பள்ளிக்கரணை: கடல் மட்டத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள்
- எழுதியவர்,தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி,பிபிசி தமிழ்
சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. புயலின் தாக்கம் முடிந்து 4 நாட்களை கடந்தும் மீண்டு வர இயலாமல் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளதன் பின்னணி என்ன?
பள்ளிக்கரணையில் வசிக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பால், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருவது ஏன்?
அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதியாக மாற்றியதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகர் மாநகராட்சியின் 14-வது மண்டலமாக இருப்பது பள்ளிக்கரணை. இது சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பேரூராட்சியாக இருந்த பள்ளிக்கரணை
கடந்த 2012-ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
சதுப்பு நிலம் என்பது என்ன?
ஆண்டு முழுவதும் ஈரப்பதம் இருக்கும், நீர் இருக்கும் நிலத்தைத்தான் சதுப்பு நிலம் என்கிறார்கள். சிறு தாவரங்களும் நீர் வாழ் விலங்குகளுக்கும் இது அடைக்கலம் தருகிறது. உவர்ப்பு மற்றும் நன்னீர் என இருவகையான சதுப்பு நிலங்கள் உண்டு.
பள்ளிக்கரணையில் இருப்பது நன்னீர் சதுப்பு நிலமாகும். கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது.
“சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது.” என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது.
பல்லுயிர் ஆதாரமாக விளங்கும் பள்ளிக்கரணை
பள்ளிக்கரணையில் கடந்த 1965-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 5,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரந்து விரிந்து இருந்தது. சென்னையின் நகரமயமாக்கலால் சிறிது சிறிதாக சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் முளைத்ததால் தற்போது வெறும் 1,500 ஹெக்டேர் சதுப்பு நிலமாக குறுகிப்போனது.
அதிகாரமிக்கவர்களால் பள்ளிக்கரணையின் அழிவை தடுப்பதில் சிக்கல் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கடந்த 20 ஆண்டுகளில் அழித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இவை அனைத்தும் பத்திரப்பதிவு துறையில் போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு நீர்நிலைப் பகுதியை குடியிருப்புப் பகுதியாகப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திப் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியதாகவும் புகார் உள்ளது.
சதுப்பு நிலங்களை அழிப்பது யார்?
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளால் குடியிருப்பு நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க வேண்டிய சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கத் தவறியது ஏன்?
சதுப்பு நிலத்திற்கு குடியிருப்புப் பகுதியாக மாற்றிய அதிகாரியின் மீது அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளித்தும் அதிகாரியின் மீது அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பணி உயர்வு கிடைத்திருப்பதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.
நீர்வளத்துறை செயல்படுகிறதா?
நீர்நிலைகளை பாராமரிக்க வேண்டிய நீர் வளத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அரசால் ஆண்டுதோறும் நீர்நிலை மேலாண்மைக்கு ஒதுக்கப்படும் பணம் செலவிடும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது.
நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில் நீர்நிலைப் பகுதிகளை இடங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக (Zero land value) அறிவிக்க வேண்டும் என உத்தரவு வழங்கியது.
ஆனால், அந்த உத்தரவை அரசு பின்பற்றி வருவாய்த்துறையின் கீழ் வரும் நீர்நிலையின் இடங்களை மதிப்பில்லா இடமாக மாற்றி பதிவுத்துறையில் அறிவிக்கவில்லை.
நீர்நிலைகளின் மதிப்பு குறித்து அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தரப்பில் பதிலளிக்காதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
கடல் மட்டத்தில் இருக்கிறதா பள்ளிக்கரணை?
“சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து பூஜ்ஜியம் அல்லது ஒரு அடி மட்டுமே உயரமாக உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் முட்டுக்காடு கடலை நோக்கிச் செல்லக் கூடிய ஒங்கியம் மவுடு பகுதியில் ஆகாயத் தாமரையின் தடுப்பதால் மழைநீர் சீராக கடலில் சென்று சேர முடியாமல் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து கொள்கிறது.
பள்ளிக்கரணையில் இருந்து மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சேரும் இடம் வரை இருக்கு நீர் வழி பாதையை மாநகராட்சி முறையாக பராமரிப்பு செய்யாவிட்டால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் மக்கள் குடிநீர், பால், உணவுக்காகவும் மழை காலங்களில் இருப்பிடத்தை தேடி அழைய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதில் (RTI) கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் தற்போது வரை அரசு “, என்றார்.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும் எளிதில் பாதிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிறார் பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த சவுந்தரராஜன்
இது தொடர்பாக பிபிசியிடம் கூறும் போது “சென்னைக்கான மாஸ்டர் பிளான்-3 திட்டத்தை ரத்து செய்து மாஸ்டர் பிளான் இரண்டில் விடுபட்டதை நிறைவேற்ற வேண்டும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளை எளிதில் பாதிக்கும் பிராந்தியமாக அறிவித்து, அங்கு இருக்கும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் 125 டி.எம்.சி நீரை சென்னையின் நீர்நிலைகளில் சேமித்து வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம்”, என்றார்
தொடர்ந்து பேசிய அவர் “தென் சென்னையை காப்பாற்ற அரசு விரும்பினால் பள்ளிக்கரணை பகுதியில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு எந்தத் தயக்கம் காட்டக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் பதில் என்ன?
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் கடந்த காலத்தில் 12 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் கூவத்தின் அருகே அகற்றப்பட்டன. தற்போது மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படும் இடத்தில் பொது மக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீர் நிலைகளை தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்படும்,” என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)