மத்திய பிரதேச தேர்தல்: சிவராஜ் சிங் சௌகான் வெற்றிக்கு வித்திட்ட ‘அன்பான சகோதரி’ திட்டம்
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் போக்கு, காங்கிரசுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து வரும் நிலையில், பாஜகவிற்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது.
2018 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடும் போட்டியைத் தந்தது. அதில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் பெற்றிருந்தன.
அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்திருந்தாலும், அது வெறும் 20 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
இந்நிலையில் இந்த முறை சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி பலத்த போட்டியைத் தருமென்றும், பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் தற்போது பாஜக 150 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் காங்கிரஸ் 70 தொகுதிகள் என்ற நிலையில் சுருங்கியுள்ளது.
முன்னதாக வந்த கருத்துக் கணிப்புகளில்கூட, காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் போக்கு முற்றிலும் அதற்கு எதிரானதாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸை தாண்டி பாஜக உறுதியான முன்னிலையைப் பெறக் காரணம் என்ன?
தற்போதைய நிலைக்குக் காரணமான 5 காரணங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1) சிவராஜ் சிங் சௌகானின் பிரபலம்
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அந்த மாநிலத்தில் மாமா என்று அறியப்படும் பிரபலமான அரசியல் தலைவர். பாஜக அவரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படாத நிலையிலும்கூட, தேர்தல் பிரசாரத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு சுமையையும் தனது முதுகில் ஏற்றிக் கொண்டார் அவர்.
மாநிலத்தில் ஒரு தாராளவாத தலைவர் என்ற அடையாளம் சிவராஜ் சிங் சௌகானுக்கு உள்ளது. மேலும், மக்களுடன் அவர் பழகும் திறன் மாநிலத்தில் அவருக்கொரு சிறப்பு அங்கீகாரத்தை அளித்துள்ளது.
பாஜகவின் வெற்றியில் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் முக்கியப் பங்கை வகித்துள்ளது. சிவராஜ் சிங் சௌகானும் மத்திய பிரதேசத்தில் ஓபிசி பிரிவை சேர்ந்த கிரர் என்ற சமூகத்தை சேர்ந்தவராவார்.
டிசம்பர் 8, 2003ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய பிரதேசத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வரலாற்றில் முதல்முறையாக பாஜக மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமா பாரதியை முதலமைச்சராக நியமித்தது. இதன் மூலம் அக்கட்சி பெரும் பலனை அடைந்தது. காரணம் அதற்கு முன்பும் சரி அல்லது இது வரையிலும் சரி மத்திய பிரதேச காங்கிரசில் பெரிய ஓபிசி தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு, அரசியல் ஆய்வாளர்களான தாரிக் தாசில் மற்றும் ரொனால்ட் ஹெர்ரிங் ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், மத்திய பிரதேசத்தின் பழங்குடியினப் பகுதிகளில் ஆர்எஸ்எஸ்-இன் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
பழங்குடியினர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ் எப்படி வேர் வரை காலூன்றியுள்ளது என்பதைப் பேசியது அந்த ஆய்வு.
தாரிக் தாசில் மற்றும் ரொனால்ட் ஹெர்ரிங் ஆய்வறிக்கையின்படி, இது ஆர்.எஸ்.எஸ்-இன் பலம் அதிகரிக்க உதவியது மட்டுமின்றி, இந்து அடையாளம் பெருகவும் வழி செய்துள்ளது. கடந்த மூன்று தேர்தல்களிலும் பழங்குடியினர் பகுதிகளில் பாஜக பெருவெற்றி பெற்று வருகிறது.
சிவராஜ் சிங் சௌகானின் அரசியல் வாழ்க்கை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்து தொடங்கியது.
அவர் 1988ஆம் ஆண்டு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராகப் பதவியேற்றார். அதன் பின்னர் முதன்முறையாக 1990ஆம் ஆண்டு புத்னி தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டார். அந்தத் தொகுதி முழுவதும் பாதயாத்திரை நடத்தி தனது முதல் தேர்தலிலேயே வெற்றியைப் பெற்றார் சௌகான். அப்போது அவருக்கு வயது வெறும் 31 மட்டுமே.
கடந்த 1991ஆம் ஆண்டு 10வது மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாயி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த லக்னௌ மற்றொன்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த விதிஷா.
இரண்டு இடங்களிலும் அவர் வெற்றியைப் பெற்றார். அப்போது லக்னௌவை தேர்வு செய்துவிட்டு, விதிஷாவில் இருந்து வெளியேறினார். இதனால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் சிவ்ராஜ் சிங் சௌகானை போட்டியிட வைத்தார் சுந்தர்லால் பத்வா. சௌகானும் தன்னுடைய முதல் தேர்தலிலேயே வென்று மக்களவைக்குச் சென்றார்.
2. அன்பான சகோதரி திட்டம் (லாட்லி பெஹன் யோஜனா)
சிவ்ராஜ் சிங் சௌஹானின் அரசு பல பிரபலமான திட்டங்களுக்கும் பெயர் போனது. இவரது அரசில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரு லட்சம் பணம் வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை அந்தப் பெண் குழந்தை 18 வயதாகும்போது பெற்றுக்கொள்ள முடியும்.
ஏழை எளிய குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் இறுதிச் சடங்குகளைச் செய்ய 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இந்த அரசு பலருக்கும் பொது திருமணத் திட்டங்கள் வாயிலாக அரசு செலவில் திருமணத்தை நடத்தி வைக்கின்றது.
அரசின் இதுபோன்ற திட்டங்கள் பழங்குடி மற்றும் தலித் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
இதைத் தாண்டி, சிவ்ராஜ் அரசின் லாட்லி பெஹன் யோஜனா திட்டமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தத் திட்டம் பாஜகவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 23 – 60 வயது வரை உள்ள 1 கோடியே 25 லட்சம் பெண்களுக்கு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் மார்ச் மாதமே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை முழுமையாகச் செயல்படுத்த மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில், மாநிலத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் திறப்பது மற்றும் திட்டத்தில் பதிவு செய்யும் செயல்முறை நடைபெற்று வந்தது.
3) சிந்தியாவின் பாத்திரம்
கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் கிளாவியர்-சம்பால் பிராந்தியத்தில் மொத்தமுள்ள 34 இடங்களில் 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது காங்கிரஸ் கட்சி.
ஆனால் 2020ஆம் ஆண்டில், ஜோதிராதித்ய சிந்தியா கமல்நாத்தின் அரசைக் கவிழ்த்தபோது, காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
அதற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த 22 பேரில் 16 பேர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றனர்.
இந்நிலையில் இந்த முறையும் சிந்தியாவின் விசுவாசிகளான அந்த 16 பேருக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த இடைத்தேர்தலில் தோற்கடிக்கப் பட்டவர்களுக்கும்கூட சிந்தியா இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பைப் பெற்று தந்துள்ளார். இதனால் இம்முறையும்கூட இந்தப் பகுதியில் பாஜக முன்னிலை பெறும் எனத் தெரிகிறது.
4) காங்கிரஸ் உயர்சாதி தலைவர்களின் ஆதிக்கம்
போரின்போது, எதிராளியின் பலவீனமும்கூட உங்கள் பெரும் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியது. இந்த முறையும், காங்கிரஸ் தேர்தல் பொறுப்பை கமல்நாத்துக்கே அளித்தது.
இதற்கு முன்பு, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போதெல்லாம், அதிகாரம் உயர் சாதித் தலைவர்களின் கைகளிலேயே இருந்தது. அர்ஜுன் சிங், திக்விஜய் சிங், கமல்நாத் என மூவருமே பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.
இந்நிலையில் 2003ஆம் ஆண்டு உமா பாரதியை முதல்வராக்கியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பதவி அளித்த கட்சி என்று பெருமையைப் பெற்றது பாஜக. சிவராஜ் சிங் சௌகானும்கூட ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுபாஷ் யாதவை 1993ஆம் ஆண்டு முதல்வராக்கும் வாய்ப்பைப் பெற்றது காங்கிரஸ். ஆனால், அது திக் விஜய் சிங்கையே முதல்வராக்கியது.
மத்திய பிரதேசத்தை 42 ஆண்டுகளாக ஆளும் வாய்ப்பைப் பெற்றது காங்கிரஸ். இந்த 42 ஆண்டுகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்தனர். மீதி 18 ஆண்டுகள் தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மூன்று ஆண்டுகள் பனியா(பிரகாஷ் சந்திர சேதி) சமூகத்தைச் சேர்ந்தவரும் ஆட்சி செய்துள்ளனர். அதாவது 42 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் உயர் சாதியினர் மட்டுமே அதிகாரத்தில் இருந்துள்ளனர்.
மதிப்பீட்டின்படி, மத்திய பிரதேசத்தில் வெறும் 10% மட்டுமே உயர் சாதி மக்கள், மீதமுள்ளவர்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
5) கமல்நாத், திக்விஜய் சிங் – இரு வேறு துருவங்கள்
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி வெவ்வேறு துருவங்களாகப் பிளவடைந்துள்ளது. முன்னதாக அது ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங்கின் முகாம்களாக இருந்தன.
சிந்தியா காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு, அது கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங்கின் முகாம்களாக மாற்றம் பெற்றது. தொகுதி ஒதுக்குதலின்போது, இந்த இரு தலைவர்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தது.
அப்போது திக்விஜய் சிங் மற்றும் அவரது மகன் ஜெய்வர்தன் சிங் ஆகியோரின் ஆடைகளைக் கிழிக்குமாறு கமல்நாத் கட்சித் தொண்டர்களிடம் கூறிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
ஜெயவர்தன் சிங் தனது பாரம்பரிய தொகுதியான ரகோகரில் காங்கிரஸ் வேட்பாளரும் ஆவர்.
குறிப்பிட்ட அந்த வீடியோவில், தொகுதிகள் விநியோகத்தில் திக்விஜய் சிங்கின் பாத்திரம் குறித்து கமல்நாத் பேசுவது பதிவாகியிருந்தது. இந்தத் தொகுதி விநியோகத்தில் இரு துருவங்களின் வேறுபாட்டால் வரும் விளைவுகளை காங்கிரஸும் அனுபவிக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)