திருப்பூர்: மூடப்படும் ஆலைகள்; கடும் பாதிப்பில் பின்னலாடை தொழில் – தமிழக அரசுதான் காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர்,ச.பிரசாந்த்
- பதவி,பிபிசி தமிழுக்காக
வங்கதேசம் மற்றும் பிற மாநிலங்களின் போட்டிச்சூழல், மின் நிலைக் கட்டணத்தை உயர்த்தி, பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தால், ஜவுளித்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, நஷ்டத்தால் 30 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர் திருப்பூர் பின்னலாடை தொழில் தொழில்துறையினர்.
தமிழகத்தின் ‘பனியன் நகரம்’, ‘டெக்ஸ்டைல் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஈரோடு, கோவை மாவட்டங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரு நிறுவனங்கள் பின்னலாடை தொழிலைச் செய்து வருகின்றன. உள்ளூர் விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என ஆண்டுக்கு, 65 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால் இந்தியாவுக்கான ஆர்டர்கள் அங்கு செல்வதாலும், பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாமலும் வர்த்தகம் கடுமையாகப் பாதித்து, நஷ்டத்தைச் சந்தித்து தொழிற்சாலைகள் பூட்டப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர்.
மேலும், தமிழக அரசு போதிய திட்டங்களை வகுக்காமலும், 430 சதவீதம் மின் நிலைக்கட்டணத்தை உயர்த்தி, நிலையற்ற பருத்தி மற்றும் நூல் விலை பிரச்னைக்கு தீர்வு காணாமல் உள்ளதால், பின்னலாடைத் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டங்களையும் செய்து வருகின்றனர்.
உண்மையில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பின்னலாடைத் தொழிலைக் காக்க தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
திருப்பூரின் ஜவுளி வர்த்தகத்தின் நிலை?

பட மூலாதாரம்,முத்துரத்தினம்
பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகள், வங்கதேசம் எப்படி ஆர்டர்களை பெறுகிறது என்று விளக்குகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TEAMA) தலைவர் முத்துரத்தினம்.
பிபிசி தமிழிடம் பேசிய முத்துரத்தினம், ‘‘திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மூலம் ஏற்றுமதியில் 35 ஆயிரம் கோடி உள்பட 65 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர், இதில் 3 – 4 லட்சம் பேர் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள்.
தமிழகத்தின் பின்னலாடை தொழிலுக்கு ஆண்டுக்கு 115 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் பருத்தி உற்பத்தி குறைந்து இங்கு 6 லட்சம் பேல் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால், நாம் குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து போக்குவரத்துக்கு அதிக செலவு செய்து பஞ்சு கொள்முதல் செய்கிறோம்.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி துவங்கி தற்போதைய பஞ்சு கொள்முதலுக்கான போக்குவரத்து செலவு, நிலையற்ற மூலப்பொருள் விலை, அரசின் மின் கட்டண உயர்வு என அனைத்துமே திருப்பூர் பின்னலாடை தொழிலை ஆட்டம் காணச் செய்துவிட்டது,’’ என்கிறார் முத்துரத்தினம்.
வங்கதேசமும், வடமாநிலங்களும் போட்டி!
தமிழக ஜவுளித்துறைக்கு வங்கதேசம் போட்டியாக இருந்த நிலையில், பிற மாநிலங்களும் போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளது என்கிறார் முத்துரத்தினம்.
இதுகுறித்து விளக்கிய அவர், ‘‘இந்தியாவின் ஒரு மாநிலத்தின் பரப்பளவு அளவே உள்ள வங்கதேசத்தில், அந்நாட்டு அரசு அதிக சலுகைகளை வழங்குவதால் அங்கு உற்பத்திச் செலவு குறைவு. அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தால் வரி இல்லை என்பதால், நம்மைவிட அங்கு விலை குறைவு என்பதால் உலக நாடுகள் அங்கு வாங்கத் துவங்கியுள்ளதால், உலகின் மொத்த ஏற்றுமதியில் வங்கதேசம் 12 சதவீதமும் இந்தியா 4 சதவீதமாகவும் உள்ளது,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த முத்துரத்தினம், ‘‘குஜராத் மாநில அரசு ஜவுளித்துறைக்கான மின் கட்டணத்தை 3 ரூபாய் குறைத்துள்ள நிலையில், சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு செய்து ஜவுளித்துறையை அதள பாதாளத்துக்கு தள்ளிவிட்டது. பிகார் அரசைவிட இங்கு ஜவுளித்துறைக்கு ஒரு யூனிட் 6 ரூபாய் அதிகமாக உள்ளது.
குஜராத், பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் அளவுக்கு இங்கு ஜவுளித் தொழிலுக்கான திட்டங்கள் இல்லாததுடன், ஜவுளித் தொழில் மீது மாநில அரசு அக்கறை காட்டாததால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் தயாராகும் பின்னலாடைகளின் விலை ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் வரை அதிகமாக உள்ளதால், நமக்கான ஆர்டர்கள் அவர்களுக்குச் செல்கிறது,’’ என்கிறார் அவர்.
‘5,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன’

பட மூலாதாரம்,பாலசந்தர்
பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIHMA) துணைத்தலைவர் பாலசந்தர், ‘‘முன்பு 3 மாதங்களுக்கு ஒருமுறை நூல் கொள்முதல் விலையை நூற்பாலைகள் அறிவித்து வந்த நிலையில் தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை அறிவிக்கத் துவங்கியுள்ளனர்.
இதனால், முன்பு நூல் விலை கிலோவுக்கு 5 – 10 ரூபாய் மாறுபாடாக இருந்த நிலையில், இன்று 25 சதவீதம் வரையில் விலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால், உள்ளூர் ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்து நிலையற்ற வர்த்தக சூழல் உருவாகியுள்ளது.
இதைச் சரிசெய்ய நூற்பாலை உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கொண்ட கமிட்டியை உருவாக்கி, அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,’’ என்கிறார் பாலசந்தர்.
மேலும் தொடர்ந்த பாலசந்தர், ‘‘சமீபத்தில் தமிழக அரசு மின்கட்டண உயர்வு செய்ததில், நிலைக் கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தியுள்ளது. நிலையற்ற மூலப்பொருள் விலை, அதீத மின் கட்டணத்தால் பின்னலாடை தொழில் அதள பாதாளத்துக்குச் சென்றுள்ளது. மின்கட்டண உயர்வுக்குப் பின் மட்டுமே, 5,000 சிறு, குறு நிறுவனங்கள் பூட்டப்பட்டுள்ளன,’’ என்கிறார் பாலசந்தர்.
‘நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்’

பட மூலாதாரம்,ஜெயபால்
தமிழக மின்சார வாரியத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பதாகத் தெரிவிக்கிறார் தமிழ்நாடு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜெயபால்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜெயபால், ‘‘பருத்தி உற்பத்திக் குறைவால், ஒரு கிலோவுக்கு 12 – 18 ரூபாய் கூடுதல் விலை கொடுத்துதான் பிற மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்கி, இங்கு நூல் தயாரித்து, சாயம் ஏற்றி, பின்னலாடை உருவாக்கப்படுகிறது.
பின்னலாடை உற்பத்தி செய்யும் மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே பூஜ்ய திரவ வெளியேற்றம் (Zero Liquid Discharge) உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மீது அரசு அக்கறை கொண்டு இந்தக் கட்டுப்பாட்டை விதித்திருந்தாலும், இந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நூல் சாயமேற்றவே ஒரு கிலோவுக்கு 350 – 700 ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதனால் உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது, ஆனால் இந்தச் செலவைக் குறைக்க அரசு மானியம் ஏதும் வழங்குவதில்லை,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த ஜெயபால், ‘‘முன்பு 112 கிலோ வாட் மின்சார கொள்ளளவுள்ள ஒரு சிறு தொழிற்சாலை, தொழில் செய்தாலும் இல்லையென்றாலும் மாதம் 3,920 ரூபாய் நிலைக் கட்டணமாகச் செலுத்தியது. தமிழக மின்வாரியத்தின் 430 சதவீத மின் நிலைக்கட்டண உயர்வுக்குப் பின் மாதம், 17,200 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
சீசன் இல்லாத சூழலில் தொழிற்சாலையை பூட்டி வைத்திருந்தாலும்கூட இவ்வளவு தொகையை யாரால் கட்ட முடியும்?
இதன் காரணமாகவே 30 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. தொழிலை மீட்க உயர்த்திய நிலைக்கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ஜவுளித்தொழிலுக்கான கூடுதல் மானியங்கள் ஒதுக்க வேண்டும்,’’ என்கிறார் அவர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
பின்னலாடை தொழிலை மீட்க என்னதான் வழி?
பின்னலாடை தொழிலை மீட்க சில கோரிக்கைகளை முன்வைக்கிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TEAMA) தலைவர் முத்துரத்தினம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘மூலப்பொருள் விலையைக் கட்டுக்குள் வைக்க அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொழில் சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட தனி ஜவுளி வாரியம், தமிழ்நாடு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
மின் நிலைக் கட்டணம் ரத்து, சோலார் மின் வசதி ஏற்படுத்த மானியம், மின் கட்டண குறைப்பு, புதிதாக தொழில் தொடங்க வருவோருக்கு முத்திரைத்தாள் கட்டணம் ரத்து செய்து, ஜவுளிப் பூங்கா உருவாக்க மாநில அரசு தரும் மானியத்தை 23 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களை நம்பியிருக்கும் சூழலை மாற்ற, தொழில் வளர்ச்சியற்ற மாவட்டங்களில் ஜவுளிப் பூங்கா துவங்கினால் இங்கு உள்ளவர்களையும் ஜவுளித்துறையின் திறன்பெற்ற தொழிலாளிகளாக (Skilled Labours) மாற்ற முடியும். ஜவுளித்தொழிலுக்கான மாநில ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்,’’ என கோரிக்கைகளை முன்வைக்கிறார் அவர்.
சங்கங்களின் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகளுக்கு தமிழக ஜவுளித்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?
இந்த கோரிக்கைகள் மற்றும் பின்னலாடைத் தொழிலின் பின்னடைவு குறித்து, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் காந்தி, ‘‘குஜராத், பிகார் போன்ற மாநிலங்கள் ஜவுளித்துறைக்குப் பல அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளதால் அதுபோன்று புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.
நிதிப் பற்றாக்குறை இருக்கும் நிலையிலும், ஜவுளித்துறையைப் பாதுகாத்து மேம்படுத்தப் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலின் பிரச்னையைத் தீர்க்க, மின் கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி மின் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதேபோல், விரைவில் ஜவுளித்துறை சங்கங்கள், வல்லுநர்களுடன் இணைந்து தனி வாரியம் அமைக்கவும், புதிய ஜவுளிப் பூங்காக்களை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் ஜவுளித்துறையின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, பிரச்னைகள் தீர்க்கப்படும்,’’ என விளக்கமளித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)