மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் – எப்படி சாதித்தார்?

- எழுதியவர்,மாயகிருஷ்ணன்
- பதவி,பிபிசி தமிழுக்காக
அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்கு சாதகமாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும். இதற்கு மூலகாரணம், ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும் வெறியுமே ஆகும். இந்த வேட்கையும் வெறியுமே அரசுகளை உருவாக்குகின்றன அல்லது அழிக்கின்றன.
நாட்டை ஆண்ட ஒரு இனக்குழுவானது வேறொருவரால் அழிக்கப்பட்டு ஒடுக்கப்படும் பொழுது அதனுடைய வலி மிகக் கொடுமையானது. அந்த வலியும் வேதனையும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டி வெளிப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கும். அப்படி தன் இனத்தை அழித்த சோழ அரசை வீழ்த்தி மீண்டும் பல்லவர்கள் ஆட்சியை உருவாக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியை கண்ட ஒரு சிற்றரசனை பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

காடவராயர்களின் தலைநகரம் சேந்தமங்கலம்
சோழ அரசனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள காடவராயர்களின் தலைநகராக இருந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கோட்டைக்குச் சென்றோம். நம்மோடு விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், மற்றும் வரலாற்று ஆர்வலர் உளுந்தூர்பேட்டை லலித்குமார் ஆகியோர் வந்தனர்.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையின் மிக அருகில் பல்லவர் வழி தோன்றலான காடவராய சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் கட்டிய சேந்தமங்கலம் கோட்டை குறித்து நம்முடன் விரிவாக பேசத் தொடங்கினார் வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ்.
“அந்த காலத்தில் கோட்டைகளில் இருந்து தான் பெரும்பாலான அரசுகள் செயல்பட்டுள்ளன. அந்த வகையில் சேந்தமங்கலம் கோட்டையும் விதிவிலக்கல்ல. இந்த கோட்டை மற்ற கோட்டைகளை விட வித்தியாசமாக கட்டப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அகன்ற வெளிப்புற சுவரை கொண்டு கட்டமைத்து உருவாக்கப்பட்டது இதுபோல் வேறு எங்கும் காண இயலாது. தற்பொழுது இது இடிந்த நிலையில் இருந்தாலும் அதன் அடித்தளம் இன்றும் நன்கு பார்க்கும் வகையிலேயே உள்ளது” என்று அதையும் காண்பித்தார் .
மிக பெரிய சுற்றுச்சுவரை தாண்டி கோட்டை பிரதான வாயில் வழியாக உள்ளே நுழையும் பொழுதே மிக பிரம்மாண்ட கோவிலின் கட்டமைப்புகள் நம்மை வரவேற்றன.
இந்த சேந்தமங்கலத்தில் காடவராயர்களால் அமைக்கப்பட்ட கோட்டை, அரண்மனை, கோயில் என அனைத்தும் ஒருங்கே அமைக்கப்பட்டு ஒரு பெரு நகரமாக இருந்துள்ளது. அதன் ஒரு பகுதியைத்தான் நாம் தற்பொழுது பார்க்கின்றோம்.
இந்த பகுதியில் தொல்லியல் துறை கடந்த 1995-ஆம் ஆண்டு அகழாய்வு செய்தபொழுது சோழர்கள் கால கூரை ஓடுகளும், இரும்பு ஆணிகள், நூல் நூற்கும் கருவிகள், மணிகள் மற்றும் சுடுமண் விளக்குகள், தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டை ஆகியவை கிடைத்தன.
அதன்படி சேந்தமங்கலம் பகுதியானது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து மக்களின் வாழ்விடப் பகுதியாக விளங்கி இருக்கிறது என்பதும் கி.பி. 13-ம் நூற்றாண்டு அளவில் கோட்டை அரண்மனை போன்ற செங்கற் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு ஒரு தலைநகரமாகவே வளர்ச்சி பெற்றது என்பதும் அறிய முடிகிறது.
வானிலை கண்டேஸ்வரம் எனும் இந்தக் கோவிலை கட்டியவன் மணவாள பெருமாள் எனும் காடவராயன். இந்த ஆபத்சகாய ஈஸ்வரன் கோவிலானது இரண்டு திருச்சுற்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்றில் உள்ள கிழக்கு பக்க கோபுரம், அடியில் இருந்து கூரை பகுதி வரை கருங்கல் மட்டும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

புதிய வகை கட்டிடக்கலை
“சில கட்டிடப் பகுதிகள் சிதைவுற்றுக் காணப்பட்டாலும் அதைப் புனரமைக்கும் பணியை தொல்லியல் துறை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் கட்டடக்கலையில் புதுவகை கட்டிடக்கலையை காடவர்கள் பயன்படுத்தினார்கள். கோவில் திருச்சுற்றிலுள்ள மதில்கள் கோயிலுக்கு பாதுகாப்பாக மட்டுமல்லாது போர்க்காலத்தில் பாதுகாப்பான கோட்டையாகப் பயன்படுத்தும் அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. படைக்களத்தை ஏந்திய வீரர்கள் நின்று காவல் புரிய தனித்தனி அமைப்புகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு கோவிலின் முன்னால் உள்ள மண்டபத்தின் கிழக்குச் சுவற்றில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கோப்பெருஞ்சிங்கன் கோவிலுக்கு நிவந்தங்கள் தந்ததை தெளிவாகக் கூறுகின்றன.
மேலும் இந்தக் கோப்பெருஞ்சிங்கன், சிதம்பரம், திருவெண்ணைநல்லூர், மற்றும் திருவண்ணாமலை கோவில்களில் பல்வேறு திருப்பணிகளையும் செய்துள்ளார். மேலும் இவர் தமிழ் மீது அதீத பற்று கொண்டவர். இவருக்கு ‘பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. தமிழ் மொழியைப் பேணி வளர்த்தது போன்றே ஆடல் மற்றும் சிற்பக்கலைக்கும் அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்,” என்றார் பேராசிரியர் ரமேஷ்.

தமிழகத்தில் 400 ஆண்டு கால பல்லவர் ஆட்சி
சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் குறித்து வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான பெரம்பலூர் ஜெயபால் ரத்தினம் பிபிசி தமிழிடம் பேசினார்.
“காடவ பல்லவர்களில் சைவம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக சிறப்பு பெற்றிருப்பவர், ’காடவர்கோன் கழற்சிங்கர்’ ஆவார். இவர் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவர் என சேக்கிழாரும்(பெரியபுராணம்), சுந்தரமூர்த்தி சுவாமிகளும்(திருத்தாண்டகை) குறிப்பிடு கின்றனர். அதன்படி, காடவர், பல்லவர் ஆகிய இரு பெயர்களும் ஒரே மரபைக் குறிப்பதான சொல்லாட்சிதான் என்பது தெளிவாகும்.
சுமார் நானூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த பெருமைக்குரிய பல்லவர்கள், ஒன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட சோழர்களது எழுச்சியினால், நாட்டினை இழந்து சிதறுண்டார்கள். அப்படிச் சிதறியவர்களில் பலர், பிற்காலத்தில் சோழர்களது படைகளில் இடம் பெற்றிருந்தனர். சிலர், தங்களது வீரம் மற்றும் திறமைகளின் காரணமாக படிப்படியாக உயர்ந்து சோழர் அரசில் காவல் அதிகாரிகளாகவும் அதனின் நீட்சியாக சிற்றரசர்களாகவும் விளங்கினர். அவர்கள் சம்புவராயர், காடவர், சேதிராயர் என்ற பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டனர். ” என்று அவர் கூறினார்.
திருமுனைப் பாடி நாடு
மேலும் தொடர்ந்த அவர், “சோழர் அரசில் செல்வாக்குடன் திகழ்ந்த காடவர்கள் சோழப் பேரரசின் சிற்றரசுகளில் ஒன்றான நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் நாடுகாவல் அதிகாரியாக விளங்கி பின்னர் சிற்றரசர்களாக உயர்ந்தவர்கள். இவர்கள் ஊர் கூடல் எனப்படும் தற்பொதைய கடலூர்.
எனவே இவர்கள் தங்கள் பெயருடன் கூடல் என்பதையும் சேர்த்து கூடல் ஆளப்பிறந்தான் என அழைத்துக்கொள்வார்கள். தவிர, இவர்கள் இன்னும் எராளமானப் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மரபில் அரசநாராயணன் கச்சிராயன் என்பவர் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக பொறுப்பேற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து அவரது மகன் ஆளப்பிறந்தான் ஏழிசைமோகன் ஜெகநாத கச்சிராயன் வீரசேகரன் ஆட்சிக்கு வந்தார். அடுத்து வந்த ஆட்கொல்லியாரைத் தொடர்ந்து கூடலுர் அரச நாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரக் காடவராயன் என்பவர் திருமுனைப்பாடி நாட்டில் பாடிகாவல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தனது மகளை காடவராயருக்கு மணம் முடித்து வைத்த சோழன்
இவருக்குப்பின், அவரது மகன் இராசராச காடவராயர் திருமுனைப்பாடி நாட்டின் பாடிகாவல் அதிகாரியாக பொறுப்பேற்றார். மூன்றாம் குலோத்துங்க சோழன் நடத்திய படையெடுப்பு ஒன்றில் கலந்து கொண்ட இந்த காடவராயன், எதிரிகளுடன் போரிட்டு வெற்றிகண்டார். இவரது வாள் வீசும் திறமையை மெச்சிய குலோத்துங்க சோழன், இவருக்கு ’வாள்நிலை கண்டபெருமாள்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்ததுடன் தனது மகளையும் இந்த வாள் வீரனுக்கு மணம் செய்து கொடுத்துள்ளார். அதன்படி இவர், ‘வாள்நிலை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவராயன்’ எனப்பட்டார். இவர் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக உயர்ந்தார். இவருக்கு மணவாளப்பெருமாள், ஏழிசை மோகன் என்ற பட்டப்பெயர்களும் உண்டு . இவர்தான் காடவராய சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் என அழைக்கப்பட்டார்.
இந்த கோப்பெருஞ்சிங்கன் கி.பி.1213-ஆண்டு முதல் கி.பி.1231-வரை ஆட்சி செய்தான். பல்லவர் மரபின் வழிவந்த காடவராயர் என்பதால் இவருக்கு, தமிழகத்தில் மீண்டும் பல்லவர் ஆட்சியை மலரச் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது.
திருமுனைப்பாடி நாடு என்பது இன்றைய கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு ஆள்நிலப் பகுதியாகும். காடவர்கள் திருமுனைப்பாடியின் கீழமைந்த ஆமூர் நாட்டின் கூடலைச் சேர்ந்தவர்கள் கூடல் என்பது இன்றைய கடலூர் ஆகும். திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராக விளங்கியது சேந்தமங்கலம். இந்த ஊர் திருச்சிரப்பள்ளி-உளுந்தூர்பேட்டை–விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து கிழக்காக 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது .
காடவர்கள் வலுவான அரண்களுடனும் அகழியுடனும் கூடிய அரண்மணை ஒன்றை சேந்தமங்கலத்தில் கட்டமைத்து அங்கிருந்து ஆட்சி செய்தனர். இவர்களது சின்னம் காளை. இங்கு வாள்நிலை கண்டீசுவரர் என்ற பெரிய சிவன் கோவில் ஒன்றையும் எழுப்பியுள்ளனர். இக்கோவில் ஆபத்சகாயேசுவரர் கோவில் என்ற பெயரில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. அரண்மணை சிதிலமடைந்துவிட்டது. இக்கோட்டை வளாகத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் கல்வெட்டுகள் மற்றும் காடவர் வரலாற்றை ஆய்வுசெய்த தொல்லியல்துறையின் மேனாள் இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன், காடவர்களது வரலாறு, மற்றும் அவர்கள் பல கோவில்களுக்கும் அளித்த நிவந்தங்கள் உள்ளிட்ட ஏராளமான விவரங்களை தனது நூலில் விவரித்துள்ளார். காடவர்கள் குறித்து மொத்தம் 190 கல்வெட்டுகள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சோழப் பேரரசின் சிற்றரசர்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கிளியூர் மலையமான், இறையூரன் இராசராசசேதிராயன், மலையன் நரசிம்மவர்மன் ஆகிய கரிகாலசோழ ஆடையூர் நாடாள்வான், அதிகமான் இராசராசதேவன், விடுகாதழகிய பெருமாள், அமராபரண சீயகங்கன், அம்மையப்பன் சம்புவராயன், ஏகவாசக குலோத்துங்கசோழ வாணகோவரையன், மகதைப் பெருமாளான இராசராச வாணகோவரையன், வீரசேகர காடவராயன், இராசராச காடவராயன் ஆகியோர் படைத் தலைவர்களாகவும் சிற்றரசர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.” என்றார் எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம்.

சோழ அரசை வீழ்த்த திட்டம் போட்ட சிற்றரசர்கள்
மேலும் தொடர்ந்த அவர் “சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் அளவுக்கதிகமான செல்வாக்குடனும், அதிக சுதந்திரத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் பல சிற்றரசர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு சோழ அரசுக்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலிருந்தே காடவரயன் உள்ளிட்ட சிற்றரசர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு சோழ அரசுக்கு எதிராக செயல்படத் துவங்கிவிட்டனர்.
சோழநாட்டை சுற்றியுள்ள பாண்டியர், போசளர், தெலுங்கு சோழர் போன்றோர் வலிமை பெருகி நின்றதுடன் தங்களது நாட்டின் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் சோழ நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள விரும்பி உரிய ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கின்றனர். மூன்றாம் குலோத்துங்க சோழன் நிர்வாகம் அளித்த இந்த சுதந்திரப் போக்கு, தங்களுக்கென தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த சிற்றரசர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. அவர்களில் பலர் கூட்டு சேர்ந்துகொண்டு சோழப் பேரரசுக்கு எதிரான சதிகளில் ஈடுபடலாயினர்.
குலோத்துங்க சோழனால், `வாள்நிலைகண்ட பெருமாள்’ என்று பட்டத்தையும் தனது மகளைக் கொடுத்து மருமகன் என்ற உறவுமுறையையும் அளித்து, திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக உயர்த்தியிருந்தாலும், பல்லவர்ஆட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பும் தனது நெடுநாளைய விருப்பத்தின்படி காடவராயன், சோழ அரசர்களுக்கு எதிராக செயல்பட்டார். இதே போன்று மகத சிற்றரசனான வாணகோவரையனும் தனிநாடு அமைக்க ஆசைகொண்டு சோழ அரசுக்கு எதிராக செயல்பட்டார். இவர்கள் மற்ற சில சிற்றரசர்களது மறைமுக ஆதரவையும் பெற்று சோழ நாட்டிற்கெதிராக பாண்டியர்களுக்கு மறைமுக உதவிகளைச் செய்து வந்திருக்கின்றனர்.

ஒப்பந்தக் கல்வெட்டு
இவர்கள் தங்களுக்குள், ஒப்பந்தங்கள் செய்துகொண்டு செயல்பட்டிருப்பதை சில கல்வெட்டுகள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழன் எனப்பட்ட எதிரிலிச்சோழ சம்புவரையன், பொன்பரப்பின வாணகோவரையன், குலோத்துங்க சோழ வாணகோவரையன், காடவராயனின் மைத்துணர் ஆகியோர் ஒன்றுகூடி தாங்கள் ஒற்றுமையுடன் செயல்படவும், எதிரிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் எனவும் உறுதியெடுத்துக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர், என்பதை குலோத்துங்க சோழனின் முப்பத்து மூன்றாம் ஆட்சியாண்டில் ஆறகளூர் காமேசுவரர் கோவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மூன்றாம் குலோத்துக் சோழன் மீது மகத சிற்றரசனாகிய வாணகோவரையன் பகைமை பாராட்டியதை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. கோப்பெருஞ் சிங்கனும் வாணகோவரையரும் சோழ நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.
சோழஅரசு உருவான காலத்திலிருந்தே சோழர்-பாண்டியர்களுக்கிடையில் தொடர்ந்து ஒயாது போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன.
ஒரு சில அரசர்களைத் தவிர அநேகமாக அனைத்து சோழ அரசர்களும் பாண்டியருடன் போர் புரிந்துள்ளனர். கி.பி.1216-ம் ஆண்டில் பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்ற மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1219-ல் வலிமைபொருந்திய பெரும்படை திரட்டிவந்து சோழ நாட்டின்மீது போர்தொடுத்து அப்போது சோழ அரசனாயிருந்த மூன்றாம் இராசராசனை வென்றார். தவிர அப்போரின்போது சோழ நாட்டில் ஏராளமான அழிவுகளையும் ஏற்படுத்தினார்.
என்றாலும், சோழநாட்டை பாண்டிய நாட்டு அரசுக்குட்பட்ட திறை செலுத்தும் ஒரு சிற்றரசாக அங்கீகரித்து, மூன்றாம் இராசராசனிடமே சோழ நாட்டை மீண்டும் ஒப்படைத்து அவரையே ஆளச்செய்தார். அவ்விதமே இராஜராஜன் சோழநாட்டை ஆட்சி செய்யத் துவங்கியிருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் பாண்டிய மன்னனுக்கு வரி செலுத்த மறுத்துவிட்டார். அதனால் வெகுண்டெழுந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன்.கி.பி.1231-ம் ஆண்டில் மீண்டும் சோழ நாட்டின்மீது படையெடுத்தார். அப்போரில் தோல்வியுற்ற இராஜராஜன், தனது குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினருடன் தனது நட்பு நாடான குந்தளநாடு நோக்கிப் பயணித்தார்.” என்று கூறினார்.

மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்திய சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன்
“குந்தள நாடு நோக்கி விரைந்த மூன்றாம் இராஜராஜனை தெள்ளாறு அருகே வழி மறித்த கோப்பெருஞ்சிங்கன், இராஜராஜனையும் அவரது சுற்றத்தாரையும் சிறை பிடித்து, தனது தலைநகரான சேந்தமங்கலத்துக்கு இழுத்து வந்து சிறையிலிட்டதுடன், சோழ நாட்டின் சில பகுதிகளை அழிக்கவும் முற்பட்டார். மூன்றாம் இராஜரானுக்கு முன்புவரை ஒவ்வொரு சோழ அரசரும் பெரும்படை திரட்டிக் கொண்டு சென்று எத்தனையோ நாடுகள் மீது போர்தொடுத்து வென்றுள்ளனர், மற்றும் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களையெல்லாம் விரட்டியடித்துள்ளனர். அப்போதெல்லாம் சிற்றரசர்கள் அரசனுக்குப் பக்க பலமாக நின்று போரிட்டு வந்திருந்தனர் .
ஆனால் போர்க்களத்தில் வலுவிழந்து அடைக்கலம் நாடி வேற்று நாட்டுக்கு சென்ற சோழ அரசனை, அவரின் கீழ் ஆட்சி செய்த சிற்றரசன் ஒருவராலேயே சிறை பிடிக்கப்படும் அவலமும் நேர்ந்தது.
மூன்றாம் ராஜராஜன் கைது குறித்த தகவல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள வையலூர் என்னுமிடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு விவரிக்கிறது. போர்க் கைதிகளை அடிமைப்படுத்தியதற்கு அடையாளமாக அவர்களைச் சிறைபிடித்த மன்னன் அவர்களது உடலில் தனது அரச முத்திரையை பொறிப்பது வழக்கம். அதன்படியே கோப்பெருஞ்சிங்கன் தனது அரச சின்னமான காளையை இராஜராஜன் உடலில் பொருத்தியுள்ளான்.” என்று அவர் கூறினார்.

இராஜராஜன் சிறைமீட்பு
போசள நாட்டு அரசனான வீர ராமநாதன் என்பவரது மகள் மூன்றாம் இராஜராஜனின் மனைவியாவார். எனவே இராஜராஜன் சிறைபிடிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கோபமடைந்த போசள அரசனான இரண்டாம் வீர நரசிம்மன், இராஜராஜனை சிறைமீட்பு செய்து, அவரை மீண்டும் சோழ அரசனாக அமரவைத்தார். கடலூர் அருகிலுள்ள திருவயிந்திபுரம் என்னும் ஊரில் உள்ள தேவநாதசுவமி கோவிலில் போசள தளபதிகள் பொறித்த கல்வெட்டு மற்றும் கத்யகாணாமிர்தம் என்னும் நூலில் பதிவுபெற்ற செய்திகள் ஆகியவை இராஜராஜனை மீட்பதற்காக நடைபெற்ற போர்கள் குறித்து விரிவான செய்திகளைக் குறிப்பிடுகிறது.
அவற்றின்படி அறியப்படும் செய்திகள் பின்வருமாறு:
“கோப்பெருஞ்சிங்கனை வென்று இராஜராஜனை மீட்காமல் எக்காளம் ஊதுவதில்லையென வீர சபதம் எடுத்த வீரநரசிம்மன், துவாரகசமுத்திரத்திலிருந்து கிளம்பி இராஜராஜனுக்கு எதிரான சோழ குறுநில அரசர்களை அழித்து இராஜராஜனை மீட்டு சோழநாட்டின் அரியாசனத்தில் அமர்த்தி வருமாறு தனது தளபதிகளான தண்டினகோபன் ஜெகதொப்பகண்டன். அப்பன்னதன்னாக்கன் மற்றும் கொப்பய தன்னாக்கன் ஆகியவர்களுக்கு ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் துவாரக சமுத்திரத்திலிருந்து கிளம்பி வழியிலுள்ள மகதநாட்டை அழித்து, அங்கிருந்த பெண்டு பிள்ளகள் பொருள் ஆகியவற்றைக் கைக்கொண்டு அவர்களை, போசள மன்னனின் ஆணைப்படி பாச்சூரில் விட்டனர்.
பின்னர் கோப்பெருஞ்சிங்கன் தங்கியிருந்த எள்ளேரி மற்றும் கலியூர்மூலை ஆகிய ஊர்களையும் சோழஅரசன் தங்க வைக்கப்பட்டிருந்த தொழுதூரையும் அழித்தனர். கோப்பெருஞ்சிங்கனின் படை முதலிளான வீரசிங்க நாடாள்வான், சீனத்தரையன், ஈழத்துராஜா, பராக்கிரமபாகு ஆகிய நால்வரையும் கொன்று அவர்களது குதிரை களையும் கைப்பற்றிக்கொண்டு, பின்னர் சிதம்பரம் கோவிலில் வழிபட்டனர்.
பின்னர், தொண்டைமாநல்லுர், திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவக்கரை மற்றும் பல ஊர்களை அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கிலும், சேந்தமங்கலத்தும் கிழக்குப் பகுதிகளிலும் அழிவு வேலைகள் மேற்கொண்டனர். மேலும் முன்னேறி பெண்களைப் பிடித்துக்கொண்டும், கொள்ளை அடித்தும், பின் தலைநகரான சேந்தமங்கலத்திற்கு முன்னேறிச் சென்று அவ்வூரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்ட கோப்பெருங்சிங்கன் இராஜராஜனையும் அவரது குடும்பத்தினரையும் ஒப்படைப்பதாக போசள அரசனுக்குத் தூதுவிட்டு அதன்படி, அவர்களை விடுவித்து போசள தளபதிகளிடம் ஒப்படைத்தார்.
அதனையடுத்து போசளர் ஆதரவுடன் மூன்றாம் இராஜராஜன் சோழ அரசனாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். மேலும் போசள அரசனது படையின் ஒரு பிரிவு சோழநாட்டில் நிலையாக நிறுத்திவைக்கப்பட்டு, பிரச்சனைகள் எழுந்தபோதெல்லாம் தலையிட்டு அடக்கிவைத்தது.
அதனால் மூன்றாம் இராஜராஜன் மீதமுள்ள தனது ஆயுட்காலம் முழுவதும் நிம்மதியாக ஆட்சிசெய்தார்.” என்று அந்த கல்வெட்டு கூறுகிறது.
தொடர்ந்த போர்கள்
மூன்றாம் இராஜராஜன் சிறையிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் ஆட்சியலமர்த்தப்பட்ட பின்னரும் போசளர்களுடன் கோப்பெருஞ்சிங்கன் சோழநாட்டுப் பகுதிகளில் சில போர்களை நடத்தியதை சில கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீசுவரர் கோவிலில் இரண்டாவது கோபுரவடக்கு நுழைவு வாயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில், `பெரும்பலூர் யுத்தகளத்தில் போசளர்களுடன் நடைபெற்ற போரில் போசள தளபதிகளான கேசவ ஹரிஹர தண்ட நாயக்கன் மற்றொரு நாயக்கன் ஆகியவர்களை கோப்பெருஞ்சிங்கனது படையினர் கொன்று விட்டதாகவும், அதற்குப் பரிகாரமாக கற்கள் பதித்த பொன்னாலான ஒரு நெற்றிப்பட்டத்தினை திருமுதுகுன்றமுடைய நாயனாருக்கு காணிக்கையாக கோப்பெருஞ்சிங்கன் அளித்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பலூர் என்பது தற்போதைய பெரம்பலூர்தான். இக்கல்வெட்டில் `பெரும்பலூர் யுத்தகளத்’தில் மேற்படி போசள தளபதிகள் கொல்லப்பட்டனர் என்று தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பெரம்பலூரிலும் போசளர் மற்றும் கோப்பெருசிங்கன் ஆகியோர்களது படைகளுக் கிடையில் போர் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி படுத்தப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கன் தனது இறுதி காலத்தில் வழிபாட்டில் ஆர்வம் கொண்டு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இசை தரும் கற்குதிரைகள்
தொடர்ந்து உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித்குமார், கோவிலுக்கு அருகே இருந்த ஒற்றையடிப்பாதை வழியே, முட்காடுகள் நடுவே, சிறிது தூரம் அழைத்துச் சென்றார். அந்த இடம் அக்கால மக்கள் பயன்படுத்திய மிகப்பெரிய குளமாகும். அதன் அருகிலேயே இரண்டு குதிரை சிலைகள் காணப்பட்டன. அதில் ஒன்று சிதைந்திருந்தது. அதைப் பற்றி அவர் விரிவாகக் கூறினார்.
“மன்னர்கள் காலத்தில் இசை மிகவும் போற்றப்பட்டது. பல்வேறு இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன. இதற்கும் மேலாக, ஏழு ஸ்வரங்களை எழுப்பும் விதமாக திருக்கோயில்களில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், சுசீந்திரம் தாணுமாலாயன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் திருக்கோயில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், தர்மபுரி மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில், ரிஷிவந்தியம் அந்த நாரீஸ்வரர் திருக்கோவில், தெலங்கானா மாநிலம், வாரங்கல்லை அடுத்துள்ள இராமப்பா திருக்கோயில், கர்நாடக மாநிலம் ஹம்பி விஜய விட்டல் திருக்கோயில் என பல்வேறு இடங்களில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் மணிமகுடமாக, இசையை எழுப்பும் இசைக் குதிரைகள், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலத்தில் காடவராய மன்னர்கள் காலத்தில் கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட இந்த இசைக்குதிரைகள் தான் அது.
இந்த இசைக் குதிரைகள் பற்றிகுறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த இரண்டு இசைக்குதிரைகளும், மூன்றாம் இராஜராஜசோழனைச் சிறையிட்ட காடவராய மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் உருவாக்கப்பட்டது. இவை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் குதிரைச் சிற்பங்களின் முகம், காது, முதுகு என எங்குத் தட்டினாலும் வெவ்வேறு விதமான ஓசை வரும்,” என்று ஒரு சிறிய கல்லை எடுத்துத் தட்டி காண்பித்தார்.
“காடவராய அரசர்களின் கலை திறனுக்கு இது மிக பெரிய சான்றாகும். அதேபோல் நீர் மேலாண்மையிலும் காடவராயர்கள் சிறந்து விளங்கினார்கள்.
கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரி திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி என பல இடங்களிலும் நீர்மேலாண்மை பணிகளை காடவராயர்கள் செய்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல் அக்காலத்தில் நாடு என அழைக்கப்படும் தற்போதைய திருவண்ணாமலை, கடலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை காடவராயர்களே ஆட்சி புரிந்தனர்” என்றும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்