கல்கி படத்தில் வரும் இந்த கோவில் சோழர் கட்டியதா? மண்ணுக்குள் புதைந்து போனதன் முழு பின்னணி

கல்கி படத்தில் காட்டப்பட்ட நெல்லூர் கோவில் - மணலில் புதைந்து போன பின்னணி

பட மூலாதாரம்,BBC/THULASIPRASAD REDDY

  • எழுதியவர்,துளசி பிரசாத் ரெட்டி நங்கா
  • பதவி,பிபிசி

நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `கல்கி கி.பி.2898’ திரைப்படத்தால் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கிராமம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட பண்டைய கால கோவில் தான் இதற்கு காரணம்.

நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் உள்ள அந்த கோவிலின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே இந்த கோவிலை காண வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான யூடியூபர்கள் இந்த பண்டைய கால கோயிலை பற்றி தங்களது யூடியூப் சேனல்களில் பதிவுகளை இடுகின்றனர். ஆந்திர மக்களும் வரிசையில் நின்று கோவிலை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

பிபிசி குழு அந்த பகுதிக்கு சென்ற போது, ​​யூடியூபர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

“கல்கி படத்தில் இந்த கோவிலை பார்த்தேன். உண்மையில் இங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறிந்து வீடியோ எடுக்கவே வந்தோம்,” என்கிறார் யூடியூபர் விஷ்ணுவர்தன்.

கல்கி திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருப்பது போல் பெருமாள்ளபாடுவில் கோவில் இருப்பது உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முன்பு மணலில் புதைந்த நிலையில் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு பிபிசி அங்கு சென்றபோது மணலில் புதைந்து கிடந்த அதே நிலையில்தான் இன்றும் உள்ளது .

அந்தக் கோவிலின் கதை என்ன? கல்கி படத்தில் காட்டப்படும் கோவில் இதுதானா? கிராம மக்கள் சொல்வது என்ன?

கல்கி படத்தில் காட்டப்பட்ட நெல்லூர் கோவில் - மணலில் புதைந்து போன பின்னணி

பட மூலாதாரம்,BBC/THULASIPRASAD REDDY

பெருமாள்ளபாடு கோவிலின் வரலாறு என்ன?

பெருமாள்ளபாடு என்ற இடத்தில் பெண்ணாற்றின் (Penna River) கரையில் சில ஆண்டுகளுக்கு முன் பழமையான கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மணற்பாங்கான பகுதியின் நடுவில் ஒரு கோவிலின் உச்சி தெரியும்.

இது சிவன் கோவில் என்றும், அதனுள்ளே நாகலிங்கேஸ்வரர் இருப்பதாகவும் சோமசிலா மண்டல கோவில் அதிகாரி பென்சல வரபிரசாத் ‘பிபிசி’யிடம் தெரிவித்தார்.

“அது நாகலிங்கேஸ்வர சுவாமி கோவில். ஆனால் கோவிலைக் கட்டியது யார்? எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை,” என்றார்.

இக்கோவிலின் கட்டுமானம் மற்றும் அது கட்டப்பட்ட காலம் குறித்து தெளிவான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும், கோவிலின் கட்டிடக்கலை பாணி சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதை பிரதிபலிக்கிறது என்று வரலாற்று ஆசிரியர் எதக்கோட்டா சுப்பாராவ் பிபிசியிடம் கூறினார்.

‘‘கோவிலைப் பார்க்கும்போது சோழர் காலத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. சோழர்கள் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நெல்லூர் பகுதியை நோக்கி வந்தனர்” என்று அவர் மேலும் கூறினார்.

கோவில் எப்படி பூமிக்குள் புதைந்தது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. நெல்லூர் பகுதியில் கடந்த காலங்களில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இந்தக் கோவிலும் அப்போது மூழ்கி இருக்கக்கூடும் என்றும் சுப்பாராவ் கூறினார்.

“1927-ல் ஒரே நாளில் ஒரு பெரிய சூறாவளி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை தாக்கியது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்போது, ​​பெருமாள்ளபாடு மட்டுமின்றி, பல கிராமங்கள் நிலைகுலைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே இந்த கோவிலும் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக 1884 மற்றும் 1872 ஆம் ஆண்டுகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டபோது, ​​பல நகரங்கள் நீரில் மூழ்கின. அப்போது இந்தக் கோவிலும் மூழ்கியிருக்கலாம் என்ற வாதமும் எழுந்துள்ளது’’ என்றார் சுப்பாராவ்.

கல்கி படத்தில் காட்டப்பட்ட நெல்லூர் கோவில் - மணலில் புதைந்து போன பின்னணி

பட மூலாதாரம்,BBC/THULASIPRASAD REDDY

படக்குறிப்பு,பெண்ணா அணை

அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் ​​பெருமாள்ளபாடு மூழ்கியதால், கிராம மக்கள் வேறு இடத்தில் குடிபெயர்ந்து, அந்த பகுதிக்கு அதே பெயரை வைத்ததாகவும் அவர் கூறினார்.

வரலாறு காணாத வெள்ளத்தின் போது பெண்ணா அணைக்கு (Penna River) மேல் ஒன்றரை முதல் இரண்டு அடி வரை தண்ணீர் சென்றது. அப்போது கழுவாய் முதல் நெல்லூர் வரையிலான கிராமங்கள் நீரில் மூழ்கின. அதனால்தான் பெண்ணா நதிக்கரையில் உள்ள இந்த ஊர் நீரில் மூழ்கியதில் பெரிய ஆச்சரியமில்லை என்று நம்பப்படுகிறது. ” என்றார் சுப்பாராவ்.

வெள்ளம் மற்றும் மணல் குன்றுகள் காரணமாக கோவில் புதையுண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

​​பெருமாள்ளபாடு கிராமவாசிகள் சொல்வது என்ன?

கல்கி படத்தில் காட்டப்பட்ட நெல்லூர் கோவில் - மணலில் புதைந்து போன பின்னணி

பட மூலாதாரம்,BBC/THULASIPRASAD REDDY

படக்குறிப்பு,பெருமாள்ளபாடு கிராமம்

பெருமாள்ளபாடுவில் உள்ளவர்களில் சிலர் கோயிலின் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பெண்ணா ஆற்றின் வெள்ளத்தில் இவர்களது ஊர் மூழ்கியதால், இப்போது இருக்கும் இடத்தில் அதே பெயரில் ஒரு ஊர் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

70 வயதான ஜெயராம நாயுடு பிபிசியிடம் கூறுகையில், இந்த கோபுரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் என்றும், குழந்தைகள் அங்கு விளையாடுவார்கள் என்றும் கூறினார்.

“நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, ​​நாங்கள் இங்கே துள்ளி குதித்து விளையாடுவோம். அப்போது எங்களுக்கு கோவிலின் மேல்புறம் உள்ள குவிமாடம் மட்டும் தெரிந்தது. சிறிது காலத்தில் கோவில் முற்றிலும் மணலில் மூழ்கியது” என்றார்.

சில ஆண்டுகள் முன்பு இந்த கோவிலின் கதைகளை ஊர் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட சில இளைஞர்கள், கொரோனா காலத்தில் அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது கோவிலின் கோபுரம் வெளி வந்தது.

இக்கோயில் பெருமாள்ளபாடுவில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது கோவில் அறக்கட்டளையின் தலைவர் பொதுகுண்டா வெங்கடேஷ்வரலு அதே கோவிலை கிராமத்தின் அருகே கட்ட விரும்புகிறார்.

“வெளியூரில் வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள், கொரோனா சமயத்தில் அவர்களாக முன்வந்து பணம் திரட்டி, ஜேசிபி மூலம் குழி தோண்டி கோவிலை கண்டுபிடித்தனர். அந்த சமயத்தில் தான் கோவில் வெளியே தெரிந்தது. அங்கு மீண்டும் கோவிலை புதுப்பித்து கட்டினால் திருடர்கள் நடமாடத்திற்கு வாய்ப்புள்ளது. அதனால் கிராமத்திற்கு அருகிலேயே கோவில் கட்டப்பட வேண்டும்” என்றார் வெங்கடேஷ்வரலு.

கோவிலை எங்கு கட்டுவது என்பது குறித்து கிராம மக்கள் முடிவு செய்த பின்னர் பணிகள் தொடங்கப்படும் என வரபிரசாத் தெரிவித்தார்.

1987ல் இக்கோவில் `தேவதாயா’ துறையின் கீழ் வந்தது. பண்டைய கோவிலின் பாதுகாப்பிற்காக, தேவதாயா துறையின் கீழ் சேர்க்கப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் நடத்தப்படும். அதில் பெறப்பட்ட பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். எனவே நாங்கள் கோவில் கட்ட தயாராக உள்ளோம்,” என்றார்.

கல்கி படத்தில் வருவது இந்த கோவிலா?

கல்கி படத்தில் காட்டப்பட்ட நெல்லூர் கோவில் - மணலில் புதைந்து போன பின்னணி

பட மூலாதாரம்,BBC/THULASIPRASAD REDDY

சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில், தன்னை துரத்தும் வில்லத்தனமான ரோபோவிடம் இருந்து தப்பிக்கும் போது ஒரு குழந்தை மணற்பரப்பில் வழுக்கி, அங்குள்ள ஒரு கோவிலின் கோபுரத்தின் கீழே தவழ்ந்து சென்று உள்ளே ஒளிந்து கொள்கிறது. அந்த காட்சியில் காட்டப்படும் கோவில் பெருமாள்ளபாடு அருகே உள்ள கோவில் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சவுத்ரி கூறுகையில், பெருமாள்ளபாடு அருகே உள்ள கோவிலில் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்தது உண்மைதான்.

“2022ல் கல்கி திரைப்படம் இரண்டு நாட்கள் இங்கு படமாக்கப்பட்டது. படம் வெளியானதில் இருந்து, கோவிலை நேரில் பார்க்க நாலாபுறத்திலும் இருந்து மக்கள் வருகிறார்கள்” என்றார்.

படத்தின் கதைக்கு இந்த இடம் பொருந்திப் போனதால் இங்கு படப்பிடிப்பு நடந்திருக்கும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author