதி நிலையை உறுதிப்படுத்துவதில் செலுத்தவில்லை. 2008-ம் ஆண்டு இறுதியில் 14,000 பணியாளர்கள் மற்றும் 2,305 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினாலும், கடனைத் தவிர ஏதும் இல்லை என்பதுதான் சுபிக்‌ஷாவின் எதார்த்த நிலைமையாக இருந்தது.

இத்தகைய சூழலில் அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது, உலக அளவில் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. முதலீட்டுப் பற்றாக்குறை ஏற்பட்டு, புதிய முதலீட்டைத் திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தச் சூழலைச் சமாளிப்பதற் காக… வொர்க்கிங்க் கேப்பிடலுக்கு என்று இருந்த பணத்தை, நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு செலவு செய்தார் சுப்ரமணியன். அதனால் கடைகளுக்கான வாடகையைத் தர முடியவில்லை, பொருள்களை சப்ளை செய்தவர்களுக்கும் பணத்தைத் தர முடியவில்லை. இதனால் சுபிக்‌ஷா நிறுவனத்தின் செயல்பாடுகள் மொத்தமும் ஸ்தம்பிக்க ஆரம்பித்தன. நெகட்டிவ் செய்திகள் தினமும் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கான முதலீட்டுக்குத் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி உருவானதோடு, நிறுவனத்தின் அன்றாட செலவுக்குத் தேவை யான பணத்துக்கு எந்த வங்கியும் கடன் தர முன்வரவில்லை. பிரச்னையைச் சமாளிக்க முடியாமல் சிக்கிக்கொண்டார் சுப்ரமணியன்.

சுப்ரமணியன்

சுப்ரமணியன்

சுபிக்‌ஷா நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர்ஸ் வைத்திருந்த பங்குகளில் சில சதவிகிதப் பங்குகளை, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி வாங்கினார். ஆனால், வாங்கிய பிறகுதான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தார் பிரேம்ஜி. அதாவது, சுப்ரமணியன், நிறுவனம் நிதி மோசடிகளில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. அதனால், சுபிக்‌ஷாவே மொத்தமாக முடங்கிப்போனதும் தெரிய வந்தது. இதையடுத்து, சுப்ரமணியனுக்கும் அசிம் பிரேம்ஜிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. சுப்ரமணியன் மீது ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கைத் தொடுத்தார் அசிம் பிரேம்ஜி. இந்த வழக்கில் சுப்ரமணியனுக்கு சாதகமாக எதும் நடக்க வில்லை. நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘‘சுபிக்‌ஷாவில் முதலீடு செய்தது என்னுடைய மிகப் பெரிய தவறு’’ என அசிம் பிரேம்ஜி ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சுபிக்‌ஷாவில் பற்பல சிக்கல்கள்.

‘சந்தையின் தேவையைவிட கூடுதல் எண்ணிக்கையில் ஸ்டோர் கள் திறக்கப்பட்டது, தங்களுடைய மார்ஜினைக் குறைத்துக்கொண்டு பொருள்களை விற்பனை செய்தது, நிர்வாகம் செய்ய முடியாத அளவுக்கு விரிவாக்கம் செய்தது எனப் பல தவறுகளை ஒரே சமயத்தில் செய்திருக்கத் தேவையில்லை’ என ஆடிட்டிங் நிறுவனமான எர்னஸ்ட் அண்ட் யங் குறிப்பிட்டிருந்தது.

விரிவாக்கம் என்கிற பெயரில் செய்த பல தவறுகளாலும், சந்தை சூழ்நிலைகளாலும் தொழில் என்னும் பரமபதத்தில் பாம்பின் பார்வை மட்டுமே சுப்ரமணியனுக்குக் ‌கிடைத்தது. ஏணிப் படிக்கட்டுகளைத் தொடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எம்.பி.ஏ மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர், இப்போது கேஸ் ஸ்டடியாக மாறியிருக்கிறார்.

சாலைகளில் நாம் வேகமாகச் செல்லும்போது வேகத்தடைகள் வரும். அவை நம்மை சமநிலைக்குக் கொண்டுவரும்; பிறகு மீண்டும் வேகமாகச் செல்வோம். ஆனால், வேகத்தடை இல்லாத சாலையில் பிரேக் இல்லாமல் வண்டியை ஓட்டியிருக்கிறார் சுப்ரமணியன்.

சுபிக்‌ஷாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்… பிசினஸ் செய்யத் திட்டமிடும் அனைவரும் மனதில் பதிய வைக்க வேண்டிய பாடங்களே!

Author