எதிர்க்கட்சிகளை முடக்கி தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறதா பாஜக? இந்தியா கூட்டணி கோருவது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,X/INC

  • எழுதியவர்,சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி,பிபிசி தமிழ்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் (எதிர்க்கட்சிகளின் தேர்தல் கூட்டணி) சார்பில் ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி’ என்ற பெயரில் பேரணி நடைபெற்று முடிந்துள்ளது.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது, இந்தியா கூட்டணி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான திமுக சார்பில் திருச்சி சிவா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் முக்கியமாக அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்று உரையாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் இந்த பேரணி ஆளும் கட்சிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? மற்றும் தொடர்ந்து இந்த கூட்டணியின் தலைவர்கள் கைது செய்யப்படுவது அதற்கு பலவீனமா அல்லது மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விவாதிக்கலாம்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,மத்தியில் கூட்டணி என்றாலும் கூட மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கூட்டணியோடு திரிணாமுல் காங்கிரஸ் கைகோர்க்கவில்லை.

இந்தியா கூட்டணி

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த முறை பாஜகவை ஆட்சியில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முழக்கமாக கொண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியே இந்தியா கூட்டணி (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி).

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைந்த இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேவின் சிவ சேனா , திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கியமான 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் மாநில அளவில் சில கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் கூட தேசிய அளவில் கூட்டணி அமைத்து இந்த கட்சிகள் 18-ஆவது மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன.

மத்தியில் கூட்டணி என்றாலும் கூட மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கூட்டணியோடு திரிணாமூல் காங்கிரஸ் கைகோர்க்கவில்லை. அதே போல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் பஞ்சாபிலும் இந்தியா கூட்டணி இல்லாமல் தனித்தே நிற்கிறது அந்த கட்சி.

இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தியா கூட்டணி பேரணியை நடத்தி முடித்துள்ளது.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் பேரணியில் பங்கேற்பு

இந்தியா கூட்டணி பேரணியின் கோரிக்கைகள்

இந்த பேரணியின் முடிவாக ஐந்து கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி. அவை,

  • தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் சமநிலையை உறுதி செய்ய வேண்டும்.
  • தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்கட்சிகளுக்கு எதிராக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றின் கட்டாய நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
  • ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • தேர்தலின் போது எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நிதி ரீதியாக நெருக்கடி ஏற்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி பாஜக செய்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,GOPANNA / X

படக்குறிப்பு,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஒன்றிணைந்து செயல்படுவது ஆரோக்கியமான விஷயம் என்கிறார் கோபண்ணா

இந்தியா கூட்டணி கூறுவது என்ன?

இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுமே கூட்டாக பாஜக மீது வைக்கும் விமர்சனம், அந்த கட்சி மத்திய அரசு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை முடக்க பார்க்கிறது என்பதுதான்.

அதற்கேற்றாற் போல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம், இரு மாநில முதல்வர்கள் கைது, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, “இந்தியாவில் இதுவரை காணாத அடக்குமுறை பாஜகவால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இரண்டு முதல்வர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதனால் தான் டெல்லி அரசியலில் நேரெதிராக போட்டிபோட்ட காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. இது ஜனநாயக சக்திகளுக்கு ஆரோக்கியமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த பேரணி முழுக்க முழுக்க அரசியலுக்காகவே நடத்தப்பட்ட பேரணி என்று குறிப்பிடுகிறார் பாஜகவின் மாநிலத்துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி.

அவர் பேசுகையில், “மதுபான கொள்கை தொடர்பான ஊழலில் முகாந்திரம் இருப்பதன் காரணமாகவே அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நேரத்தில் கைது செய்யக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. இந்தியாவில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு தேர்தல் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போது கைது செய்தாலும் அரசியலுக்காக கைது செய்துவிட்டார்கள் என்றுதான் சொல்லப்போகிறார்கள்” என்கிறார்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,NARAYANAN THIRUPATHY / X

படக்குறிப்பு,“அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராவகவில்லை. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறுகிறார் நாராயணன் திருப்பதி.

உண்மையில் பாஜக அரசு நிறுவனங்களை பயன்படுத்துகிறதா?

சமீபத்திய கைதுகள் மற்றும் அமலாக்கத்துறை நோட்டீஸ் ஆகியவற்றில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று பாஜக கூறிவரும் போதும், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பாஜக செய்யும் அரசியலே இது என்று உறுதியாக கூறுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

“பாஜக ஒரு சலவை இயந்திரம் போல செயல்படுகிறது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர் கூட பாஜகவில் இணைந்தால் நல்லவராகி விடுகிறார். ஆனால் மறுபுறம் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்” என்கிறார் கோபண்ணா.

இதே கருத்தை பிரதிபலித்த பிரியன், “அசோக் சவாண், பிரபுல் பட்டேல் போன்ற தலைவர்கள் மீதான வழக்குகள் பாஜகவுக்கு சென்றவுடன் ஒண்ணுமில்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி தாங்கள் சொல்பவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள், மற்றவர்கள் நல்லவர்கள் என்ற மனநிலையை மக்களிடம் கொண்ட செல்ல பாஜக முயற்சிக்கிறது.”

“அதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். தேர்தல் சமயத்தில் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அரவிந்த் கேஜ்ரிவால் என்ன ஊரை விட்டு ஓடிவிட போகிறாரா? 4 முறை சோதனை செய்து அவரது வீட்டில் எதையுமே நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கைது செய்துவிட்டீர்கள். இதனால்தான் பாஜக, அரசு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது” என்கிறார் அவர்.

ஆனால், “எந்த ஒரு வழக்காக இருந்தாலும் விசாரணை நிறுவனங்களுக்கு பிறகு நீதிமன்றங்களுக்கு சென்று விடுகிறது. அங்கு இருதரப்பு வாதமும் கேட்கப்பட்டு சரி, தவறு எது என்று முடிவு செய்யப்படும். இதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இது தவறான வாதம் என்றே நான் கருதுகிறேன்” என்கிறார் நாராயணன் திருப்பதி.

மேலும், “அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அதே தான் கவிதா வழக்கிலும் நடந்தது. தவறு செய்யவில்லை என்றால் ஆஜராவதில் என்ன பிரச்னை? ஒரு அரசியல்வாதி கொலை செய்துவிட்டு தேர்தலுக்கு பிறகு ஆஜராகிறேன் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா? எனவே இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை” என்கிறார் அவர்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,PRIYAN

படக்குறிப்பு,“ஒரு கட்சியின் தலைவரை தேர்தல் நேரத்தில் கைது செய்வது என்பது தேர்தலில் சமதளம் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது” என்கிறார் பிரியன்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மட்டும் ஏன் பேரணி?

டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் இதே வழக்கில் கைதாகி ஓராண்டுகள் ஆகிறது. ஆனால், அப்போது இதுபோல் வீரியமான குரல்கள் எழுந்தது போல் தெரியவில்லை.

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைதின் போதும் இந்தியா கூட்டணியின் சார்பில் கண்டனங்கள் எழுந்ததே தவிர இது போன்ற பேரணிகள் நடத்தப்படவில்லை. ஆனால், காங்கிரசுக்கு நேரெதிர் கட்சியாக பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி போல் அமைந்துள்ளது.

ஏன் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு பிறகு மாபெரும் பேரணி என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் பிரியன், “மணீஷ் சிசோடியா கைதின் போதே அமலாக்கத்துறை எந்த விதமான ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை, விளக்கமும் அளிக்கவில்லை. அதுவே அநியாயமான கைது என்றுதான் எதிர்க்கட்சிகள் கருதினர்” என்று கூறினார்.

மேலும், “ஒரு கட்சியின் தலைவரை தேர்தல் நேரத்தில் கைது செய்வது என்பது தேர்தலில் சமதளம் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் வங்கி கணக்கை முடக்குவது, இரு மாநில முதல்வர்களை கைது செய்வது, அமலாக்கத்துறையை பயன்படுத்தி நோட்டீஸ் விடுவது போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.”

“இதனால், நம்மை முடக்கிவிட்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறது பாஜக என்ற உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய நெருக்கடி எதிர்க்கட்சிகளுக்கு உருவாகியிருக்கிறது. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து களத்திற்கு வந்துள்ளனர்.” என்கிறார்.

ஆனால், உண்மையில் இந்தியா கூட்டணியில் அந்த ஒற்றுமை உடைக்கமுடியாத வகையில் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி விவாதத்தில் உள்ளது.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,MALLIKARJUN KHARGE / X

படக்குறிப்பு,“பொது எதிரி இருந்தபோதிலும் கூட மேற்கு வங்கத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மைதான்” என்கிறார் கோபண்ணா

கூட்டணி முரண்களோடு வெற்றி சாத்தியமா?

பாஜக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவே அந்த கூட்டணியின் பிரதான கட்சியாக இருக்கிறது. சில மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பிரதான கட்சி அதிகமான வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட, மத்தியில் ஆளும் கட்சி என்பதாலும், பெரிய தேசிய கட்சி என்பதாலும் பிரதான கட்சி என்ற பாத்திரத்தை பாஜக பிடித்துள்ளது.

ஆனால், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பெரிய தேசிய கட்சியாக இருக்கும் போதிலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாபில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக என சில கட்சிகள் மாநிலத்தில் பிரதான கட்சியின் பாத்திரத்தை வகிக்கின்றன.

இதில் முக்கியமான மேற்குவங்கம் மற்றும் பஞ்சாபில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் நிலை உருவாகுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழாமல் இல்லை.

இதுகுறித்து கோபண்ணா பேசுகையில், “எல்லா இடங்களிலும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. அதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால், பஞ்சாப் மற்றும் மேற்குவங்கத்தில் பாஜகவை எதிர்த்து யார் ஜெயித்தாலும் மகிழ்ச்சி தான்” என்கிறார்.

அதேசமயம், “பொது எதிரி இருந்தபோதிலும் கூட மேற்கு வங்கத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறுகிறார் அவர்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,MAMATA BANERJEE / X

படக்குறிப்பு,திரிணாமூல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைக்க முடியாததற்கு மம்தாவின் அணுகுமுறையே காரணம்” என்கிறார் கோபண்ணா.

மம்தா ஏன் பங்கேற்கவில்லை?

இன்றைய பேரணியில் கூட மம்தா பானர்ஜி பங்கேற்காதது குறித்து பேசுபொருளாகியுள்ளது.

இந்த பேரணியில் மம்தா பங்கேற்காததற்கு அவரது உடல்நிலையே காரணம் என்று பிரியன் கூறினாலும், கோபண்ணாவுக்கு வேறு கருத்து உள்ளது.

“மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டால் சரி, கலந்துக் கொள்ளவில்லை என்றாலும் இழப்பு இல்லை. அவரின் செயல்படும் முறையே அப்படித்தான். உதாரணத்திற்கு காங்கிரசும், சிவசேனாவும் கூட்டணி வைக்கிறது. ஆனால், திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைக்க முடியவில்லையே. அதுக்கு மம்தாவின் அணுகுமுறையே காரணம்” என்கிறார் அவர்.

மேலும், “மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக பாஜவை வீழ்த்த முடியும். ஆனால், அது இல்லாமல் பாஜக வளருமேயானால், அதற்கு மம்தாவே பொறுப்பு” என்றும் கூறுகிறார் கோபண்ணா.

ஆனால், எதிர்கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் அவர்களின் அடிநாதமாக ஒளிப்பது பாஜகவை அகற்ற வேண்டும் என்பதே. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், தனித்தனியாக இருந்தாலும் மோதி வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றே அவர்கள் கூறுவதாக சொல்கிறார் பிரியன்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தலை ஒட்டி பிரதமர் மோதி நான்கு முறை தமிழகம் வந்ததது கூட அச்சத்தின் வெளிப்பாடே என்று பல எதிர்கட்சியினராலும் கூறப்பட்டது.

பாஜக பயப்படுகிறதா?

கூட்டணிக்குள் இருக்கும் முரண்பாடுகளை கடந்து இந்தியா கூட்டணியின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதை பல வகைகளில் பாஜக வெளிப்படுத்துவதாகவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

உதாரணத்திற்கு தேர்தலை ஒட்டி பிரதமர் மோதி நான்கு முறை தமிழகம் வந்தது கூட அந்த அச்சத்தின் வெளிப்பாடே என்று பல எதிர்கட்சியினராலும் கூறப்பட்டது.

குறிப்பாக, “பாஜகவை பொறுத்தவரைக்கும் இந்தியா கூட்டணி சத்தமில்லாமல் வலுப்பெற்று வருவதால், மௌன புரட்சி நடந்து விடுமோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறது. அவர்களது உளவுத்துறை மூலம் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் கோபண்ணா.

பிரியன் பேசுகையில், “சமீபத்தில் வந்த அறிக்கைகளின்படி உத்தரபிரதேசத்தில் கூட இவர்கள் குறைந்த இடங்களையே வெல்வார்கள் என்றுதான் தெரிகிறது. இந்தி பேசும் மாநிலங்களிலேயே அவர்களது வாக்குகள் குறையும் நிலை உள்ளது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி அமைந்துள்ளது” என்கிறார்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் அனைத்து முயற்சிகளும் வெறும் அரசியல் மட்டுமே, இதனால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறுகிறார் நாராயணன் திருப்பதி.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம்,MALLIGARJUN KHARGE / X

படக்குறிப்பு,பாஜக மேலும் நெருக்கடி கொடுக்க கொடுக்க இந்தியா கூட்டணியின் ஒற்றுமை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது என்று கூறுகிறார் பிரியன்.

இந்தியா கூட்டணிக்கு பலமா? பலவீனமா?

பாஜக பல்வேறு வகைகளில் இந்தியா கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்தாலும் தாங்கள் உறுதியாக இருப்பதாக கூறுகிறது அந்த கூட்டணி.

மேலும் கருப்பு பண ஒழிப்பு, நிதி பகிர்வில் வஞ்சனை, வேலைவாய்ப்பு பிரச்னை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமை என பல குற்றச்சாட்டுகள் பாஜக மீது உள்ளது. அதை பயன்படுத்தி பாஜகவை வீழ்த்துவோம் என்றும் கூறுகிறது இந்தியா கூட்டணி.

ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து முக்கிய தலைவர்களின் கைதுகள், அமலாக்கத்துறை நோட்டீஸ் மற்றும் வழக்குகள் இந்தியா கூட்டணிக்கு என்ன மாதிரியான நிலையை ஏற்படுத்தும் , மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுகிறது.

பாஜக மேலும் நெருக்கடி கொடுக்க கொடுக்க இந்தியா கூட்டணியின் ஒற்றுமை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது என்று கூறுகிறார் பிரியன்.

“இதுவரை பாட்னா கூட்டத்தில் பங்கேற்காத திரிணாமூல் காங்கிரஸ் கூட இந்த பேரணியில் கலந்துக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி, ஹேமந்த் சோரன் மனைவியும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினால் இன்னமும் அது பாஜகவுக்கு பின்னடைவை கொடுத்து, இந்தியா கூட்டணிக்கு வலுவை சேர்க்கும்” என்கிறார் அவர்.

மேலும், ஓரிரு மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தாலும், அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்னையை பிரச்சாரத்தில் பிரதிபலித்தால் அந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும் என்று கூறுகிறார் பிரியன்.

கோபண்ணா பேசுகையில், “எப்போதுமே அடக்குமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜகவின் இந்த செயலால் மக்கள் மத்தியில் இந்தியா கூட்டணிக்கு அனுதாபம் தான் கிடைக்கும். இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு சரியான பதிலை மக்கள் தேர்தல் மூலம் கொடுப்பார்கள்” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author