இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்!
இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலைப் பாடி மக்களின் கவனம் பெற்றவர் பவதாரிணி.
பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி காலமானார்.
47 வயதான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபு தேவா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ராசய்யா’ திரைப்படத்தில் மூலம்தான் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. பின்னணி பாடகியாகத் தனது கரியரைத் தொடங்கியவர் நாளடைவில் பல படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ரு, மை பிரெண்ட்’ திரைப்படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பவதாரிணி கடைசியாக ‘அனேகன்’ திரைப்படத்தில் ‘ஆத்தாடி ஆத்தாடி’ பாடலைப் பாடியிருந்தார். அதேபோல இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய கடைசி படம் ‘மாயநதி’.
அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார். தனது தந்தை இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலைப் பாடி மக்களின் கவனம் பெற்றவர் 2001-ம் ஆண்டுக்கான தேசிய விருதையும் பெற்றார்.
பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதற்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.