சீதாக்கா: அன்று துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட்; இன்று தெலங்கானா அமைச்சர்
“துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் சரி, துப்பாக்கி ஏந்தியவர்களுடன் இருந்தாலும் சரி, அது பலவீனமானவர்களுக்காக, அவர்களின் சமூகத்திற்காக, அவர்களின் வாழ்விடத்திற்காக, அவர்கள் உடுத்தும் உடைக்காக…”
தான் துப்பாக்கி ஏந்தி நிற்கும் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்து, இந்த வார்த்தைகளைக் கூறியிருப்பவர், தற்போது தெலங்கானாவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ள சீதாக்கா.
சீதாக்கா. இந்தப் பெயர், தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒன்று.
சீதாக்காவின் இயற்பெயர் தனசாரி அனசுயா. அவர் வயது 52.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவரது பெற்றோர் சம்மையா மற்றும் சம்மக்கா. சீதாக்காவுக்கு ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் சூர்யா.
முன்பு ஜனசக்தி குழுவில் (கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்) உறுப்பினராக இருந்த அவர், தான் விரும்பிய ஸ்ரீராம் என்பவரை மணந்தார். ஆனால் பின்னர் அவர்கள் பிரிந்தனர்.
காட்டைவிட்டு வெளியேறிய பிறகும், எந்த மாற்றத்திற்காகவும் தன் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்று அவர் சொல்கிறார்.
சீதாக்காவின் அரசியல் பிரவேசம் எப்போது தொடங்கியது?
சீதாக்கா தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 2004ஆம் ஆண்டு முளுகு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் போடம் வீரய்யாவிடம் தோல்வியடைந்தார்.
பின்னர் 2009இல் வீரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்று சட்டசபையில் நுழைந்தார். 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் டி.ஆர்.எஸ் வேட்பாளர் சந்துலாலிடம் தோல்வியடைந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் சீதாக்கா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். முளுகு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சீதாக்காவின் நேர்மையும், சாமானியர்களோடு சாமானியராக இருக்கும் இயல்பும் அவருக்கு தனிச்சிறப்பைப் பெற்றுத் தந்தது, என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
கொரோனா காலத்தில் சீதாக்கா தொலைதூர கிராமங்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை வழங்கி செய்திகளில் முக்கிய இடம் பிடித்தார்.
வைரலான வீடியோ
இந்த ஆண்டு ஜூலை மாதம் தெலங்கானாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, முளுகு மாவட்டம், ஏதூர்நகரம் மண்டலத்தில் உள்ள கொண்டை என்ற கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு மக்கள் படும் இன்னல்களைக் கண்டு சீதாக்கா பதைபதைத்துப் போனார்.
இந்த கிராம மக்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் அனுப்புமாறு அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
சட்டமன்றத்தில், முளுகு மாவட்டத்தின் பிரச்னைகளைப் பேசி வந்தார்.
தற்போது தெலங்கானா சட்டமன்றத்தில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்