ரூ.4000 கோடி என்ன ஆனது? அரசியலாக்கப்படுகிறதா சென்னை மழை?
- எழுதியவர்,பாலசுப்ரமணியம் காளிமுத்து
- பதவி,பிபிசி தமிழ்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர் எழுப்பியுள்ளனர்.
திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டம் இந்த மழையில் கைகொடுத்ததா? திமுகவும் எதிர்கட்சிகளும் சொல்வது என்ன?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னையில் கடந்த வாரம் பெய்த மழை குறித்து X சமூக வலைதளத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி பதிவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,”சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற “திமுக மாடல் ரோடு”, “இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “வானிலை மையம் எச்சரித்த போதும் திமுக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை அரசு திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். ” எனத் தெரிவித்தார்.
முகாமில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனத் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?
டிசம்பர் 4-ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “4000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை நான் அரசியாலாக்க விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், 4000 கோடிக்கு பணிகள் நடந்த காரணமாகத்தான் 47 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்தும் சென்னை இப்பொழுது தப்பித்திருக்கிறது. இதற்கு அந்த நான்காயிரம் கோடியை திட்டமிட்டு செலவு செய்ததே காரணம்” எனக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அதிமுக ஆட்சி காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பணிகளை செய்திருக்கிறோம்.” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படுமா என்றக் கேள்விக்கு மத்திய அரசிடம் 5000 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் அதைப்பொறுத்தும் மாநில அரசின் நிதிநிலைமையை பொறுத்தும் நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும்” என முதல்வர் தெரிவித்தார்.
“முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் செய்கிறார்”
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான பாஜகவின் வானதி சீனிவாசன், 4000 கோடி ரூபாய் திட்டத்தால்தான் பாதிப்பு குறைவாக உள்ளதாக முதல்வர் எப்படி கூறுகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது X பதிவில், “4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 2015-ல் 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் 4000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சரியான திட்டமிடல் இல்லாமல் பணம் செலவழிக்கப்படுகிறது”
இந்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சாம் பொன்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
அவர் கூறுகையில், “4000 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் செலவு செய்யப்பட்ட பணம் திட்டமிடலோடு செலவு செய்யப்படவில்லை. வடிகால் எங்கே இறங்குகிறது எங்கே ஏறுகிறது என்பது போன்ற திட்டமிடல் திமுக அரசிடம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், செயல்பாட்டில் அந்த திட்டமிடலோடு பணிகள் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “இந்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் சாலையின் உயரம் அதிகமானதே. புதிதாக சாலைகள் போடும்பொழுது ஏற்கனவே இருக்கும் சாலையை எடுத்துவிட்டுதான் புதிய சாலை போட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், சாலை போடும் அதிகாரிகள் அதை கண்காணிப்பதில்லை. இது குறித்து மக்கள் முறையிட்டால் உங்களது வீட்டை உயரப்படுத்திக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளிக்கிறார்கள்” என அவர் கூறினார்.
மேலும், “கடந்த அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாமல் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக அரசு வந்த புதிதில் அவர்களிடம் எப்படி வடிகால் பணிகள் அமைக்கவேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், அந்த திட்டமிடல் செயல்பாட்டில் பிரதிபலிக்கவில்லை” என சாம் பொன்ராஜ் தெரிவித்தார்.
“உண்மையான இரும்புப் பெண்மணி மேயர் ப்ரியாதான்”
இது குறித்து திமுகவின் செய்தித்தொடர்பாளர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது.
அவர் கூறுகையில், “45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் இப்படி மழை பெய்திருந்தால் சென்னையின் மையப்பகுதிகளிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கலாம் ஆனால் மையப்பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிட்டது” எனக் கூறினார்.
மேலும்,” 4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் திட்டம் என்பது மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டும்தான். அதனால்தான் நகரின் மையப்பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில்,”பாஜகவின் ஒரு கிலோமீட்டர் சாலையையே 250 கோடி ரூபாய்க்கு அமைத்த கட்சி. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 1000 கோடி ரூபாய் செலவு செய்து வடிகால் பணிகள் செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால், அதே ஆண்டு பெய்த மழையில் சென்னை பாதிக்கப்பட்டது.” என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,”சென்னை மாநகராட்சியின் பணிகளை விமர்சிப்பவர்கள் மேயர் பிரியா ராஜனின் உடல்மொழியையும் அவர்கள் பேசுவதையும் நக்கல் அடிக்கிறார்கள். அவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண். அவர் ஒரு பெண் என்பதாலேயே விமர்சிக்கப்படுகிறார். அவர் இந்த நேரத்தில் சிறப்பாக பணி செய்து வருகிறார். உண்மையான இரும்புப்பெண்மணி என்றால் அது பிரியா ராஜன்தான்.” என திமுகவின் சரவணன் தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பிற்கு காரணம் கடல் சீற்றம் – ஆணையர் ராதாகிருஷ்ணன்
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 3031 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் சென்னையில் போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில்,“சென்னை பெருநகரின் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இந்த மிக்ஜாம் புயலால் எதிர்பாராத நிகழ்வாக சில மணி நேரங்களிலேயே அதிக அளவு மழை கொட்டி உள்ளது.” என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில். “சென்னையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்கள் வழியாக மழை நீர் சென்று நான்கு பெரிய வடிகால் பாதை மூலம் கடலை நோக்கி செல்கிறது. இருந்தாலும், கடல் பரப்பிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு வெள்ள நீரை உள்ளே ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளி வெள்ள நீர் நகருக்குள் திரும்பி வருவதால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது,”என அவர் தெரிவித்தார்.
கடல் மழை நீரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெள்ள பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அதனை எதிர் நோக்கி கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்