Hema Committee: “பாலியல் தொல்லை தந்த மலையாள நடிகர்களுக்கு நான் ஆதரவா?” – நடிகை ரஞ்சனி விளக்கம்
“நீதிபதி ஹேமா கமிட்டிக்கான அவசியம் வந்து அமைக்கப்பட்டப்போது கமிட்டி முன்னாடிபோய் பேசினவங்கள்ல நானும் ஒருத்தி. அப்ப நடிகைகள் சார்பா நாங்க ஒரு முக்கியமான கோரிக்கையை வச்சோம்.” – நடிகை ரஞ்சனி.

நடிகை ரஞ்சனி
மலையாளத் திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்த ஹேமா கமிட்டியின் அறிக்கை மல்லுவுட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
மோகன் லாலைத் தலைவராகக் கொண்ட மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது கேரளாவில் செட்டிலாகி விட்டவருமான நடிகை ‘முதல் மரியாதை’ ரஞ்சனியிடம் பேசினோம். வழக்கறிஞரான இவர் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தவர்.

“ஆரம்பத்துல நான் சினிமாவுல இருந்தபோது, இன்னைக்கு இருக்கிற அளவு டெக்னாலஜி, மீடியாவுடைய வளர்ச்சியெல்லாம் இல்லை. ஆனா நடிகைகளுக்கான தொந்தரவு இருந்தது. இன்னைக்கு சமூக ஊடகங்கள் மாதிரி நிறைய முன்னேற்றம் வந்திடுச்சுன்னு சந்தோஷப்பட்டா அப்பவும் நிம்மதி இல்லாத அளவுக்கு ஆன்லைன்லயே எல்லா தப்புகளையும் பண்றாங்க. நடிச்சிட்டிருந்த நான் ஒரு கட்டத்துல அதில இருந்து ஒதுங்கி கல்யாணம், குடும்பம்னு ஆகி, சட்டம் படிச்சிட்டு கணவருக்கு பிசினஸ்ல உதவி செய்திட்டிருந்தேன். அவர்தான் ‘நடிப்பு உன்னுடைய விருப்பம்னா இப்பக்கூட பண்ணு’ன்னு சொன்னார். ஒரு பெரிய பிரேக் விட்டு திரும்ப வந்து பார்த்தா இப்பவும் நடிகைகளுக்கு வர்ற பிரச்னைகள் அப்படியேதான் இருக்கு.
இப்ப ஒருபடி மேல போய், நடிச்ச சம்பளத்தை வாங்கக்கூட காத்திருக்க வேண்டியதாயிருக்கு. நீதிபதி ஹேமா கமிட்டிக்கான அவசியம் வந்து அமைக்கப்பட்டப்போது கமிட்டி முன்னாடிபோய் பேசினவங்கள்ல நானும் ஒருத்தி. அப்ப நடிகைகள் சார்பா நாங்க ஒரு முக்கியமான கோரிக்கையை வச்சோம். அதாவது புகார் சொல்றவங்களுடைய அடையாளம் எங்கேயும் வெளியாகக் கூடாதுங்கிறதுதான் அது. தொடர்ந்து சினிமாவுல இருக்கணும்னா இது அவசியம். ஆனா இப்ப வெளியாகியிருக்கிற அறிக்கையில் ஒரு பத்தியில, ‘நடிகைகளின் அமைப்பான W.C.C யில் (Women in Cinema Collective) இருந்தபோது ஒரு நடிகைக்கு வாய்ப்பே வரலை.

அவங்க அந்தச் சமயம் மலையாள சினிமாவுல நடிகைகளுக்குத் தொந்தரவு இருக்குன்னு பேசினாங்க. பிறகு அந்த அமைப்பில இருந்து வெளியேறியதும், நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு இப்ப இங்க நடிகைகளுக்குப் பிரச்னையே இல்லைங்கிறாங்கன்னு’ இருக்கு. சம்பந்தப்பட்ட இந்த நடிகை யாருன்னு ஃபீல்டுல எல்லாருக்கும் தெரியும். இந்த மாதிரி அடையாளங்கள் பொது வெளியில் வெளியாகக் கூடாதுங்கிறதுதான் என்னுடைய கோரிக்கையா இருந்தது.
அதேபோல கமிட்டியில பேசியிருந்தவங்களுக்கு முதல்ல அறிக்கையைக் காட்டிட்டு பிறகு வெளியிடுங்கனு கேட்டுதான் நீதிமன்றம் போனேன். நாங்க பேசினது அப்படியே வந்திருக்கா, அடையாளம் வெளிப்படுதாங்கிறதையெல்லாம் தெரிஞ்சுக்கத்தான் இதைக் கேட்டேன். ஆனா என் மனு எடுக்கப்படுறதுக்கு முன்னாடியே அவசரமா அறிக்கையை வெளியிட்டுட்டாங்க.
ஆனால் நான் கேட்ட ‘என்டர்டெய்ன்மெண்ட் ட்ரிபியுனல்’ அமைக்கறது பத்தியும் அறிக்கையில இருக்குங்கிறது மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருக்கு. இன்னொருபுறம், நான் ஏதோ ஹேமா கமிட்டிக்கு எதிரானவள் மாதிரி ஒரு பிம்பம் வெளியில பரவிடுச்சு. டார்ச்சர் தரும் நடிகர்களுக்கு ஆதரவா நான் செயல்படற மாதிரி தப்பா செய்தி பரப்பி விட்டுட்டாங்க. ஒரு விஷயத்தை பர்ஃபெக்டா செய்யுங்கனு கேட்டது யாருக்கும் புரியலை” என ஆதங்கத்துடன் முடிக்கிறார் ரஞ்சனி.