தக்கோலப் போர்: சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய ராஷ்டிரகூட தளபதியின் வியூகம்

தக்கோலப் போர்: சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய ராஷ்டிரகூட தளபதியின் வியூகம்

பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

  • எழுதியவர்,மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக

சோழப் போர்களில் கடல் கடந்த கடாரப் போர், ஈழப் போர், கம்பளிப் போர், பூண்டூர்போர், முடக்காற்று போர், பொன்மாரி போர், காந்தளூர் சாலை போர், கலிங்கப் போர் என போர்க்களங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். வெற்றி பெற்ற சோழர்களுக்கு, மறக்க முடியாத தோல்விகளைத் தந்த போர்க்களங்களும் உண்டு.

அதில் முக்கியமானதுதான் சோழர்களின் எல்லைப் பரப்பை குறுகச் செய்த தக்கோலப் போர். இளவரசன் ராஜாதித்தன் தலைமையில் நடைபெற்ற தக்கோலப் போரில் அவர் கொலை செய்யப்பட்டார்.

யானை மேல் துஞ்சினத்தேவர் என்று அழைக்கப்படும் இளவரசர் ராஜாதித்தன் எப்படிக் கொலை செய்யப்பட்டார். வெற்றி பெரும் நிலையில் இருந்த சோழப் படையை திடீரென நிலைகுலையச் செய்ய திட்டம் தீட்டியது யார்? அவர் அதற்காகப் பெற்ற வினோதமான பரிசு என்ன?

இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்…

சோழப் படைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்த திருநாவலூர்

சோழ அரசன் இடைக்கால வீழ்ச்சி

சோழ இளவரசன் ராஜாதித்தன் தலைமையிலான படை பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதிக்கு விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை வரலாற்று ஆர்வலர் லலித் குமார் ஆகியோருடன் சென்றோம்.

முதலில் திருநாவலூர் சிவன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தக் கட்டுமானங்கள் மற்றும் அதிலுள்ள கல்வெட்டுகள் குறித்து விரிவாகப் பேசினார் பேராசிரியர் ரமேஷ்.

திருநாவலூர்

தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள திருநாவலூர் சிவன் கோவில் பாராந்தக சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. இதில் சோழப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. குறிப்பாக பராந்தக சோழனின் மகன் இளவரசன் ராஜாதித்தனின் கல்வெட்டுகள், அவருடன் இங்கு தங்கியிருந்த படைத் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் செயல்கள், தானங்கள் குறித்த கல்வெட்டு இங்கு அதிகம் உள்ளதாக அவர் விளக்கினார்.

அதேபோல் அருகிலுள்ள திருமுண்டீஸ்வரம் கோவிலிலும் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தானங்கள் குறித்தும், ஏரி, குளங்களின் கட்டுமானங்கள் குறித்தும் விவரிக்கின்றன.

“தக்கோலப் போருக்குத் தயாராகும் நிலையில் பராந்தக சோழனின் ஆணைக்கு இணங்க இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படை வீரர்கள் தங்கியிருந்த இடம் இந்த பகுதி. மேலும் போர்களற்ற காலங்களில் வீரர்களைக் கொண்டு கோவில் கட்டுமானங்கள், ஏரி மற்றும் குளங்கள் புணரமைப்புப் பணிகளையும் இளவரசர் ராஜாதித்தன் செய்துள்ளதற்குச் சான்றாக இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன,” என்றார் பேராசிரியர் ரமேஷ்.

பத்து ஆண்டுகளாக முகாமிட்டிருந்த ராஜராஜன்

ராஜராஜன்

“ராஷ்டிரகூடர்கள் சோழ அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதை ஒற்றர்கள் மூலமாக அறிந்த பாராந்தக சோழன் கி.பி.936இல் வடதிசை காவல் பொறுப்பைத் தனது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ராஜாதித்தனிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் ராஜாதித்தன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு தன் படையுடன் முகாமிட்டிருந்தார்.

இவருடன் இவரின் படைத்தலைவன் சேரநாட்டு நந்திக்கரைப்புத்தூரை சேர்ந்த வெள்ளன்குமரன் மற்றும் பராந்தகரின் மகன்களும், ராஜாதித்தனின் தம்பிகளுமான கண்டராதித்தரும், அரிஞ்சய சோழனும் உடன் இருந்தனர்,” என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.

கிபி. 949இல் இராஷ்டிரகூட அரசன் தம் படைகளைப் பன்மடங்கு பெருக்கியதோடு அல்லாமல், தனது மைத்துனான கங்க அரசன் பூதுகனையும், முன்னாளில் பராந்தக சோழனால் நாட்டை இழந்த வைதும்ப மற்றும் பாணர் படைகளையும் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் அவர்.

“அந்தப் பெரும்படையுடன் தொண்டை நாட்டின் வட எல்லையை அடைந்தான். இந்தப் போரை ஏற்கெனவே எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாதித்தன் தனது பெரும்படையுடன் எதிரிப் படைகளை தக்கோலம் என்னும் ஊரில் சந்தித்தான். (தற்போது தக்கோலம் என்னும் ஊர், இப்போதுள்ள அரக்கோணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது).

இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இந்தப் போரில் யாருக்கு வெற்றி என்று கணக்கிட முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் போர் புரிந்தனர்.”

அப்போது, இராஷ்டிரகூட படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமிருந்த போதிலும் சோழ வீரர்கள் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சனாய் அவர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறியதாகவும் அவர் விளக்கினார்.

போரின் திசை மாறி சிதறிய சோழ படைகள்

சோழ படைகள்

ராஜாதித்தன் இப்போரில் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் விவரித்தார் பேராசிரியர் ரமேஷ்.

“அவனது தம்பிமார்களும், படைத் தலைவனும் நாலாபுறமும் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தி பிணக் குவியல்களாக்கினர். இந்த நேரத்தில் கங்க மன்னன் பூதுகன், போரின் நிலையை உணர்ந்து தனது படைகளுக்கு ராஜாதித்தனை மட்டும் குறிவைக்கும் படியும், தனது படைத் தலைவனில் ஒருவனான மணலேரா என்பவனை அழைத்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்குமாறும் கட்டளையிட்டான்.”

பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, மணலேரா தனது மன்னர் கட்டளையை ஏற்று சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜாதித்தனை தனிமைப்படுத்தினான். கங்க மன்னனும் அவரது படைகளும், ராஜாதித்தன் இருக்கும் இடத்திற்கு ஏதுவாகச் செல்ல வழிவகை செய்தான்.

பூதுகன் ராஜாதித்தனை நோக்கி முன்னேறி, தன்னிடம் இருந்த அம்புகளைச் சரமாரியாக ராஜாதித்தனை நோக்கித் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத ராஜாதித்தன் அம்புகளைத் தடுக்க முயன்றார். அந்த அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைக்கவே அவர் அந்தக் கணத்திலேயே உயிரிழந்தார்.

இதன் விளைவாக தலைவன் இல்லாத படைகள் குழப்பத்திற்கு உள்ளானதாகவும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராஷ்டகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் வெற்றி வாகை சூடினார் என்றும் யானை மீது அமர்ந்து “வீரப் போரிட்டு இறந்த ராஜாதித்தன் யானை மேல் துஞ்சினத்தேவன்” என்று அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் ரமேஷ் விளக்கினார்.

சோழர்களின் செப்பேடுகளும் ராஜாதித்தனை “யானை மேல் துஞ்சிய தேவர்” என்றே அழைக்கின்றன. இதன் மூலம் ராஜாதித்தனை பூதுகன் கொன்றது உறுதியாகிறது. இந்தப் போருக்குப் பிறகு தனது பட்டத்து இளவரசனை இழந்த சோழ நாட்டின் எல்லை குறுகியது.

தொண்டை மண்டலம் முழுமையும் மூன்றாம் கிருஷ்ணன் வசமானது. இந்த வெற்றியின் பேரால் அவரை அவரது கல்வெட்டுகள் “கட்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்” எனப் புகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தக்கோலப் போர் நடந்தது ஏன்?

போருக்கு முக்கிய காரணங்கள்

பேராசிரியர் ரமேஷ் விளக்கிய வரலாற்றின்படி, பராந்தக சோழனின் தந்தை ஆதித்தனின் பட்டத்தரசி இளங்கோபிச்சுவின் புதல்வன் முதலாம் கன்னர தேவனுக்கு ஆட்சி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பராந்தகன் தன்னுடைய மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்தது, ராஷ்டிரகூட உள்நாட்டுப் பிரச்னையில் மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராக பராந்தகன் போர் புரிந்தது ஆகியவை இந்தப் போருக்கான காரணங்கள்.

“பராந்தகன் தனது ஆட்சியில் தன் அண்டை நாடான பாண்டியர், ஈழம், வாணர்கள், வைதும்பர்கள், கீழை சாளுக்கியம் ஆகிவற்றை வென்று அவர்கள் அனைவரையும் எதிரிகளாக்கினார். இதனால் தக்கோலப் பெரும்போரில் இவர்கள் பராந்தகன் படைகளுக்கு உதவ வரவில்லை.”

தக்கோலப் போர் நடக்க யார் காரணம்?

தக்கோலப் போர்

தக்கோலப் போருக்கான காரணங்களை பேராசிரியர் ரமேஷ் விவரித்தார். ஆனால், இந்தப் பெரும்போர் நடப்பதற்குத் தொடக்க காரணமாக இருந்தது யார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதுகுறித்து விளக்கினார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித் குமார்.

ராஜாதித்தன் தக்கோலப் போரில் கங்க மன்னன் பூதுகனால் கொல்லப்பட்டான். வெற்றி பெறும் நிலையிலிருந்த சோழப் படைகள் சிதறின. வெற்றிக் கனியை ருசித்து வந்த சோழப்படை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்தது.

“ராஜாதித்தனின் பாட்டனார் முதலாம் ஆதித்தன் காலத்தில் தனது ராஷ்டிரகூட நண்பன் இரண்டாம் கிருஷ்ணன் தனக்குப் பல போர்களில் உதவி செய்ததன் பொருட்டு, அவரது மகள் இளங்கோபிச்சுவை மணமுடித்து பட்டத்தரசி ஆக்கினார்.

இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தன் நண்பன் மற்றும் மாமனான இரண்டாம் கிருஷ்ணனின் மற்றொரு பெயரான கன்னர தேவன் என்று பெயரைச் சூட்டினார்.

ஆதித்த சோழனின் மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவிக்குப் பிறந்தவர் பராந்தக சோழன். சில அரசியல் காரணங்களால் ஆதித்த சோழனுக்குப் பிறகு பராந்தக சோழர் அரியணையில் அமர்த்தப்பட்டார்,” என்று தககோலப் போரின் தொடக்கப் புள்ளியை விவரித்தார் லலித் குமார்.

ஆனால், பட்டத்தரசி இளங்கோபிச்சுவுக்கு பிறந்த கன்னர தேவரையே அரசனாக்கி இருத்தல் வேண்டும் என்பதுதான் முறை.

“இதனால் கன்னர தேவனின் உரிமையை ஆதரித்து ராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரில் ராஷ்ட்டிரகூட அரசுக்கு ஆதரவாக வாணர்களும் வைதும்பர்களும், சோழப் பேரரசின் மன்னரான பராந்தகனுக்கு ஆதரவாக கங்க அரசன் பிரித்திவிபதி, கொடும்பாளூர் மற்றும் கீழபழுவேட்டரயர்கள் போரில் களமிறங்கினர். மிக முக்கியமான இந்தப் பெரும்போரில் சோழர்களே வென்றனர்.”

ராஷ்டிரகூடர்களுடன் மீண்டும் திருமண உறவு

பெங்களூரூ தாமஸ்

சிறிது காலம் கழித்து கிபி.913இல் இரண்டாம் கிருஷ்ணன் இறந்த பிறகு இவரது பேரன் மூன்றாம் இந்திரன் ராஷ்டிரகூடத்தின் மன்னரானார். இவர் தனது மகனான நான்காம் கோவிந்தனுக்கு கிபி.918இல் இளவரசுப் பட்டம் சூட்டியதாகத் தெரிவித்தார் லலித் குமார்.

“இந்த இளவரசனுக்கு, பராந்தகர் தனது மகளான வரீமாதேவியை மணமுடித்ததோடு அல்லாமல் ராஷ்டிரகூடரின் நட்பை மீண்டும் மலர வைக்க முயன்றார். ஆனால் விதி வேறொரு பகைமைக்கு வித்திட்டது. அதாவது அந்த நேரத்தில் கீழைச் சாளுக்கிய அரசு இரண்டு பிரிவாகி வடதிசை பகுதியை யுத்த மல்லனும், தென்திசைப் பகுதியை இரண்டாம் வமீனும் ஆண்டனர்.

அவர்கள் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு போர்க்களத்தில் இறங்கினர். இதில் நான்காம் கோவிந்தன் யுத்த மல்லனுக்கு ஆதரவளித்தான். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினான். இதன் காரணமாக, மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்ட்டிரகூடத்தில் கலகம் செய்து தனது தந்தை மூன்றாம் அமோஹவர்ஷணனை (நான்காம் கோவிந்தனின் சிறிய சித்தப்பா) ராஷ்டிரகூடத்தின் அரசராக்கினான். இதனால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நான்காம் கோவிந்தன் தன் மாமனான பராந்தக சோழனிடம் சரணடைந்தான்,” என்றும் அவர் விளக்கினார்.

மேலும், “இதே நேரத்தில் மூன்றாம் கிருஷ்ணன் கங்க நாட்டில் ரசமல்லனை கொன்று இரண்டாம் பூதுகனை கங்க அரசின் மன்னராக்கி, தனது தமக்கையை பூதுகனுக்கு மனம் முடித்து உறவினரானான். இதனால் கங்க அரசன் பூதுகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்தான்.

தனது மருமகனை நாட்டை விட்டுத் துரத்தியதால் கடும் கோபத்தில் இருந்த பராந்தகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராகவும், தன் மருமகன் நான்காம் கோவிந்தனுக்கு ஆதரவாகவும் போரிட முடிவு செய்தார். ராஷ்டிர கூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான பகை அதிகரித்தது.

அந்தப் போர் தக்கோலத்தில் நடைபெற்ற போராகும். இதில்தான் இளவரசன் ராஜாதித்தன் கொலை செய்யப்பட்டு சோழப் பேரரசு இடைக்கால வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார். இந்தப் போரில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பைப் பெருமளவில் விரிவுபடுத்தினர்,” என்றும் தெரிவித்தார் லலித் குமார்.

ராஜாதத்தினை கொன்ற படைத்தளபதி பெற்ற பரிசு என்ன?

ரமேஷ்

போர்க்களங்களில் ரகசிய திட்டங்களைத் தீட்டி வெற்றி வாகை சூட உதவுவோர் அரசர்களிடம் இருந்து நாடுகள், பொன், பொருள் என ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தக்கோலப் போரில் ராஜாதித்தனைக் கொன்ற ராஷ்டிரகூட படைத் தளபதி பெற்ற பரிசு வினோதமானது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் அலெக்சாண்டர்.

ராஷ்ட்ரகூடர் கங்கர் வரலாற்றில் தக்கோல போர் பற்றிய குறிப்புகளை தாங்கிய ஆவணமாக அதக்கூர் நடுகல் திகழ்வதாகக் கூறுகிறார் அவர்.

“மைசூர் மாவட்டத்தில் மாண்டியா என்ற ஊருக்கு அருகே அதக்கூர் கிராமத்தில் இந்த நடுகல் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1898ஆம் ஆண்டில் அதக்கூர் நடுகல் ஹல்டிஷ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியில் நடுகல், முறையாக கல்வெட்டு நகல் எடுக்கப்பட்டு பெங்களூர் அருங்காட்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

தக்கோலம் போரில் ராஷ்ட்ரகூட அரசர் கன்னர தேவன் மற்றும் இரண்டாம் பூதுகன் தலைமையில் ராஷ்ட்ரகூட படை சோழ அரசர் ராஜாதித்தினை வெல்கிறது. இந்தப் போரில் ராஜாதித்தன் வீரமரணம் அடைகிறார்.”

இரண்டாம் பூதுகனின் சேவகனான படைத்தளபதி மணலேரா என்பவன் தக்கோலப் போரில் வீரத்துடன் போரிட்டு பூதுகனின் வெற்றிக்கு உதவிய காரணத்தால் இரண்டாம் பூதுகன் மணலேராவிற்கு பரிசளிக்க விரும்பியதாகக் கூறினார் தாமஸ் அலெக்சாண்டர்.

பரிசாக சில கிராமங்களை வழங்கியபோது, அதற்குப் பதிலாக பூதுகன் வளர்த்து வந்த காளி என்னும் பெயர் கொண்ட மணலேரா வேட்டை நாயைக் கேட்டுள்ளார். பூதுகனும் தனது நிழல் போல் வளர்த்து வந்த காளி என்ற நாயை அவருக்குப் பரிசாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

லலீத் குமார்

எஜமானனுக்காக போரிட்டு மடிந்த வீர நாய் காளி

 வீர நாய் காளி

வேட்டை நாயைப் பரிசாகப் பெற்ற மணலேரா காளி என்ற அந்த நாயை மிகவும் பாதுகாப்பாகவும் பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் தாமஸ் அலெக்சாண்டர் கூறினார். இந்நிலையில், “கேலே நாட்டில் பெல்த்துர் என்ற மலைத்தொடரில் மணலேரா வேட்டைக்குச் சென்றபோது காளி ஒரு காட்டுப்பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு, மணலேராவை காப்பாற்ற மரணமடைகிறது.

“காளியின் வீரத்தின் நினைவாக மணலேரா அதக்கூர் சல்லேஸ்வரா கோவிலின் முன்பாக நடுகல் எழுப்பியுள்ளார். நடுகல்லுக்கு நில தானம், தினசரி பூஜை, நெல் நிவந்தம் ஆகியவற்றையும் வழங்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் அங்கு காணப்படுகின்றன.”

மேலும், “இந்த நில நிவந்தங்களை அழிப்பவர்கள், நடுகல் வழிப்பாட்டைத் தடை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காளியைக் கொன்ற பாவத்தைச் சுமப்பர்” என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

அந்தக் கல்வெட்டில், “சக வருடம் 872 எனக் குறிக்கப்படுகிறது, மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன் அமோகவர்ஷன் எனக் குறிக்கப்படுகிறார். தக்கோலா என்ற பெயர் தக்கோலம் என்ற ஊரைக் குறிப்பிடுள்ளது. ராஜாதித்தன் முவடி சோழ என்ற பட்டப்பெயருடன் சிறப்பிக்கப்படுகிறார்.”

தக்கோலப் போரில் வெற்றிப் பெற்றதன் பரிசாக இரண்டாம் பூதுகனுக்கு கன்னர தேவன் பானாவாசி, பேலவோளா, புரிகிரி, கிசுகாடு, பாகிநாடு போன்ற நாடுகளை வழங்குகிறார். பூதுகன் மணலேராவுக்கு அதக்கூர் கடியூர் என்ற கிராமத்தை வழங்குகிறார். அதக்கூர் நடுகல் பற்றி விரிவாக எபிகிராபிக்கா இன்டிகா தொகுதி 6இல் உள்ளது.

போர் வெற்றிக்காக அக்காலத்தில் கிராமங்களையும் ஊர்களையும் பொன் பொருளையும் பரிசாகப் பெற்றுக் கொண்டவர்களில் இருந்து மணலேரா முற்றிலும் மாறுபடுகின்றார். பூதுகனின் இந்த நாய் மிக பலம் பொருந்தியது எனவும் ஆக்ரோஷமானது, எஜமான விசுவாசம் உடையது எனவும் சில வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

சோழ மன்னர்கள்

ராஜாதித்தன் கொலைக்குப் பின் துறவியாக மாறிய சோழ வீரன்

தக்கோலப் போரில் சோழர்களை வீழ்த்தியதற்கு பரிசுகள் வழங்கப்பட்டதைப் போல் இளவரசர் ராஜாதித்தன் கொலை சம்பவத்திற்குப் பரிகாரமாக துறவியாக மாறிய சோழ வீரன் பற்றிய சுவாரசியமான தகவலை கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பி பி சி தமிழுடன் தொலைபேசியில் கூறினார்.

ராஜாதித்தன் கொல்லப்பட்ட தக்கோலப் போரில் பங்கெடுக்காமல் போனதற்குப் பிராயச்சித்தமாக சோழ வீரன் வல்லபன் என்கிற வெள்ளங்குமரன் துறவியாக மாறியதாக அவர் தெரிவித்தார். இதற்கான கல்வெட்டு, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் உள்ள இருமொழிக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்கொண்டு விளக்கியவர், “துறவியாக மாறிய போர் வீரன், கேரள இளவரசிக்கும் ராஜாதித்தனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனுக்கும் இடையிலான திருமணத்தைத் தொடர்ந்து சோழ நாட்டிற்குக் குடிபெயர்ந்த கேரளாவில் இருந்து வந்த படைத் தலைவன். இவர் ஏதோ சில காரணங்களுக்காக தக்கோலப் போரில் பங்கெடுக்க இயலவில்லை.

ஆகையால், தான் உயிருடன் இருந்தும் அந்தப் போரில் ஈடுபட்டு இளவரசரைக் காப்பாற்ற முடியவில்லை என வேதனைப்பட்டு துறவியாக மாறியதாக கல்வெட்டு விவரிக்கின்றது,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author