நீங்கள் கார்/பைக் வாங்க வேண்டுமென்றால், டிசம்பர் மாதத்தைத் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்! (வெள்ளமெல்லாம் வடிஞ்ச பிறகுதான்!) இந்த இயர் எண்டில்தான் வாகன நிறுவனங்கள் நல்ல தள்ளுபடி தருவார்கள். ஆனால், இதில் ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் – நீங்கள் வாகனத்தை ரீ–சேல் செய்யும்போது, மாடலின் தயாரிப்பு வருடம் குறையும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஓலா நிறுவனம், போன மாதம்தான் விலை மலிவாக S1 எக்ஸ் ப்ளஸ் (X+) எனும் ஸ்கூட்டரைக் கொண்டு வந்தது. அப்போது இதன் விலை 1.09 லட்சம் இருந்தது. இப்போது December to Remember எனும் காம்பெய்னை நடத்தி வருகிறது ஓலா. அதன் அடிப்படையில், இப்போது S1 X+ ஸ்கூட்டருக்கு மேலும் 20,000 ரூபாய் டிஸ்கவுன்ட் அளித்து வருகிறது ஓலா. இதனால், இதன் விலை 89,999 ரூபாய் ஆக இருக்கிறது. (இவை எல்லாமே எக்ஸ் ஷோரூம் விலைதான்) இதிலேயே நீங்கள் ஓலாவின் கம்யூனிட்டி மெம்பராக இருந்தால், இன்னும் தள்ளுபடி காத்திருக்கிறது. இந்த ஆஃபர் இந்த டிசம்பர் வரைக்கும்தான்.
ஓலாவில் ஏற்கெனவே 2 மாடல்கள் விற்பனையாகி வருகின்றன. S1 ப்ரோ (Second Gen), S1 ஏர். இதில் S1 ப்ரோ மாடல் செம காஸ்ட்லி. இது 1.47 லட்சம். ஏர் மாடலின் விலை 1.19 லட்சம். இந்த ஸ்கூட்டர்களுக்கும் கேஷ்பேக், வாரன்ட்டி ப்ளான் என்று சில தள்ளுபடிகள் அளித்துவருகிறது ஓலா. நீங்கள் யாராவது நண்பர்களை ஓலா ஸ்கூட்டர் வாங்கச் சொல்லி ரெஃபர் செய்தால், உங்களுக்கு 2,000 ரூபாயும், ரெஃபரிக்கு 3,000 ரூபாயும் கேஷ்பேக் ஆஃபர் தருகிறதாம் ஓலா

இந்த நிலையில் ஓலாவின் விலை குறைந்த S1 X+ ஸ்கூட்டர் பற்றி ஒரு ஷார்ட் லுக் பார்க்கலாம்!
S1 X+ ஸ்கூட்டர் போன மாதம்தான் ஓலாவால் லாஞ்ச் செய்யப்பட்டது. இந்த டிசம்பர் மாதம் இதன் டெலிவரியையும் பரபரப்பாகத் தொடங்கிவிட்டார்கள். ஓலாவின் செகண்ட் ஜென் ப்ளாட்ஃபார்மில்தான் இது தயாராகி இருக்கிறது. இதில் 3kW பேட்டரி பேக் இருக்கிறது. இதன் சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச், IDC படி (Indian Drive Cycle) 151 கிமீ தூரம் என்று க்ளெய்ம் செய்யப்படுகிறது. இது ரியல்டைமில் 120 கிமீ கொடுத்தாலே நல்ல வரவேற்பு கிடைக்கும். ‘நாங்களே சொல்றோம்’ என்று ஓலா இதற்கான உண்மையான ரேஞ்ச்சை க்ளெய்ம் செய்கிறது. இதில் நார்மல் மோடில் 100 கிமீ–யும், எக்கோ மோடில் 125 கிமீயும் கிடைக்கும் என்கிறது ஓலா. பார்க்கலாம்! இதிலும் ஸ்போர்ட் மோடு உண்டாம்!
இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், மற்ற ஸ்கூட்டர்களைப்போலவே 34 லிட்டர் என்பது தாராள இடவசதியே! இதில் எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 ப்ரோவில் இருப்பதுபோல் TFT டிஸ்ப்ளே இருக்காது. சாதாரண 3.5 இன்ச் கொண்ட LCD டிஸ்ப்ளேதான் உண்டு. இதில் Turn by Turn நேவிகேஷன் சிஸ்டம் உண்டு. ரிவர்ஸ் கியரும் கொடுத்திருக்கிறார்கள்.


மற்றபடி இதன் பவர்டிரெயின்களைப் பொருத்தவரை எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் உள்ள அதேபவர் 6kW பவர் கொண்ட எலெக்ட்ரிக் ஹப் மோட்டார்தான். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வேகம். 0–40 கிமீ–யை வெறும் 3.3 விநாடிகளில் கடந்து விடும் என்கிறார்கள். இன்னும் நாம் இதை ஓட்டிப் பார்க்கவில்லை. இன்னும் சில நாட்களில் இதன் ரேஞ்ச்சும், ஸ்பீடும் தெரிந்துவிடும்.
இந்த பேட்டரியை வீட்டில் உள்ள சாதாரண சார்ஜரில் சார்ஜ் செய்ய 7.5 மணி நேரம் ஆகும். இந்த ஓலா S1 X லைன்அப்பிலேயே S1 X 3kW மற்றும் S1 X 2kW என இன்னும் சில வேரியன்ட்களின் புக்கிங்கையும் தொடங்கியிருக்கிறது.
இந்த டிசம்பரில் எப்படியாச்சும் நவம்பரில் விற்ற 30,000 ஸ்கூட்டர்களை ஓவர்டேக் செய்து விற்றுத் தள்ளிவிட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது ஓலா.