மோகன்லால் ராஜினாமா: மலையாள சினிமாவை உலுக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை – என்ன நடக்கிறது?
- எழுதியவர்,இம்ரான் குரேஷி
- பதவி,பிபிசி ஹிந்திக்காக
-
ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அறிக்கை எதிரொலியாக, ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகியுள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பெண் கலைஞர்கள் வைத்திருப்பதால், சங்கத்தின் செயற்குழுவை கலைக்க வேண்டும் என்ற முடிவு அன்றைய தினம் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2024ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், சில மாதங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘பல தீவிரமான புகார்கள் எழலாம்’
கடந்த 48 மணி நேரத்தில், மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரும் 2009ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் அதில் ஈடுபட்ட ஆண்கள் பெயர்களையும் பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே காவல்துறையினரிடம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ளார்.
கேரள அரசு சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நான்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள், பெண் கலைஞர்களிடம் இருந்து புகார்களை பெறுவார்கள். ஆனால் அவர்களால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இயலாது.
பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது ஒரு நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அதே நேரத்தில் கேரளா ஃபிலிம் அகாடமியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அந்த நடிகை கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறையாக புகார் அளித்தார். பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய நடிகை மாலா பார்வதி, “முன் வந்து புகார் அளித்த நபர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான பிரச்னைகள் நிச்சயமாக வெளிவரும். இப்போது பொது வெளியில் பேசியவர்கள் நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணையின் போது ஆஜராகவில்லை,” என்று தெரிவித்தார்.
கேரள அரசு உத்தரவின் பெயரில் நீதிபதி ஹேமா கமிட்டி 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ‘வுமென் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற பெண்கள் அமைப்பு இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
பிரபலமான நடிகை ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின.
இந்த விவகாரத்தில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரான நடிகர் திலீப் தற்போது பிணையில் வெளியே உள்ளார்.
நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கையை வெளியிட்டது கேரளா அரசு. அனைத்து புகார்களும் முறையாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை அரசு தானாக விசாரிக்காது என்று கூறிய நிலையில், இரண்டு புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட பிறகு மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
புகாரில் இடம் பெற்றிருப்பது என்ன?
சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் இடம் பெற்றுள்ள விவகாரங்கள் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிட்டியில் இடம் பெற்றுள்ளது.
தங்களுக்கு நடந்த பிரச்னைகள் குறித்து புகாரில் குறிப்பிட்டுள்ள பெண்கள், தொடர்ச்சியாக அவர்கள் எவ்வாறு ‘சமரசம்’ செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று மேற்கோள்காட்டியிருந்தனர்.
அதற்கு கைமாறாக, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு நடிகை பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, “மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கழிவறையில் இருந்து வெளியே வந்த என்னை பிரபல நடிகர் ஒருவர் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் இது நடந்தது,” என்று குற்றம் சாட்டினார்.
“அவரை தள்ளிவிட்டு நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். திருவனந்தபுரத்தில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு பிரபல நடிகர் ஒருவர், நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் என்னை காண அங்கே வருவார் என்றும் கூறிக் கொண்டிருந்தார்,” என கூறினார்.
“நிச்சயமாக அது முடியவே முடியாது என்று நான் தெளிவாக கூறினேன். ஆனால் அவர், உங்களுக்காக நான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன் அதனால் இதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் படபிடிப்பின் போது தேவையில்லாமல் என்னிடம் கத்திக் கொண்டிருந்தார். இதே போன்று நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரும் என்னிடம் கூறினார். எனக்கு இந்த கலை பிடிக்கும் என்பதால்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் நான் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ளவில்லை,” என்று கூறினார்.
”’அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் உறுப்பினராகவே நான் ‘சமரசம்’ செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.” என அவர் கூறினார்.
”தயாரிப்பு மேற்பார்வையாளர் ஒருவர் காரில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 2013ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். ஆனால் யார் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை” என்றும் அந்த நடிகை தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன?
புகார்களுக்கு உள்ளான சில நடிகர்கள், இயக்குநர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றினால், இந்த செய்தித் தொகுப்பில் சேர்க்கப்படும்.
அறிக்கையில் இடம் பெற்றுள்ள புகார்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை நடைபெற்றது.
கீதா விஜயன், ஶ்ரீதேவிகா போன்ற நடிகைகள் பிரபல இயக்குநர் ஒருவர் நள்ளிரவில் அவர்களின் அறைக் கதைவை தட்டியதாக புகார் அளித்துள்ளனர்.
ஶ்ரீதேவிகா நான்கு நாட்கள் இந்த தொந்தரவை எதிர்கொள்ள நேரிட்டது. கீதா விஜயன் இது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளார்.
அந்த இயக்குநர் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விதமான பதிலும் இதுவரை வழங்கவில்லை. அவர் இது தொடர்பாக பேசினால் இந்த செய்தி தொகுப்பில் பின்னர் இணைக்கப்படும்.
பெண் கதை ஆசிரியர் ஒருவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
2022ம் ஆண்டு கொல்லத்தில் ஒரு திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைக்காக சென்ற போது இயக்குநர் – நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் புகார் அளித்தார்.
அந்த இயக்குநர் – நடிகர் மன்னிப்பு கேட்டார் எனவும் மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதற்காக உதவியாளர் மூலம் ரூ. 10 ஆயிரம் கொடுக்க முயன்றார் எனவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் பின், அந்த கதை ஆசிரியர் திரைப்படத் துறையை விட்டே வெளியேறினார்.
ஒரு நடிகை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார்.
காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ள சித்திக், அந்த நடிகை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குற்றம் சாட்டினார்.
2016ம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதை சித்திக் மறுத்துள்ளார்
“அந்த நடிகை பெற்றோர்களுடன்தான் என்னை சந்தித்தார். எட்டறை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை,” என்று சித்திக் குறிப்பிட்டார்.
நடிகர் சங்கம் மற்றும் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று சித்திக் கூறினார். ஆரம்பத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரணாக தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் சித்திக்.
நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சட்டம் கூறுவது என்ன?
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர். அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்ட காரணத்திற்காக மக்களும் ஆளும் கட்சியை விமர்சிக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
வேறு விதமாக கூற வேண்டும் என்றால், மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளாது.
“பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கவில்லை என்றால், அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஒரு குற்றம் நடந்திருக்கும் பட்சத்தில் அரசு தாமாக நடவடிக்கை எடுக்க இயலுமா? இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்,” என்று கேரளாவை சேர்ந்த, பெயர் கூற விரும்பாத, அமைச்சர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
நீதிபதி ஹேமா கமிட்டியிடம் குற்றம் சாட்டியுள்ள நபர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சிலர் தங்களின் வாதத்தை முன்வைக்கின்றனர்.
கமிட்டிக்கு முன்பு ஆஜராகும் போது பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று மாலா பார்வதி கூறியுள்ளார்.
கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்தியா ராஜூ, பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, “ஒரு குற்றம் நடைபெறும் போது, இது அரசுக்கு எதிரான குற்றமாக இருக்கிறது. விசாரணை முகமைகள் தாமாக முன்வந்து விசாரித்து நீதிமன்ற வழக்கு தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களே வந்து குற்றம் சுமத்தினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை,” என்று குறிப்பிட்டார்.
ஒரு குற்ற வழக்கு வரும் போது, மாநில அரசு ஒரு முக்கியமான வாதியாக மாறுகிறது. இது போன்ற சூழலில் அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தியா கூறுகிறார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கேரள உயர் நீதிமன்றம் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய 54 பக்கங்களையும் இணைத்து இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். திரைத்துறை மட்டுமின்றி, கட்டுமான துறை, கார்ப்பரேட் துறை, சட்டத்துறை உள்ளிட்ட இதர துறைகளிலும் இதன் தாக்கத்தை காண இயலும், என்று சந்தியா கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)