வட மாநிலங்கள் மீண்டும் நரேந்திர மோதிக்கு வாக்களித்தது ஏன்? தென்மாநிலங்கள் தனித்து நிற்கின்றனவா?

மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனை வடக்கு – தெற்கு மாநிலங்களின் பார்வையில் உள்ள பிளவாகப் பார்க்க முடியுமா?

2024ஆம் ஆண்டு மே மாதம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என நாடு முழுவதுமே எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது முடிவுகள் வெளிவந்துள்ள நான்கு மாநிலங்களில் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இந்த நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கும் பல்வேறுவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை, மத்தியப் பிரதேசத்தில் கூட்டணிக் கட்சியை அரவணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது, சட்டீஸ்கரில் ஆதிவாசிகளின் பிரச்சனைகளுக்குக் காங்கிரஸ் காதுகொடுக்கவில்லை போன்ற விளக்கங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்தல்கள் நடந்த தருணத்தில், வேறொரு முக்கியமான அரசியல் நிகழ்வும் நடந்தது. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்த தினத்தன்று, நவம்பர் 7ஆம் தேதியன்று தான் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டது பிஹார் மாநில அரசு. இதற்குப் பிறகு, ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை ஒரு நாடு தழுவிய விவாதமாக மாற்றியது காங்கிரஸ். பல மாநிலங்களில் இருந்தும் இதற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

பாஜக -காங்கிரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாதிவாரி கணக்கெடுப்பு – சித்தரிப்புப் படம்

தாக்கத்தை ஏற்படுத்தாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை

பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் இதற்கான கோரிக்கைகளை எழுப்பின. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இது ஒரு முக்கியப் புள்ளியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதற்கேற்றபடி மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய காங்கிரசுக்கு இது சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜ.க. பக்கம் திரள்வதைத் தடுக்க இது உதவும் என்றும் கருதப்பட்டது.

ஆனால், முடிவுகள் வேறு பதிலை அளித்திருக்கின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் அளித்தது. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வழக்கமான வாக்குறுதிகள் தவிர, இலவச மின்சாரம், பெண்களுக்கு 1,500 ரூபாய் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் ஆகியவற்றை முன்வைத்தது. இருந்தபோதும் பா.ஜ.கவே வெற்றிபெற்றிருக்கிறது.

அதேபோல, சட்டீஸ்கரில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, பெண்கள் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் (இந்த வாக்குறுதியை பா.ஜ.கவும் அளித்தது) போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்வைத்தது. அங்கேயும் பா.ஜ.கவே வென்றிருக்கிறது. ஆகவே, தேர்தல் வாக்குறுதிகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், 3 வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.கவும் தென்னிந்திய மாநிலம் ஒன்றில் காங்கிரசும் வெற்றிபெற்றிருப்பதைவைத்து, இந்திய மக்களின் மன நிலையிலேயே வடக்கு – தெற்கு என்ற பிளவு காணப்படுவதாக சிலர் கருதுகிறார்கள்.

வட இந்தியா - தென் இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பின்தங்கியுள்ள வட இந்தியா

பங்களா போக்கோ இயக்கத்தின் பொதுச் செயலாளரான கார்கா சாட்டர்ஜி, இந்த முடிவுகளைப் பற்றிச் சொல்லும்போது “இந்திய தேசிய காங்கிரஸ் தென்னிந்திய காங்கிரசாகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஹிந்தி ஜனதா கட்சியாகிவிட்டது. இந்திய ஒன்றியத்தின் அரசியலில் மிகப் பெரிய பிளவு நடந்துகொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தில் ஒருவர் கற்பனை செய்வதைவிட பல விஷயங்களை இது மாற்றும்” என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

வேறு சிலரும் இந்த வடக்கு – தெற்கு பிளவு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

“தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில்கூட பா.ஜ.க. முதல்வர் இல்லை. வட இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் தவிர ஒரு மாநிலத்தில்கூட காங்கிரஸ் முதலமைச்சர் இல்லை. இப்படியாக இரு பகுதிகளும் முற்றிலும் தனித்தனியாக இருக்கின்றன. வட இந்தியா இப்போதுதான் தென்னிந்தியா எடுத்த சில முயற்சிகளை யோசிக்கவே ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் இப்போதுதான் உரிமைத் தொகை போன்றவற்றைப் பேசுகிறார்கள். தென்னிந்தியாவில் இதற்கு 100 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. இப்படியிருக்கும்போது இரு தரப்பினரின் சிந்தனையுமே வேறுவேறாகத்தான் இருக்கும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் வியூகத்தில் தவறியதா காங்கிரஸ்?

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது சரியான கருத்துதான் என்கிறார் தில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரியாளரான வி.எஸ். சந்திரசேகர்.

“வட இந்தியாவில் வலுவாக உள்ள பா.ஜ.க., தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர எங்குமே இல்லை. தவிர, இந்துத்துவத்திற்கு வட இந்தியாவில் ஒரு வரவேற்பு இருக்கிறது. அதை மிகச் சிறப்பாக அக்கட்சி பயன்படுத்திக்கொள்கிறது.” என்கிறார் வி.எஸ். சந்திரசேகர்.

1977ஆம் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவில் தேர்தல் அரசியல் ஒரு சுற்றை முடித்திருக்கிறது.

“1977ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தன. வட இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஜனதா கட்சிக் கூட்டணிக்கு வாக்களித்தன. நெருக்கடி நிலை என்ற பெயரில் மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த கொடுமைகளுக்கு எதிராக வட இந்திய மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், தென்னிந்திய மாநிலங்களை எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தில் ஸ்நேகலதா ரெட்டி, லாரன்ஸ் ஃபெர்ணான்டஸ், கேரளாவில் ராஜன் விவகாரம் ஆகியவற்றைவிட்டுவிட்டால், நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. ஆகையால் முடிவுகள் அப்படி வெளிவந்தன” என்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்த்த பத்திரிகையாளரான இம்ரான் குரேஷி.

ஆனாலும் இந்த இரண்டு காலகட்டத்தையும் அப்படியே ஒப்பிட்டுவிட முடியாது என்கிறார் அவர். “இப்போது தேர்தலைச் சந்தித்த வட இந்திய மாநிலங்கள் மூன்றிலும் காங்கிரஸ் என்ற கட்டமைப்பு மிக வலுவாக இருக்கிறது. இருந்தபோதும் தேர்தல் வியூகத்தை வகிப்பதில் கட்சி தவறிவிட்டது. தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானாவில் அதைச் சிறப்பாகச் செய்தது. அதுதான் முக்கியமான வித்தியாசம்” என்கிறார் இம்ரான் குரேஷி.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN

காங்கிரஸை புரிந்துகொள்வதில் சிக்கல்

தவிர, வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் மனித வளக் குறியீடுகளில் மிகவும் மேம்பட்டவை என்பதும் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கை வகிக்கும் என்கிறார் அவர்.

இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து வட இந்திய மாநிலங்களின் கட்சியாக பாரதீய ஜனதா கட்சியையும் தென்னிந்திய மாநிலங்களின் கட்சியாக காங்கிரசையும் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா தவிர, பிற மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு கிடையாது.

ஆனால், காங்கிரசைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அக்கட்சியே ஆட்சியில் இருக்கிறது. ஜார்க்கண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பிஹாரில் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது.

தற்போது தேர்தலைச் சந்தித்த வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலுமே பிரதான எதிர்க் கட்சியாகியிருப்பதோடு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. சட்டீஸ்கரில் சுமார் 42 சதவீத வாக்குகளையும் மத்தியப் பிரதேசத்தில் 40 சதவீத வாக்குகளையும் ராஜஸ்தானில் 39 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் பெற்றிருக்கிறது.

ஹரியானா, பஞ்சாப், குஜராத், உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரசே இருக்கிறது. ஆகவே, பா.ஜ.கவை முழுக்க முழுக்க வட இந்தியக் கட்சியாகவும் காங்கிரசை முழுக்க முழுக்க தென் மாநிலங்களுக்கான கட்சியாகவும் புரிந்துகொள்வது சிக்கலானதுதான். இருந்தபோதும் வாக்காளர்களின் மன நிலையில் உள்ள பிளவை இந்தத்தேர்தலை வைத்துப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“இதில் அடிப்படையான விஷயம் என்னவெனில் தென்னிந்தியாவில் அந்தந்த தொகுதிக்கு ஏற்றபடி சிந்திக்கிறார்கள். வட இந்திய வாக்காளர்கள் அதிபர் முறை தேர்தலுக்கான மன நிலையில் எல்லாத் தேர்தல்களையுமே எதிர்கொள்கிறார்கள். பிரதமர் மோதி வட இந்தியாவில் அந்த வகையில்தான் முன்னிறுத்தப்படுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி Vs மற்றொருவர் என்றுதான் பா.ஜ.க. முன்னிறுத்துகிறது. வட இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் ஒரு குறியீட்டை முன்னிறுத்துகிறார்கள். அந்தக் குறியீடாக பா.ஜ.க. இருக்கிறது. அதனால்தான் ஒரே நாளில் ஜம்மு – காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதோ, சிஏஏ விவகாரமோ, பண மதிப்பிழப்பு நடவடிக்கையோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு காரணம் மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குறியீடுதான். ஆகவே மையப்படுத்தப்பட்ட ஒரு அதிகார மையத்தை தேர்வுசெய்யும் வாக்காளர்கள் VS பரவலாக்கப்பட்ட அதிகார மையங்களைத் தேர்வுசெய்யும் வாக்காளர்கள் என்பதாக தேர்தல் மாறிவிட்டது” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பாஜக - காங்கிரஸ்

பட மூலாதாரம்,REUTERS/ANUVAR HASARIKA

வடக்கு – தெற்கு என்பது சரியான பார்வையா?

ஆனால், இந்த தேர்தல் முடிவுகளை வடக்கு – தெற்கு என்று புரிந்துகொள்வது சரியான பார்வை அல்ல என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.

“இதுபோல ஒரு ஒப்பீட்டைச் செய்யவே முடியாது. காரணம், வட இந்தியாவில் காங்கிரசும் பா.ஜ.கவும் இருக்கின்றன. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு கிடையாது. அப்படியிருக்கும்போது இரு பகுதிகளையும் எப்படி ஒப்பிட முடியும்?” என்கிறார் மாத்ரு பூமி செய்திச் சேனலின் மூத்த எடிட்டரான பசந்த்.

பா.ஜ.க. 1980களில் ஆரம்பித்து வட இந்தியாவை பிடித்துவிட்டதாக புரிந்துகொள்ளக்கூடாது என்கிறார் அவர். “பாரதீய ஜனதா கட்சிக்கு முன்பாக 1951லிருந்தே பாரதீய ஜன சங்கம் செயல்பட்டு வந்தது. அதற்கு அங்கே ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. தென்னிந்தியாவில் பிராந்தியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம். கேரளாவில் பிராந்தியக் கட்சிகள் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினர் 43 சதவீதமாக இருக்கிறார்கள். இந்தக் காரணங்களால்தான் பா.ஜ.க. இப்பகுதியில் பலவீனமாக இருக்கிறது. வடக்கு – தெற்கு பிளவாகப் பார்க்க முடியாது” என்கிறார் பசந்த்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author