நெப்போலியனின் முதல் மனைவி ஜோசபின் போனபார்ட்டின் அறியப்படாத வாழ்க்கை
- எழுதியவர்,அலிசியா ஹெர்னாண்டஸ்
- பதவி,பிபிசி நியூஸ் உலகம்
“பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்”
நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை.
இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம்.
அவருடைய பெயருடன் நெருங்கிய உறவுடைய பெயர் ஒன்று இருந்தால், அது அவரது முதல் மனைவி ஜோசபினின் பெயராகத் தான் இருக்க வேண்டும். அவரால் நெப்போலியனுக்கு ஒரு வாரிசைப் பெற்றுத்தர முடியாது என்று தெரிந்ததும் அவர்கள் பிரிந்துவிட்டாலும், அவர்களின் பந்தம் அவருடைய வாழ்க்கை முழுவதும் நிலைத்து நின்றது.
ஆனால் கரீபியன் பகுதியில் பிறந்த இந்த பிரெஞ்சு கிரியோலுக்கு வரலாறு இரக்கம் காட்டவில்லை.
பொதுவாக, அவர் படிக்காதவர், அற்பமானவர், வீணானவர் என்று அழைக்கப்படுகிறார். அவரது கொந்தளிப்பான பாலியல் பசியை முன்னிலைப்படுத்தித்தான் அனைவரும் பேசுகின்றனர். இந்த குணாதிசயங்களில் சில உண்மையானவை என்றாலும், மற்றவை அவரது வாழ்க்கையின் ஒரு பகுதிக்கு மட்டுமே உண்மையானவை அல்லது அவரது கருப்பு பக்கத்துக்குத் தொடர்புடையவையாக இருக்கின்றன.
ஆனால் ஜோசபினின் வாழ்க்கை ஒரு நிலையான மறு கண்டுபிடிப்பாக உள்ளது. “சாதாரண” பெண் என்ற நிலையிலிருந்து பிரான்சின் பேரரசியாக அவர் மாறியது முக்கியத்துவம் பெறுகிறது.
உலகம் அவரை ஜோசபின் போனபார்ட் என்று அறிந்திருந்தாலும், அவர் ஜூன் 1763 இல் கரீபியன் கடலின் அண்டிலிஸில் உள்ள பிரெஞ்சு பிரதேசமான மார்டினிக் தீவில் மேரி ஜோசப் ரோஸ் டாஷர் டி லா பேஜரி என்ற பெண்ணாகத் தான் வளர்ந்து வந்தார்.
பிரபுத்துவ வம்சாவளியைச் சேர்ந்த பெரிய நில உரிமையாளர்களுக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் இருந்த அவருடைய வீட்டில் அவரை ரோஸ் அல்லது யெயெட்டே என்று அனைவரும் அழைத்தனர். நெப்போலியன் தான் அவருக்கு ஜோசபின் என்ற பெயரை வைத்தார்.
“அவரை விரும்பிய மற்றவர்கள் அவரை ரோசா என்று அழைத்ததை அவரால் தாங்க முடியவில்லை என்று அவர் நெப்போலியனிடம் தெரிவித்தார்” என 18 ஆம் நூற்றாண்டு குறித்து நிபுணத்துவம் பெற்ற மற்றும் அவருடைய சுயசரிதையை எழுதிய பத்திரிகையாளர் ஈவா மரியா மார்கோஸ் கூறுகிறார். “அப்போது அவர் சாதாரணமான பெண்ணாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஜோசபின் போனபார்ட் ஒரு புத்திசாலியாகவும் திகழ்ந்தார்.”
அவருக்கு விஸ்கவுண்ட் ராணுவத்தில் பணியாற்றிய அலெக்சாண்டர் டி பியூஹர்னாய்ஸ் என்பவருடன் ஏற்கெனவே திருமணமான நிலையில், நெப்போலியனுடன் இணைந்து பயணிக்க, அவர் இன்னும் ஒரு திருமணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 1780 நடைபெற்ற முதல் திருமணத்தின் போது அவருக்கு 17 வயது தான் ஆகியிருந்தது.
ரோஸின் கணவர் அலெஜான்ட்ரோ அவருக்கு எந்த வித உதவியையும் செய்யாத போதும், அவருடைய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காக இருந்தார்.
வெர்சாய்ஸில் பணியாற்றிய அவரது தந்தை அவரிடம் விதைத்த ஒரு கனவுடன் ரோஸ் பிரான்சுக்கு வந்தார் என்று கூறுகிறார் ஈவா மரியா மார்கோஸ்
ஆனால் உண்மை என்னவென்றால், அவர், அப்படி வளர்க்கப்பட்ட ஒரு “சாதாரண” பெண் அல்ல. அவர் எதிர்பார்க்கும் வாழ்க்கைக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு அவர் இருக்கவில்லை.
“அவரது கணவர் அலெஜான்ட்ரோ வெளியில் அழகாக இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டார். ஆனால் பெண்களுக்கு அழகு மட்டும் முக்கியமில்லை என்றும், அவர் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட காலம் அது.” என்கிறார் மார்கோஸ்.
இருப்பினும் புத்திசாலித்தனத்தை எதிர்பார்த்த அவரது கணவர் அலெஜாண்ட்ரோ அவரை வெறுக்கிறார்.
முதலில் அவரை வீட்டில் மறைத்து வைத்து, அவருக்குக் கற்பிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார். ஆனால் ரோஸ் எதையும் கற்காததால் ஆசிரியர்கள் மிகவும் சலிப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருந்திருக்க வேண்டும்.
எனவே அலெஜான்ட்ரோ அவரை வெறுக்கத் தொடங்கி, அவரை நிராகரித்தார்.
“மகள் பிறந்தவுடன் செலவுக்குப் பணம் இல்லாமல், 2 குழந்தைகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது,” என்று மார்கோஸ் விளக்குகிறார்.
1783 ஆம் ஆண்டு ரோஸுக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதுதான் அவருடைய உண்மையான புரட்சி தொடங்குகிறது.
ரோஸ் ஒன்றும் இல்லாமல் ஒரே இரவில் தெருவில் விடப்பட்டார் என்பதல்ல உண்மை. இது போன்ற நேரத்தில் அவருக்கு உதவும் வசதிகளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை மறுக்கமுடியாது.
அவர் தனது குழந்தைகளுடன் பாரிஸில் உள்ள பென்டிமாண்ட் அபேயில் 6 அறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்ட கட்டடத்தில் ஒரு அத்தையின் நிதி உதவியுடன் வசிக்கத் தொடங்கினார்.
துறவற விதிகளால் நிர்வகிக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் இந்த இடம் பெண்களுக்கு ஒரு வகையான வசிப்பிடமாக இருந்தது. முன்னாள் மன்னர்களின் காதலிகள், திருமணமாகாமல் கர்ப்பமடைந்து அதை மறைப்பதற்காகத் தவித்த பெண்கள், குடும்ப கவுரவம் கருதி பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட மகள்கள் என அங்கிருந்த பெண்களுடன் ரோசாவும் இணைந்து கொண்டார்.
“இந்தப் பெண்கள் ரோசாவிடம் தங்கள் கதைகளைச் சொன்னார்கள். அவர்கள் ரோசாவை முரட்டுத்தனமான முத்துவைப் போல பார்த்தார்கள். மேலும் அவர்கள் ஒரு உயர்ந்த சமுதாயத்தின் பெண்ணாக எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருக்குக் கற்பித்தார்கள். மேலும் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு கண்களை எப்படி அழகுபடுத்திக்கொள்வது, எப்படி நடப்பது, பேசுவது, நடனமாடுவது என்பது வரை ரோசாவுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது,” என மார்கோஸ் கூறுகிறார்.
அவர் இரண்டு வருடங்கள் அங்கு செலவிடுகிறார். மேலும் பிரெஞ்சு உயர் சமூகத்தில் மீண்டும் வெளியே செல்வதற்கான பயிற்சியைத் தவிர, அந்தக் கால பாரிஸில் பல பெண்கள் செய்யாத ஒன்றைச் செய்வதற்கான உந்துதலை இந்த வாழ்க்கை அவருக்கு அளிக்கிறது. கணவரை எதிர்க்கும் தன்மை தான் அது.
அவரை நிராகரிக்க, அலெஜான்ட்ரோ முதலில் அண்டிலிஸிடமிருந்து ஒரு அடிமையை விலைக்கு வாங்கி பொய் சாட்சி சொல்ல ஏற்பாடு செய்கிறார். அவர் திருமணம் செய்வதற்கு முன்பு பல காதலர்களை வைத்திருந்ததாக அந்த அடிமை சாட்சியம் அளிக்கிறார். அதன் அடிப்படையில், அவரது தற்போதைய திருமணம் முடிவுக்கு வந்தால், அவள் தனது குடும்பப்பெயர், விஸ்கவுண்டஸ் என்ற பட்டம், அவளுடைய குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களை இழக்கநேரிடும்.
மன்னரின் வழக்கறிஞரிடம் புகாரளிக்க ரோசா சென்ற போது, அந்த வழக்கறிஞர் இப்படிக் கூறியதாக எவா மரியா மார்கோஸ் தெரிவிக்கிறார்:
“நான் ஒரு கண்கவர் இளம் பெண்ணை சந்தித்திருக்கிறேன். வித்தியாசமும் நேர்த்தியும் கொண்ட ஒரு பெண்ணாக அவர் இருக்கிறார். சரியான நடை, நிறைய அழகு மற்றும் மிகவும் இனிமையான குரலை அவர் பெற்றிருக்கிறார்.”
அந்த வழக்கில் அவர் வெற்றி பெறுகிறார். மேலும் ரோசா தனது விஸ்கவுண்டஸ் பட்டம், உடைமைகள் மற்றும் அவரது குழந்தை வைத்துக் கொள்ளும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்கிறார்.
அங்கிருந்து அவர் பிரான்ஸ் திரும்பி செல்வாக்கு பெறத் தொடங்கினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (1789), பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதத்தின் ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ரோபஸ்பியர் தலைமையில் நடந்த அந்தப் புரட்சியின் போது, குடியரசிற்கு எதிராகச் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் அனைவரும் துன்புறுத்தப்பட்டனர்.
பயங்கரவாதக் காலத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள், பெரும்பாலும் தலைதுண்டிக்கப்பட்ட படுகொலையில் முடிந்தன. ரோசா வீட்டிற்கு மிக அருகில் தான் இந்த படுகொலைகள் நடந்தன.
((“அவருக்கு அரசியலிலும் நீதிமன்றங்களிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அவர் இரண்டு நீர்நிலைகளுக்கு இடையில் நன்றாக நகர்கிறார், மேலும் அவர் மக்கள், நண்பர்கள், பிரபுக்களைக் காப்பாற்றத் தொடங்குகிறார்” என்று மார்கோஸ் கூறுகிறார்.))
1794 வரை அவரது கணவர் அலெஜான்ட்ரோ கைதியாக இருந்தார். அவரும் அப்படித்தான்.
அவர் சில மாதங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்தார். ஆனால் இது புரட்சிக் காலத்தின் போது இருந்த மிக மோசமான சிறைகளில் ஒன்றாக கருதப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலைமைகள், அதிக நெரிசல் என்பதுடன் ஒரு நாளைக்கு மிக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் அங்கு நிறைவேற்றப்பட்டன.
“தினமும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்காக வண்டியில் ஏறப்போகும் கைதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள், அடுத்த நாள் தாங்கள் இறக்கப் போகிறோமா என்று அறியாத நிலையில், மிகுந்த வெறித்தனத்துடன் இருந்ததோடல்லாமல், பாலுறவு போன்ற செய்கைகளில் ஈடுபட்டு அதன் உச்சத்தில் இருந்தனர். அங்கே ரோசாவுக்கு தன் கணவனைப் போலவே ஒரு காதலனும் இருந்தான்,” என்று விளக்குகிறார் மார்கோஸ்.
இந்த வேதனை ரோசாவுக்கு ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தை ஏற்படுத்துகிறது.
அலெஜான்ட்ரோவும் அந்தப் படுகொலையில் இருந்து தப்பவில்லை. அதன்பின் ரோப்ஸ்பியர் தனது மனதை மாற்றிக்கொண்டு டெஸ் கார்ம்ஸில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் ரோஸ் காப்பாற்றப்பட்டார்.
அப்போதைய அன்றாட வாழ்க்கையில், டெஸ் கார்ம்ஸ் சிறைக்குள் அனுபவித்த அந்த தீவிர பாலியல் மகிழ்ச்சியுடன் அவர் தெருக்களில் சென்றார்.
ரோசா, அவர் சிறையில் சந்தித்த ஸ்பானிய தெரேசா கபாரூஸுடன் சேர்ந்து, அனைவரும் கவனிக்கும் வகையில் உடையணிந்து பாரிஸ் முழுவதும் நடந்து செல்கிறார்.
இப்போது ரோசா சக்தி வாய்ந்த, செல்வாக்கு மிக்க, சிற்றின்பத்தை அளிக்கும் படித்த பெண்ணாக இருந்தார்.
அப்போதுதான் அவர் நெப்போலியன் என்ற ஒருவரைச் சந்திக்கிறார். அவர் இத்தாலிய உச்சரிப்புடன் கூடிய பிரெஞ்சு மொழியைப் பேசுகிறார். கடினமான மற்றும் சில சமூகத் திறன்களைக் கொண்டவரான, அவருக்கு பிரான்ஸ் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது.
“ரோசா ஒரு அசிங்கமான வாத்து குஞ்சை அப்போது பார்க்கிறார். அவர் பாரிஸுக்கு வந்தபோது இருந்ததைப் போலவே அந்த வாத்தும் இருந்தது.”
அந்த நேரத்தில் அவருக்கு பல காதலர்கள் இருந்தாலும் நெப்போலியனுடனும் அவர் இருக்கிறார்.
“ரோசா சக்திவாய்ந்தவராகவும், சுறுசுறுப்பாகவும் இருந்ததால் தான் நெப்போலியன் அவர் மீது பைத்தியமாக இருந்தார்.”
1796 ஆம் ஆண்டில், அவரை நிராகரித்த கணவர் சிறையில் படுகொலை செய்யப்பட்டு, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நெப்போலியனை மணந்தார்.
அதன் பின் தான் அவர் ஜோசபின் போனபார்ட் ஆகிறார்.
நவம்பர் 9, 1799 இல், பிரான்சில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லூயிஸ்-நெப்போலியன் போனபர்ட் (Louis-Napoléon Bonaparte) அதிகாரத்தை கைப்பற்றத் தொடங்கினார்.
நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் சிறந்த வாய்ப்புக்களைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி நவீன பிரான்சின் நிறுவனர், உரிமையியல் சட்டத்தை முறைப்படுத்தி ஊக்குவித்தவர் என்றெல்லாம் கருதப்படுகிறார். மேலும், கிறிஸ்தவ மதத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பிரித்தவர் என்றாலும், அடிமைத்தனத்தை ஊக்குவித்தவர் என்றும், பெண்களின் உரிமைகளைக் குறைத்தவர் என்றும் விமர்சனங்களும் அவருக்கு எதிராக நிலவுகின்றன.
அவர் பேரரசராக இருந்த காலத்தில் ஐரோப்பாவின் ஒரு பகுதியை முழுமையாகக் கைப்பற்றினார். பலதரப்புக்களுடன் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர், பழமையான முடியாட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார். அவர் ஒரு மூலோபாயவாதியாகவும், ஒரு சிறந்த வீரராகவும் விளங்கினார். அவருக்குப் பின்னால் 60 க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்ட வீரம் இருந்தது.
நெப்போலியன் தனது நினைவுக் குறிப்புகளில், தான் ஒரு வாளை ஏந்தியதாகவும், ஜோசபின் எப்போதும் அன்பை ஏந்தியதாகவும் கூறினார்.
அவர் ஐரோப்பாவின் மற்ற ஆட்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டபோது அல்லது சவால் விடுத்தபோது, பல முறை அவர்களைச் சந்தித்துப் பேசினார். இப்படிப்பட்ட ஒரு பேச்சின் நடுவில் அவர், கோபமாக ஒரு கோப்பை காபியை தரையில் வீசி எறிந்தார். ஜோசபின் தனது கணவர் அவமதித்தவர்களைச் சமாதானம் செய்யும் ராஜதந்திர வேலைகளைப் பின்னர் செய்தார் .
இதற்கு உதாரணமாக காம்போ ஃபார்மியோ உடன்படிக்கையில், ஆஸ்திரியாவுடன் சமாதானத்தில் கையெழுத்திட்ட சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம்.
“ஜோசஃபின் 5 மாத காலம் ராஜதந்திர மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். அவர் இல்லாமல் அமைதி சாத்தியமில்லை என்பதை ஆஸ்திரியர்களே உணர்ந்திருந்தனர். நன்றியுடன் அவர்கள் அவருக்குப் பரிசாக குதிரைகளைத் தந்தார்கள்,” என்று மார்கோஸ் கூறுகிறார்.
அதிகாரம் மற்றும் தனது காலடியில் ராணுவம் என்ற ஆசை கொண்ட நெப்போலியனிடம், தமக்கு எதிரான சதிகளைத் தவிர்க்க, 1802 இல் பரம்பரை சாம்ராஜ்யத்திற்காக அவர் நிறுவிய வாழ்நாள் தூதரகத்தை மாற்றுமாறு அறிவுறுத்தினார் என்று அரசியல்வாதியான ஜோசப் ஃபோச்சே கூறுகிறார்.
1804 இல் நெப்போலியன் தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்தார். அங்கு அவர் ஜோசபின் ஒரு மனைவியாக மட்டுமின்றி ஒரு பேரரசியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
நெப்போலியன் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த போது, ஜோசபின் பிரான்சில் தூதர்கள், தூதரகங்கள் மற்றும் வணிகர்களுடனான அரசியல் ரீதியான உறவுகளைப் பராமரித்துவந்தார். மார்கோஸ் சொல்வது போல்,ஜோசபின் மனித உறவுகளை மேம்படுத்த நெப்போலியனைக் கட்டாயப்படுத்தினார்.
மேலும் அவர் கண்கவர் ஆடைகளை அணிவதன் மூலமும் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஜோசபின் எப்போதும் அதிக அளவில் செலவு செய்பவர். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக 700 க்கும் மேற்பட்ட ஆடைகள் மற்றும் 500 ஜோடி ஷூக்கள் அவரது ஒப்பனை அறையில் வைத்திருந்தார் என்பதை எடுத்துக்கொள்ளலாம்.
அதிக அளவில் செலவழிக்கும் ஜோசபின் பற்றிய தகவல்கள் பல விதங்களில் ( அப்போது அவரது வருடாந்திர உதவித்தொகை பொதுவாக ஒரு மில்லியன் பிராங்குகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ) வேறுபடுகின்றன. சிலர் அவர் அதிகமாகச் செலவழித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இப்படிக் கூறுபவர்கள் மேரி ஆன்டோனெட் போன்ற முன்னோடிகளை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
மற்ற சிலரின் கூற்றின்படி, தூய்மையின் மீதான நெப்போலியனின் அதீத ஆவல் மற்றும் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கு இணையாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தான் ஜோசபினை ஒரு நாளில் மூன்று முறை ஆடைகளை மாற்ற அறிவுறுத்தியதாகத் தெரியவருகிறது.
தொடர்ந்து அவரது வாழ்வில், அவர் எளிமையானதாக தோற்றத்தை விரும்பிய நிலையில், தெருவில் எளிதாகப் பிரதிபலிக்கும் பாணியில் தமது செய்கைகளை மாற்றிக்கொண்டார். இதனால், அவரது புகழ்பெற்ற பேரரசு பாணி ஆடைகள் இன்னும் இருக்கின்றன. அவை பல ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் நடத்தும் கேட்வாக் (catwalk) நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மஸ்லின் ஆடைகள் அணிவதை நிறுத்திக்கொண்ட ஜோசபின் புகழ்பெற்ற லையான் பட்டு ஆடைகளை அணியத் தொடங்கினார்.
ஜோசபினின் உச்சகட்ட வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நிராகரிப்பை அவர் எதிர்கொள்ளும் நிலை காத்திருந்தது. 1809 ஆம் ஆண்டு நெப்போலியன் அவரிடம் விவாகரத்து கேட்டது தான் அது.
ஏனென்றால், அவர் ஜோசபின் மீதான காதலை இழந்திருந்தது, அவருக்கு நெப்போலியன் எழுதிய கொடூரமான கடிதங்களில் இருந்து பார்க்க முடிந்தது. ஜோசபினிடம் அவர் அதிக ஆர்வமாக எதிர்பார்த்தது என்னவென்றால், ஒரேயொரு வாரிசை மட்டுமே. ஆனால், ஜோசபினுக்கு ஆரம்பகாலத்திலேயே மாதவிடாய் நின்றுவிட்டதால் அந்த ஆசையும் நிறைவேறவில்லை. அதனால், ஜோசபின் ஒரு வயதானவர் என்றும், வறட்டுப் பெண் என்றும் நெப்போலியன் கருதினார்.
நெப்போலியன் தனது இரண்டாவது மனைவின் மூலம் பெற்ற மகனைக் காண ஜோசபினுக்கு சிலகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் அவர் மல்மைசன் அரண்மனைக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கு செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதால் 200 க்கும் மேற்பட்ட புதிய இனச் செடிகளை வளர்க்கவும் வழிவகுத்தது.
1814 இல் நிமோனியாவால் இறக்கும் வரை , ஜோசபின் மற்றும் நெப்போலியனின் உறவு தொடர்ந்து கொண்டிருந்தது.
“அவர் துணிச்சலில் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி. அதுமட்டுமின்றி ஒரு சக்திவாய்ந்த பெண்” என்று முடிக்கிறார் ஈவா மரியா மார்கோஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
அதிகம் படிக்கப்பட்டது
-
1