இறையருள் செல்வர்கள் 19: ‘வறட்சி நீங்கிட அன்னாபிஷேகமே தீர்வு’ காஞ்சி பெரியவாவின் முடிவு!

இறையருள் செல்வர்கள் 19: ‘வறட்சி நீங்கிட அன்னாபிஷேகமே தீர்வு’ காஞ்சி பெரியவாவின் முடிவு!

Published:Updated:

இறையருள் செல்வர்கள்

0Comments
Share

இறையருள் செல்வர்கள் 19: ‘வறட்சி நீங்கிட அன்னாபிஷேகமே தீர்வு’ காஞ்சி பெரியவாவின் முடிவு! ஐப்பசி அன்னாபிஷேகம் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பெருவுடையாருக்குச் செய்யப்படும் பிரமாண்ட அன்னாபிஷேக நிகழ்வுதான்.

இறையருள் செல்வர்கள்

ஸ்ரீகாஞ்சி மகானின் அருளாசியோடு, ஸ்ரீசங்கரமடம் சார்ந்த அன்பர்களின் பங்களிப்புடன் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்து நடத்தப்படும் இப்பெரும் வைபவம் விசேஷமானது. இதன் பின்னணியில் உள்ள வரலாறு பலரும் அறியாதது.

கடந்த 40 வருடங்களாக இந்த வைபவத் தைப் பொறுப்பேற்று செய்து வரும் ஸ்ரீமடம் ஜடாதரன் அண்ணா மற்றும் ஸ்ரீரவிஷங்கர் அண்ணா இருவரிடமும் பேசினோம்.

`‘1980-களில் காஞ்சிப் பெரியவர் உத்திர பாரத யாத்திரையில் இருந்த நேரம். ஸ்ரீமேட்டூர் சுவாமிகள் உடனிருந்து தலம்தோறும் அணுக்கம் செய்து வந்தார்கள். அப்போது, ஹரித்வாரிலிருந்து கங்கை நீரானது, 20 லிட்டர் கொள்ளளவு உடைய 365 கேன்களில் நிரப்பப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது. தினமும் மகாசுவாமிகள் கங்கை நீரில் ஸ்நானம் செய்திட வேண்டும் என்பதற்காக ஸ்ரீமேட்டூர் சுவாமிகளால் செய்யப்பட்ட ஏற்பாடு இது. ஆனால், காஞ்சி மடத்தில் நுழைந்த லாரியிலிருந்து கேன்களை இறக்கு வதற்கு முன்னரே, லாரியைக் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு திருப்பும்படி மகாபெரியவர் உத்திரவிட்டார்.

`ராஜேந்திரச் சோழன், தமது வட இந்திய படையெடுப்பின்போது கங்கை நீரைக் கொண்டு வந்து சோழபுரத்திலுள்ள பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தவர். அதற்குப் பிறகு பல நூற்றாண்டு களாகக் கோயிலைக் கவனிப்பார் இல்லாத நிலை. அதனால் மறுபடியும் பிரகதீஸ்வரருக்குக் கங்கை நீரால் குளிரக் குளிர அபிஷேகம் செய்யவேண்டும் என்பதே விருப்பம்’ என சுவாமிகள் விளக்கியவுடன் அனைவரும் நெகிழ்ந்து நின்றனர்.‌

கங்கைகொண்ட சோழபுரம் கோயில்
கங்கைகொண்ட சோழபுரம் கோயில்

விஜயநகர ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஏராளமான தென்னிந்திய ஆலயங்கள் சூறையாடப்பட்டன.‌ அதிலிருந்து காஞ்சி புரமும் தப்பவில்லை. 1800-க்குப் பிற்பாடு, காஞ்சி மடத்தின் 61 மற்றும் 62-வது பீடாதிபதி கள் தங்கள் மடத்து நிர்வாகத்தினை தெற்கே மாற்றிக்கொண்டார்கள். பல இடங்களுக்கு யாத்திரை செய்த நிலையில், நிறைவாக உடையார்பாளையம் ஜமீன்தார், மடத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திட முன்வந்தார். ஸ்ரீமடம் அன்பர்கள் தங்களது பரிவாரங்களுடன் வெகுநாள்கள் அங்கு தங்கியிருந்தனர். ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான ஆலயங்களில் கங்கை கொண்ட சோழீஸ்வரமும் ஒன்று.

காலங்கள் உருண்டோடின. பல அரசியல் நிர்வாக மாற்றங்களுக்குப் பிறகு நிலைமை சீரானது. காஞ்சிபுரத்தில் 68-வது பீடாதி பதியாக பட்டமேறினார் நம் மகா பெரியவர்.

ஒருமுறை, கடந்த காலத்தில் காஞ்சி மடத்திற்காக உடையார்பாளையம் ஜமீனால் செலவழிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய செப்புத் தகடுகளைக் கண்டுபிடித்த மகான், அதை வாசித்துப் பார்த்தார்.

ரவிஷங்கரன்
ஸ்ரீரமணி
ஜடாதரன்

கங்கைகொண்ட சோழபுரத்து பிருகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் இருந்து ஸ்ரீமடத்தாருக்காகச் செலவு செய்யப்பட்ட விபரத்தினை அறிந்தார் சுவாமிகள். உடனே, அன்றைய தேதி வரை செலவுக்கணக்கிற்கான வட்டியு டன் ஆகும் தொகையைத் திருப்பிச் செலுத்த உத்திரவிட்டார். கணக்கிட்டு வந்த தொகையோ பல கோடி என்பதால், தீர்வு சொல்ல இயலா மல் அங்கிருந்தோர் திகைத்தனர்.‌

ஸ்ரீமடமாக இருந்தாலும் சிவன் சொத்தை அனுபவிக்க உரிமை இல்லை என்பதால், இதற்குப் பிராயச்சித்தம் செய்வதே முறை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் மகாபெரியவர். அதன்படியே நடந்தது.

ஒருமுறை, வறட்சியின் பாதிப்பில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் சிக்கியது. வருமானம் அறவே தடைபட்டதால், சுவாமி நிவேதனத்திற்கே சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், மடத்திற்குப் பிரசாதம் கொண்டு வந்த கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குருக்கள் ஸ்ரீவேதவினேச சிவாசார்யர் காஞ்சி மகானிடம் முறையிட்டு அழுதார்.

ஒருவேளை நைவேத்தியத்திற்கும், விளக்கு ஏற்றுவதற்கும்கூட பெரிதும் சிரமமாக உள்ளது என்று கண்ணீர் சிந்தினார். பிறகு, தன் நிலையை மகானிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதியுடன் புறப்பட்டார்.

உடனே, மகாபெரியவர் தன்னிடம் அணுக்கமாக இருந்த சிலரை சோழபுரத்திற்குப் போய் பார்த்து வரச்சொல்லிப் பணித்தார். விஸ்வநாத சாஸ்திரி, ஜடாதரன், பசுபதி, ரவிஷங்கரன் ஆகிய நால்வரும்தான் மகாபெரியவர் தெரிவு செய்த அந்த அணுக்கர்கள்.

அடுத்த தினமே காஞ்சிபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் பயணித் தது இந்த நண்பர்கள் குழு. அங்கோ, கோயில் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆளுயர புதர்க் காடு கோயிலையே மறைந்திருந்தது. விஷயம் மகானுக்குத் தெரியவந்தது.

இறையருள் செல்வர்கள்
இறையருள் செல்வர்கள்

அவரின் யோசனைப்படி இயன்ற அளவு பணம் சேகரித்து, வங்கியில் வைப்புத் தொகை யாக்கினர். அதிலிருந்து கிடைக்கிற வட்டிப் பணமானது மாதாமாதம் குருக்களுக்கு கிடைக்கும்படிச் செய்தார். அதைக்கொண்டு அங்கு பூஜை நடந்தது.

அடுத்து, கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்று மகான் நினைத்தார். அன்னாபிஷேக கைங்கர்யம் செய்வதன் மூலமே அப்பகுதியில் வறட்சி நீங்கி வளம் கிடைத்திடும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் மகான். அரிசி மற்றும் தேவையானப் பொருள்களுடன் நண்பர்கள் குழு கங்கைகொண்ட சோழ புரத்தை அடைந்தது. ஸ்ரீமேட்டூர் சுவாமிகள் வழிகாட்டுதலுடன் பணிகள் தொடங்கின. வெகுவிசேஷமாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பிறகு, அடுத்தடுத்த வருடங்களிலும் தடையில்லாது தொடரப்பட்ட இந்த நிகழ்வு, இன்றுவரையிலும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதற்கு, காஞ்சி மகானின் அருளாசியே காரணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொடக்கத்தில் 100 மூட்டை அரிசியைச் சமைத்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டதாம். பாணத்தின் உயரமே ஆறடிக்கும் மேல் என்பதால், அன்னம் சரிந்து சரிந்து விழ… லிங்க பாகத்தினை மூடுவதே பிரயத்தனமாக இருந்ததாம். சில வருடங்களுக்குப் பிறகு, இதற்கென்றே பிரத்யேகமான துருப்பிடிக்காத எஃகு (மேஷ்) வளையம் ஒன்றினைத் தயாரித்து பாணத் தினைச் சுற்றிக் கவசம் போல பொருத்தி, அதனிடையில் அன்னத்தினை நிரப்பி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக… வருடம் தோறும் ஏராளமான ஸ்ரீமடத்தின் பக்தர் களும், தன்னார்வலர்களும், பாடசாலை வித்யார்த்திகளும் ஆர்வமாகத் தங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். திருமுறை மற்றும் வேத பாராயணம் மட்டுமன்றி, உடையவரையும் கர்ப்பக் கிருகத்தினையும் சுத்தம் செய்வதிலும் பாடசாலை சிறார்களின் பங்கு மகத்தானது’’ என்று முடித்துக் கொண்டார்கள் அந்த இரு மாஹானுபாவர்களும்.

கருணைத் தெய்வமான காஞ்சி மகானின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, இன்று வரை நிறைவேற்றி வரும் அந்த இறையருள் செல்வர்களை வணங்கி விடைபெற்றோம்.

– அடியார்கள் வருவார்கள்…

Author