‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரியுமா? சாவர்க்கர் என்ன கூறினார்?
- எழுதியவர்,அமிதாப் பட்டாசாலி
- பதவி,பிபிசி நியூஸ் வங்காள சேவை, கொல்கத்தா
-
இன்று இந்தியாவில் இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்து தேசியவாதிகள், தலைவர்கள், மற்றும் செயல்பாட்டாளர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை அடிக்கடி எழுப்புகின்றனர்.
சமீப காலமாக, இவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை எழுப்பத் தயாராக இல்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால், கடந்த சில வருடங்களாக இந்துத்துவாவாதிகளின் சில குழுக்கள் இஸ்லாமியர்களிடம் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் எழுப்புமாறு கட்டாயப்படுத்துவதும் நடக்கிறது.
ஆனால், இந்த முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்.
1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது, இஸ்லாமிய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் தான் முதன்முதலில் இந்த முழக்கத்தை முன்வைத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இச்செய்தி சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பேச்சின் மூலம் பரவலாகத் தெரியவந்துள்ளது.
பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை உருவாக்கிய ‘அஜிமுல்லா கான்’
பினராயி விஜயன் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 25) ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
“சங்பரிவாரை சேர்ந்தவர்கள் இங்கு வந்து எதிரே அமர்ந்திருப்பவர்களிடம் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் எழுப்பச் சொல்கிறார்கள். இந்த முழக்கத்தை உருவாக்கியது யார் என்று தெரியுமா? சங் பரிவாரை சேர்ந்தவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அவரது பெயர் அஜிமுல்லா கான்,” என்று விஜயன் குறிப்பிட்டார்.
‘சிப்பாய் கலகம்’ என்று பலராலும் அறியப்படும் 1857-இல் நடந்த முதல் இந்தியச் சுதந்திரப் போரில் மிக முக்கியமான பங்கை வகித்தவர்களில் அஜிமுல்லா கானும் ஒருவர்.
” ‘மாத்ரே வதன் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை அளித்தவர் அஜிமுல்லா கான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சையத் உபைதுர் ரஹ்மான் பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் கூறினார்.
‘பாரத் மாதா கி ஜெய்’ என்பது அஜிமுல்லா கானின் முழக்கத்தின் இந்தி மொழி பெயர்ப்பு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ‘மாத்ரே வதன் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘இந்தியத் தாய்நாடு வாழ்க’ என்று இஸ்லாமிய இறையியல் நிபுணர் முஹம்மது கமருஜ்ஜம்மா கூறுகிறார்.
தூதாண்மை அதிகாரி ஆப்தி ஹசன் சஃப்ரானி ஜெய் ஹிந்த் என்று கோஷம் எழுப்பியது போல முகமது இக்பால் புகழ்பெற்ற தேசபக்தி பாடலான ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ பாடலை எழுதினார் என்று கேரள முதல்வர் விஜயன் கூறியுள்ளார்.
யார் இந்த அஜிமுல்லா கான்?
வரலாற்றாசிரியர் சையது உபைதுர் ரஹ்மான் தொகுத்த இந்திய முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று கலைக்களஞ்சியத்தில் அஜிமுல்லா கான் பற்றி ஒரு தனி அத்தியாயம் உள்ளது.
“அஜிமுல்லா கான் 1857-ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வெளிநாட்டு மொழிகள் பற்றிய அறிவு இருக்கவில்லை. அவர் தொடர்ந்து உயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பிரிட்டிஷ் ராணுவத்தை வெல்ல முடியாது என்று நம்பிய நேரத்தில், அவர் துருக்கி, கிரைமியா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்று அங்கு பிரிட்டிஷ் ராணுவம் தோற்கடிக்கப்படுவதைக் கண்டார்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜிமுல்லா கான், மறைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மன்னரின் வளர்ப்பு மகனான நானா சாஹேப்பின் திவானாக இருந்து, பின்னர் அவர் அவருடைய பிரதமரானார், என்று ரஹ்மான் எழுதியுள்ளார்.
இந்து தேசியவாதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், ‘தி இந்தியன் வார் ஆஃப் இண்டிபெண்டென்ஸ் 1857’ என்ற புத்தகத்தில் அஜிமுல்லா கானைப் பற்றி எழுதியுள்ளார். “அஜிமுல்லா கான் 1857-இன் கிளர்ச்சியின் மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி முதலில் சிந்தித்தவர்களுக்கு இடையே அஜிமுல்லா கானுக்கு தனி இடம் கொடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனுக்குச் சென்ற அஜிமுல்லா கான்
பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் என்பதால் பாஜி ராவ் இறந்த பிறகு நானா சாஹேப்பின் ஓய்வூதியத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிறுத்தியது.
வாரிசுப் பிரச்சனையை தீர்ப்பதற்காக நானா சாஹேப், அஜிமுல்லா கானை இங்கிலாந்துக்கு அனுப்பியதாக சாவர்க்கரைப்போல பல வரலாற்றாசிரியர்களும் எழுதியுள்ளனர். அஜிமுல்லா கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இங்கிலாந்தில் இருந்தார். 1855-ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பினார்.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் அஜிமுல்லா கானின் குழந்தைப் பருவம் மிகவும் வறுமையில் கழிந்தது. 1837-38 வருடத்தின் பஞ்சத்தின் போது அவரும் அவரது தாயும் காப்பாற்றப்பட்டு கான்பூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனில் தஞ்சம் அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர்.
ஒரு காலத்தில் அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீடுகளில் உணவு பரிமாறுபவராகவும், சில சமயங்களில் சமையல்காரராகவும் பணியாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை கற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு அஜிமுல்லா கான், துருக்கி மற்றும் கிரைமியாவுக்குச் சென்றார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அவர் நானா சாஹேபிற்கு கிளர்ச்சியைத் தொடங்குமாறு யோசனை கூறினார்.
செய்தித்தாள் மூலம் சுதந்திர கிளர்ச்சி
அஜிமுல்லா கான் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு ‘பயாமே ஆஸாதி’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இது உருது, மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது. அவர் ஐரோப்பாவில் இருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்திருந்தார். அவரது செய்தித்தாள் அந்த இயந்திரத்தில் அச்சிடப்பட்டது.
அஜிமுல்லா கான் தனது சொந்த செய்தித்தாள் மூலம் கிளர்ச்சி மற்றும் சுதந்திரம் பற்றிய கருத்துக்களை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் என்று உருது பத்திரிகை வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு ஆகியவை ஆராய்ச்சி செய்யும் பைசல் ஃபரூக்கி கூறுகிறார்.
“அவர் தனது செய்தித்தாள் மூலம் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என எல்லா சமூகத்தினரையும் சுதந்திரத்திற்காக மீண்டும் மீண்டும் தூண்டிக்கொண்டே இருந்தார். கங்கா-ஜமுனி கலாச்சாரம் ( இந்து-இஸ்லாமிய கலாசாரத்தின் ஒன்றிணைப்பு) அவரது எழுத்துக்களில் எப்போதும் தெரியும். முதல் சுதந்திரப் போராட்டம் அதாவது சிப்பாய் கலகத்தின் அணிவகுப்புப் பாடலையும் அவர் எழுதினார்,” என்கிறார் அவர்.
ஃபரூக்கி அந்தப் பாடலைப் படித்துக்காட்டினார். அதன் கடைசி இரண்டு வரிகளில் இருந்து அவர் எப்படி எல்லா மதத்தினரையும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கப்படுத்தினார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
“இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் அனைவரும் சகோதரர்கள், இந்த சுதந்திரக் கொடியை நாங்கள் வணங்குகிறோம்.”
அதே காலகட்டத்தில் அவர் தனது பத்திரிகையில் மாத்ரே வதன் என்ற முழக்கத்தை எழுதியுள்ளார் என்று வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சையத் உபைதுர் ரஹ்மான் குறிப்பிடுகிறார்.
“இந்த முழக்கம் அவர் எழுதியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த முழக்கத்தை தனிமைப்படுத்தி பார்க்கக்கூடாது. சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவித்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கு அவரது பத்திரிகை தொடர்ந்து அழைப்பு விடுத்தது. அஜிமுல்லாவும் இதே போன்ற முழக்கங்களை எழுதினார்,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், மாத்ரே வதன் ஹிந்துஸ்தான் என்ற முழக்கத்தை முதன்முதலில் வழங்கியவர் கான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கு திட்டமிட்ட முக்கிய நபர்களில் அஜிமுல்லா கானும் ஒருவர் என்றும் ரஹ்மான் கூறுகிறார்.
கிளர்ச்சி அடக்கப்பட்ட பிறகு அஜிமுல்லாவால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவர் 1859-ஆம் ஆண்டு நேபாளத்தின் தராய் பகுதியில் காலமானார். பிரிட்டிஷ் வீரர்களிடமிருந்து தப்பி ஓடும்போது அவர் நோய்வாய்ப்பட்டார். அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தொடர்ந்து பயணம் செய்ததால் அவருக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாமிய தலைவர்கள் உருவாக்கிய மற்ற முழக்கங்கள்
‘மாத்ரே வதன்’ தவிர, பல கிளர்ச்சி முழக்கங்களும் முஸ்லிம் தலைவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்று வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சையத் உபைதுர் ரஹ்மான் கூறினார்.
“கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா ஹஸ்ரத் மொஹானி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார். அதேபோல் யூசுப் மெஹர் அலி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்பினார். ‘சைமன் கோ பேக்’ என்ற கோஷத்தை கொடுத்தவரும் அவர்தான். இவர்களின் பெயரை யாரும் குறிப்பிடுவதில்லை,” என்றார் அவர்.
1857-இல் நடந்த முதல் சுதந்திரப் போராக இருந்தாலும் சரி, 1910 முதல் 1947 வரையிலான காலகட்டமாக இருந்தாலும் சரி, இந்த முழு நேரத்திலும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் அனைவரும் தோளோடு தோள் நின்று போராடினர் என்று ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
“தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியை எத்தனை முஸ்லிம்கள் வகித்துள்ளனர் என்பது யாருக்காவது தெரியுமா? அபுல் கலாம் ஆசாத்தின் பெயர் அனைவருக்கும் தெரியும். ஆனால் காங்கிரஸின் தலைவர்களாக மொத்தம் எட்டு முஸ்லிம்கள் இருந்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்,” என்று கூறுகிறார்.
‘பாரத மாதா’ கோஷம் எங்கிருந்து வந்தது?
இந்துத்துவ அமைப்புகளால் அரசியல் மற்றும் தேசபக்தி முழக்கமாக முன்வைக்கப்படும் ‘பாரத் மாதா கி ஜெய்’, 1866-ஆம் ஆண்டுக்கு முன் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்துத்துவ அரசியலைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஸ்னிக்தேந்து பட்டாச்சார்யா, “வங்காளத்தில் 1866-ஆம் ஆண்டில் கிருஷ்ண த்வைபாயன வியாஸ் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள புத்ததேவ் முகோபாத்யாயின் ‘உன்னிஸ்வி புராணத்தில்’ பாரத மாதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தி கண்காட்சியின் தொடக்க விழாவில், த்விஜேந்திர நாத் தாக்கூர் தனது ‘மலின் முக்சந்திர, மா பாரத் தோமாரி’ என்ற பாடலைப் பாடினார். இது விபின் சந்திர பாலின் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1873-இல் கிரண் சந்திரா எழுதிய பாரத மாதா நாடகத்திலும் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது,” என்று கூறுகிறார்.
“ஆனால், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கம் வங்காளத்தில் அப்போது பிரபலமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் பங்கிம்சந்திரா எழுதிய வந்தே மாதரம் அதற்குள் மிகவும் பிரபலமாகிவிட்டது,” என்றார் ஸ்னிக்தேந்து.
1860-ஆம் ஆண்டுக்கு முன் வங்காளத்திலோ அல்லது இந்தியாவிலோ ‘பாரத் மாதா’ என்ற சொற்றொடர் குறிப்பிடப்படவோ அல்லது பயன்படுத்தப்படவோ இல்லை என்று அவர் கூறுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அஜிமுல்லா கான் மாத்ரே வதன் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை கொடுத்ததால் அவரையே ‘தாய்நாடு’ என்ற சொல்லின் தந்தை என்று அழைக்கலாம்.
‘பாரத மாதா’ படம் உருவானது எப்படி?
அபனீந்திரநாத் தாக்கூர் 1905-ஆம் ஆண்டு பாரத் மாதாவின் முதல் படத்தை வரைந்தார்.
“உண்மையில் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘மாத்ரே வதன் ஹிந்துஸ்தான்’ ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்றாலும் இந்துத்துவவாதிகளின் பார்வையில் இவை வெவ்வேறானவை. இந்திய தேசியம், இந்து தேசியம், வங்காள தேசியம் ஆகிய மூன்றும் 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வங்காளத்தில் பிறந்தவை. இதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு, இந்திய தேசியம், இந்து தேசியம் மற்றும் பிராந்திய தேசியவாதம் தோன்றி மற்ற பகுதிகளில் பரவியது,” என்று ஸ்னிக்தேந்து தெரிவித்தார்.
அபனீந்திரநாத் தாக்கூரால் உருவான பாரத மாதா படத்திற்கு முதலில் பங்கமாதா என்று பெயர் சூட்டப்பட்டது போல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரமும் பங்கமாதாவை வழிபடும் பாடல்தான் என்று அவர் கூறினார். பிற்காலத்தில் காங்கிரஸ், மற்ற எல்லா தேசியவாத போக்குகளையும் இந்திய தேசியவாதத்தில் இணைக்க முயன்றது.
“இந்திய தேசியவாதிகள் இந்தியா மற்றும் இந்துஸ்தான் ஆகிய இரண்டையும் பயன்படுத்துகின்றனர், ஏனெனில் இது எல்லா சாதிகள், மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் நிலம். ஆனால் இந்து தேசியவாதிகள் ‘ஹிந்துஸ்தான்’ என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்துவதில்லை. அவர்களின் பேச்சில் உருது அல்லது பாரசீகத்திற்கு இடமில்லை. அதனால்தான் அவர்களுக்கு மாத்ரே வதன் ஹிந்துஸ்தானும், பாரத் மாதாவும் ஒன்றல்ல. இருப்பினும், முஸ்லிம்கள் இந்தியாவை தாய் என்று அழைக்க விரும்புவதில்லை என்ற இந்துத்துவவாதிகளின் குற்றச்சாட்டை ‘மாத்ரே வதன் ஹிந்துஸ்தான்’ என்ற வாசகம் பொய்யாக்குகிறது,” என்று ஸ்னிக்தேந்து விளக்குகிறார்.
“நாட்டை தாய் நாடாக நேசிப்பது பற்றி ஹதீஸ் (முகமது நபியின் வாக்கு) பேசுகிறது,” என்று இஸ்லாமிய அறிஞர் முகமது கமருஜ்ஜம்மா கூறுகிறார்.
கமருஜ்ஜம்மா அனைத்து வங்காள சிறுபான்மை இளைஞர் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். கொல்கத்தாவின் முன்னாள் ஆலியா மதரஸாவில் (தற்போது ஆலியா பல்கலைக்கழகம்) அவர் கல்வி பயின்றார்.
“ஹப்புல் வதன் என்று ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. வதன் என்றால் தாய்நாடு மற்றும் ஹப்புல் என்றால் அன்பு. அதாவது தாய்நாட்டின் மீதான அன்பு, அது மதத்தின் ஒரு பகுதி,” என்கிறார் அவர்.
ஆனால் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கம் இப்போது அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்துத்துவாதிகள் இந்த முழக்கத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதால் முஸ்லிம்கள் இந்த முழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)