சோழர்களைப் போல செயற்கை ஏரிகள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் வெள்ளத்தை சமாளிக்க உதவுமா?
- எழுதியவர்,சாரதா வி
- பதவி,பிபிசி தமிழ்
40ஆயிரம் ஏரிகள் கொண்ட தமிழ்நாட்டில், கடந்த முப்பது ஆண்டுகளில் 4 ஆயிரம் ஏரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மழை வெள்ள பாதிப்பு என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், புதிய ஏரிகளை கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், இந்த கொள்ளளவை விட அதிகமான நீர் இந்த நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கிறது. அவை கொசஸ்தலையாற்றில் விடப்பட்டு, பின்பு கடலில் கலக்கிறது.
உபரி நீரை சேமித்து வைக்கவும், வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், நீர்த்தேக்க கொள்ளளவை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, 11.கி.மீ மேலே ராமஞ்சேரியில், 9.2 சதுர கி.மீ-ல் புதிய ஏரி அமைக்கப்படவுள்ளது. புதிய ஏரியை அமைக்க, அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
நகரி ஆற்றின் குறுக்கே, கட்டப்படவுள்ள இந்த ஏரி, 1.2 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இந்த ஆற்றுக்கு அதன் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆந்திராவில் உள்ள அம்மாபள்ளி அணையிலிருந்து நீர் கிடைக்கிறது.
இந்த ஏரியிலிருந்து அதிகபட்சமாக 90ஆயிரம் கன அடி நீர் விநாடிக்கு திறந்து விட முடியும் என்றும் மதிப்பீடு செய்யப்படுகிறது. புவி ஈர்ப்பு விசையின் மூலமாகவே புதிய ஏரியிலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைக்கும்.
சிங்கப்பூர் நகரம் கடந்த நாற்பது ஆண்டுகளில் எப்படி தனது நீர் நிலைகளை அதிகரித்துள்ளதோ அதே போன்று சென்னை நகரின் நீர் தேவைகளை எதிர்கொள்ள கூடுதல் நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
இந்த ஏரி குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல் வெள்ள தடுப்புக்கும் பயன்படும். கொசஸ்தலையாற்றின் கடைமடை பகுதிகளில் வெள்ள பாதிப்பை இந்த ஏரி தடுக்கக்கூடும். மொத்தம் 830 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் இத்திட்டத்தில் 180 ஹெக்டேரில் ஏரி அமையும் என திட்டமிடப்படுகிறது. இத்திட்டத்துக்கு 650 ஏக்கர் பாசன நிலங்களும் தேவைப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 850 கோடி. இதில் கிட்டத்தட்ட பாதி தொகை நிலங்களை எடுக்கவே ஒதுக்கப்படுகிறது.
வெள்ள பாதிப்புகள் தொடர்கதையாகி வரும் நேரத்தில், இது போன்று புதிய ஏரிகள், நீர் நிலைகள் உருவாக்குவது அவசியமாகிறது. இந்த நீர் நிலைகளை வெள்ள பாதிப்பை குறைப்பதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் தவிர்க்க உதவும்.
எனினும், இப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக ஏரிகள் அமைக்கப்படுவது புதிது அல்ல. பல நூற்றாண்டுகளாகவே ஏரிகள், நீர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றி வந்துள்ளன.
சோழர் ஆட்சிக் காலத்தை பார்க்கும்போது, அப்போதைய வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றியவை அன்றைய நீர் மேலாண்மை ஏற்பாடுகளே. ஆற்றில் பெருக்கெடுக்கும் நீர் வழிந்தோடுவதற்கு ஏராளமான கால்வாய்கள், அணைகள் கட்டப்பட்டிருந்தன என்றாலும் அதில் முக்கிய பங்கு வகித்தவை ஏரிகள் ஆகும். இவ்வாறு சோழர் காலத்தில் நிலவிய பொறியியல் அறிவின் காரணமாக வெள்ள பாதிப்பு மட்டுமல்ல, நீர் பற்றாக்குறையும் சமாளிக்கப்பட்டது.
போர் முடிந்து திரும்பிவந்த சுமார் 1 லட்சம் படை வீரர்களை ராஜா ஆதித்ய சோழன் அடுத்ததாக செல்ல உத்தரவிட்ட இடம் காட்டுமன்னார் கோயில். அங்கே மிகப்பெரிய ஏரியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய உத்தரவு. இவ்வாறு, கி.பி., 10ம் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரியாகும். ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த ஏரி செயல்பாட்டில் உள்ளது.
வீராணம் மட்டுமல்லாது வட தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரிய ஏரிகளை உருவாக்குவதில் சோழர்கள் முக்கிய கவனம் செலுத்தினார்கள்.
இப்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் 900க்கும் அதிகமான ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 600க்கும் அதிகமான ஏரிகளும், விழுப்புரத்தில் 800க்கும் அதிகமான ஏரிகளும், வேலூரில் 500க்கும் அதிகமான ஏரிகளும், கடலூரில் 200க்கும் அதிகமான ஏரிகளும் பொதுப்பணித்துறையின் பராமறிப்பில் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பான்மை சோழர் மற்றும் பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரி உள்ளிட்டவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அதே போல புதுக்கோட்டையில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க ‘தோரண வாய்க்கால்’ தொண்டைமான் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
சென்னைக்கு கைகொடுக்கும் ஏரிகள்
வீராணம் ஏரியை எடுத்துக் கொண்டால் இப்போதும் அது தமிழ்நாட்டிற்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. சென்னை பெருநகரத்திற்கும், கடலூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை அதிகரிப்பதாலும், அலுவலகங்கள் மற்றும் பிற கட்டுமானங்களுக்காக நீர்நிலைகள் அழிக்கப்படுவதால், நீராதாரங்கள் குறையத் தொடங்கின. அதனால் நீராதாரத்திற்காக தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சார்ந்திருக்கும் நிலைமை உருவானது.
நீர் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன்பிபிசி தமிழிடம் பேசுகையில் , “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர் மற்றும் பல்லவர் காலத்தில் வெள்ளம் மற்றும் வறட்சியை தவிர்க்க ஏராளமான ஏரிகள் தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டன. சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் பல பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. வேலூர் மாவட்டம், பாலாற்று பகுதியில் உள்ள மகேந்திரவாடி ஏரி, மகேந்திர வர்ம பல்லவ ராஜாவால் கட்டப்பட்டது. ஏரி என்பது அணை கிடையாது. இயற்கையாக இருக்கும் தாழ்வான நீர்பிடிப்பு பகுதியாகும். நீர் ஓட்டத்தில் அரை வட்ட வடிவமாக ஒரு ஏரி கட்டப்படும். அதன் கீழ் ஒன்று அல்லது ஒன்றரை கி.மீ தூரத்தில் அடுத்த ஏரி கட்டப்படும். அதன் கீழ் அடுத்தடுத்த ஏரிகள். இதுவே ஏரிகளைக் கொண்ட நீர் மேலாண்மையின் அடிப்படை ஆகும்” என்றார்.
பாலாற்று பகுதியில் உள்ள பாரம்பரிய ஏரிகள் அழிக்கப்பட்டது, சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைபொழிவு, நிலபரப்பு, வடிகால் முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் அவை ஒரே நீரியல் பகுதியாக கருதப்படுகிறது.
வட சென்னையின் வடிகாலாக கொசஸ்தலையாறு மற்றும் ஆரணியாறு இருக்கின்றன. மத்திய சென்னைக்கு கூவமும், தென் சென்னைக்கு செம்பரம்பாக்கம் வழியாக வரும் அடையாறும் வடிகாலாக இருக்கின்றன.
“பாலாற்றிலிருந்து நான்கு கால்வாய்கள் பிரியும். பாலாற்றின் வழியே 317 ஏரிகள் உள்ளன. அந்த நீர் சென்னைக்கும் வருகிறது என்பது பல பேருக்கு தெரியாது. பாலாற்று நீர், தூசி மாமண்டூரில் உள்ள ஏரிக்கு வந்து, ஸ்ரீபெரும்புதூரில் கடைசியாக இருக்கும் ஏரிக்கு வந்து, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைகிறது. அதே போன்று காவேரிப்பாக்கம் நீர் கூவம் ஆற்றுக்கு வந்து சேர்கிறது.”
ஏரிகளின் அமைப்பில் மாற்றம் தேவையா?
செம்பரம்பாக்கம் ஏரியை குளமாக மாற்றலாம் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன், “செம்பரம்பாக்கம் ஏரி நீர் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பாசனத்துக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது ஏரியை சுற்றி விவசாய நிலங்கள் இல்லை. எனவே அந்த ஏரியை குளமாக மாற்றிவிடலாம். அதாவது மேலும் ஆழமாக தோண்டி, நிலபரப்புக்கு கீழ் அமைப்பது குளம் ஆகும். ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள்- ஏரிக்கு எங்கிருந்தெல்லாம் நீர் வந்து சேர்கிறதோ அதன் பாதையை அறிவியல்பூர்வமாக கண்டறியலாம். ஏரிக்குள் நீர் நுழையும் பகுதியில், ஒரு மீட்டர் ஆழத்துக்கு சிறு வலைகள் அமைத்தால், நீரில் உள்ள வண்டல் மண், உள்ளே நுழைவதை தவிர்க்கப்படும். வெள்ள பாதிப்புகளும் குறையும்” என்றார்.
ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும், நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்பவையே முக்கியமான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்றாலும், நகரமயமாக்கலுக்கு ஏற்ற வேறு சில தீர்வுகள் இருக்கின்றன. அதீத வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் நாடுகள் சில இந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தி பார்க்கின்றன. சென்னையிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இடத்துக்கு ஏற்றாற்போல் இவற்றில் சிலவற்றை அமல்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நகரங்களின் மிகப்பெரிய சவால் இடப்பற்றாக்குறை ஆகும். இந்திய நகரங்கள் ஆனாலும் சரி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் ஆனாலும் சரி, எல்லாவற்றிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வளர்ச்சி திட்டங்கள், அதன் காரணமாக அதிக கட்டங்கள், அதன் காரணமாக நீர்வழி பாதைகள் தடைபடுதல், வெள்ள பாதிப்பு ஏற்படுதல்- இவை தான் சென்னை உள்ளிட்ட நகரங்களின் நிலையாக உள்ளது.
நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றுவது சாத்தியமில்லை. சென்னையில், பள்ளிகரணை, முடிச்சூர் போன்ற பகுதிகளில் இனிமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு வேண்டுமானால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஆனால், ஏற்கெனவே உள்ள வீடுகள், கட்டுமானங்களை ஒன்றும் செய்ய முடியாது.
இந்நிலையில், ஏரிகள் பராமரிப்பு என்ற முக்கிய நடவடிக்கை தவிர, வேறு புதிய தீர்வுகள் என்ன உள்ளன? நிலத்துக்கு மேல் இடம் இல்லாத போது, நிலத்துக்கு அடியில் நீருக்கான இடம் அமைக்கப்படுகிறது.
நிலத்தடி வெள்ளச் சுரங்கம்
அடிக்கடி தீவிர வெள்ள பாதிப்புகளை சந்திக்கும், ஜப்பான் நாட்டின் தலைநகரும், அதிக மக்கள் தொகை அடர்த்தியும் கொண்ட டோக்கியோவை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க, மிக பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் 22 மீட்டர் ஆழத்தில் 6.3 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள சுரங்கம் வட டோக்கியோவில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக உள்ளது.
இந்த சுரங்கத்தில் உள்ள ஐந்து நீர் தொட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு விண்கலத்தை வைத்துக் கொள்ளும் அளவு பெரியதாக உள்ளன. வட டோக்யோவில் உள்ள சிறு ஆறுகளிலிருந்து வரும் நீரை எடுத்துக் கொண்டு எடோ என்ற பெரிய ஆற்றில் கொண்டு சேர்க்கும் இந்த வெள்ள சுரங்கம். இந்த சுரங்கத்தை கட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
ஹாங் காங்-ல் ஹேப்பி வேலி என்ற புல்தரை மைதானத்துக்கு கீழ் மழை நீர் தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. உபரி மழை நீரை உள்வாங்கி, அருகில் உள்ள பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கிறது இந்த ஏற்பாடு.
ஒரு நகரத்தின் வெள்ள நீர் முழுவதையும் கொள்ளும் அளவு சுரங்கம் அமைப்பதற்கு மிகவும் செலவாகும் என்றாலும், இதனை சிறு இடங்களில் செய்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். இவை இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature based solutions) எனப்படுகின்றன.
கட்டடங்களுக்கு அடியில் வெள்ள நீர் தேக்கம்
“அடுக்குமாடி குடியிருப்பு, நிறுவனங்களின் கட்டடங்களின் வாகன நிறுத்ததுக்கு அடியில் நீர் தேர்க்கத்துக்கான சுரங்கம் அமைக்கலாம், விளையாட்டு மைதானத்துக்கு கீழ் அமைக்கலாம். அடையாற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னையில் இந்த தீர்வுகளும் சாத்தியமே. சதுப்பு நிலங்கள் உருவாக்குவது மூலம் தண்ணீரை நிறுத்தி வைக்க முடியும்” என்கிறார் நீர் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன்.
“ஒரு பகுதி முழுவதிலும் தேங்கும் நீரை நிலத்தடி நீர்த்தேக்கத்தில் சேமித்து வைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அதற்கு பதிலாக, ஒரு கேடட் கம்யூனிட்டி போன்ற பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் அந்த வளாகத்தில் சூழும் வெள்ள நீர் வேறு இடங்களுக்கு வெளியேறாமல் தவிர்க்க, கட்டடத்துக்கு அடியில், நீர் சேமிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். இது மிகவும் எளிதில் செய்யக்கூடியதே. தனித்தனி வீடுகளாக இருந்தால், மழைநீர் சேகரிப்பு வசதி கண்டிப்பாக அமைத்திருக்க வேண்டும்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.
இவை தவிர புதிய சதுப்பு நிலங்களை உருவாக்குவதும், நீரை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
“நீரின் வழிப்பாதையில், இருக்கும் எதுவும் நீர் ஓட்டத்துக்கு தடங்கலாக இருக்கும். நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அமைக்கப்படும் வேகத்தடை கூட நீர் ஓட்டத்துக்கு தடையாக இருக்கலாம். ஆனால், இங்கு ஆற்றுக்கே சுற்றுச்சுவர் கட்டியுள்ளோம். நீரியல் குறித்த பார்வை மற்றும் திட்டமிடல் மிக அவசியம்” என்று சுந்தரராஜன் தெரிவிக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)