எப்போதும் காக்கும் மிலிட்டரி கணபதி! திருவனந்தபுரத்தில் அதிசய கணபதி!

எப்போதும் காக்கும் மிலிட்டரி கணபதி! திருவனந்தபுரத்தில் அதிசய கணபதி! தங்களது வேண்டுதல் நிறைவடைந்தால் 108 தேங்காய் உடைப்பது என பக்தர்கள் தங்கள் விருப்பப்படி எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

Published:Updated:
மிலிட்டரி கணபதி

மிலிட்டரி கணபதி

0Comments
Share
எப்போதும் காக்கும் மிலிட்டரி கணபதி! திருவனந்தபுரத்தில் அதிசய கணபதி!

எப்போதும் காக்கும் மிலிட்டரி கணபதி! திருவனந்தபுரத்தில் அதிசய கணபதி!

Listen to Vikatan stories on our AI-assisted audio player

எப்போதும் காக்கும் மிலிட்டரி கணபதி! திருவனந்தபுரத்தில் அதிசய கணபதி!

மிலிட்டரி கணபதி
மிலிட்டரி கணபதி

இந்தியாவின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே கோயிலான கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி மகாகணபதி கோயிலுக்கென்று பல சிறப்புக்கள் உள்ளன. அதில் முக்கியமானவற்றை இங்கு பார்க்கலாம்.

பழவங்காடி மகா கணபதி கோயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. ரயில் நிலையத்தின் பின் வாசலில் இருந்து நடந்தே இக்கோயிலை அடையலாம். கிழக்கே கோட்டை பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இத்திருத்தலம் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயத்தின் மிக அருகே அமைந்துள்ளது.

நான்கு முகங்களுடன் சுமார் 6 அங்குல உயர உருவம் கொண்ட கல் விக்ரஹத்தை தங்கக் கவசம் அணிவித்துப் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரபஞ்ச கணபதி என்ற திருநாமத்திலேயே பழவங்காடி கணபதிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மஹாகணபதி பிரதான தெய்வமாகவும், கோயிலின் வலதுபுறம் துர்க்கை, இடதுபக்கம் வேட்டைக்கொருமகன் (ஐயப்பன்), இடதுபுறம் சற்று தள்ளி நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோயிலின் மகாமண்டபத்தில் நின்று எல்லோரும் மகாகணபதியை தரிசிக்கலாம். சந்நிதிக்கு அருகே சென்று வழிபட வேண்டுமானால் பாரம்பர்ய உடையான வேட்டி அணிந்துதான் செல்ல வேண்டும்.

மிலிட்டரி கணபதி
மிலிட்டரி கணபதி

வேணாட்டின் தலைநகரமாக 1744 முதல் 1760 வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் இருந்து வந்தது. அப்போது பத்மநாபபுரம் கோட்டையில் இரவு காவல் காக்கும் படைவீரர்கள் இசக்கி தெய்வங்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 1755-ம் ஆண்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில் அருகே உள்ள புத்தனார் கால்வாயில் திருவிதாங்கூர் படை வீரர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அந்த வீரரின் காலில் தட்டுபட்டக் கல்லை எடுத்து பார்த்தபோது, அது நான்கு முகங்கள் கொண்ட விநாயகர் சிலை எனத் தெரியவந்தது. 6 அங்குல உயரத்தில் சிறிய அளவில் இருந்த அந்த சிலையை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டபோது இசக்கிகள் தொல்லை செய்யவில்லை. அதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் ராணுவத்தினர் இந்த கணபதியை தங்களின் காவல் தெய்வமாக வழிபட தொடங்கினர்.

மேலும் இந்த மகாகணபதியை 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகி ஒருவர் தன்னுடன் வைத்து பூஜித்து வந்ததாகவும். அந்த கணபதியை இந்தியாவின் அனைத்து புனித தலங்களுக்கும் எடுத்துச் சென்று பூஜித்ததாகவும், அவர் கணபதியை கையில் வைத்துக்கொண்டு புத்தன் ஆற்றில் மூழ்கி ஜீவசமாதி சமாதி ஆனதாகவும் கூறுகிறார்கள். அதுவே ராணுவ வீரரின் கையில் அகப்பட்டதாகவும் கூறுகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் தனது தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றியபோது ராணுவத்தினர் இந்த கணபதியையும் கையோடு எடுத்துச் சென்று இப்போது கோயில் அமைந்துள்ள பழவங்காடியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

மிலிட்டரி கணபதி
மிலிட்டரி கணபதி

தொடக்க காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் படையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருந்தது. அன்று அந்த படை ‘நாயர் பிரிகேட்’ என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ‘ஸ்டேட் ஸ்பேர்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இப்போது இந்தியன் ஆர்மியின் ‘மெட்ராஸ் ரெஜிமெண்ட் படை’யாக பெயர் மாறி உள்ளது.

அதனால்தான் பழவங்காடி கணபதி கோயில் மிலிட்டரி கணபதி என அழைக்கப்பட்டுவருகிறது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் இக்கோயில் மேலாளர் போன்ற பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். வழக்கமாக ராணுவ முகாம்களுக்கு உள்ளே உள்ள கோயில்களை ராணுவ வீரர்கள் பராமரிப்பது வழக்கம். ஆனால், மிலிட்டரி கேம்பஸுக்கு வெளியே தனியாக அமைந்துள்ள ஒரு கோயிலை ராணுவம் நிர்வகித்து வருவது இங்கு மட்டும்தான். அதனால்தான் இந்தியாவிலேயே ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே கோயில் என்ற பெருமையை பழவங்காடி கணபதி கோயில் பெற்றுள்ளது.

மிலிட்டரி கணபதி
மிலிட்டரி கணபதி

ஆரம்ப காலத்தில் இக்கோயில் பூஜைகள், விழாக்களுக்காக என மெட்ராஸ் ரெஜிமெண்ட் படை வீரர்களின் சம்பளத்தின் ஒருபகுதி மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் பக்தர்கள் வழிபாடுகளை நடத்திக் கொடுப்பதாலும், காணிக்கை உள்ளிட்டவை அதிகமாக வருவதாலும் ராணுவ வீரர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ராணுவ கட்டுப்பாடு போலவே பழவங்காடி மிலிட்டரி கணபதி கோயிலிலும் தினமும் குறித்த நேரத்தில் பூஜைகளும், கர்மங்களும் நடைபெற்று வருகின்றன. தினமும் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.45-மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு உஷபூஜை, 7.40 எதிர்த்த பூஜை, 8.10 மணிக்கு பந்தீரடி பூஜை, 8.30 மணிக்கு மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

பிற கோயில்களைப்போன்று எப்போதும் அர்ச்சனைக்கு கொடுக்க முடியாது. காலை 9 மணி, 9.30 மணி, 10.15 மணிக்கு மட்டுமே அர்ச்சனைக்கு கொடுக்க முடியும். தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதே இக்கோயிலின் பிரதான வழிபாடாக உள்ளது. தொழில் தடை, வேலை, திருமணம் உள்ளிட்ட தடைகள் உடைபட்டு விலக பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் இந்த திருத்தலத்தில் உடைக்கப்படுகின்றன. தங்களது வேண்டுதல் நிறைவடைந்தால் 108 தேங்காய் உடைப்பது என பக்தர்கள் தங்கள் விருப்பப்படி எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துகின்றனர். தினமும் நடைபெறும் கணபதி ஹோமத்தில் பக்தர்கள் பங்கெடுப்பதையும் முக்கிய வழிபாடாக கருதுகின்றனர்.

இங்கு கொடிமரம் இல்லை. ராணுவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டு உத்தரவு பெற்றுக்கொள்கின்றனர். மன்னர்கள் காலத்தில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் பெருக வேண்டியும் பழவங்காடி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். அதுகுறித்த தகவல்கள் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் குறிப்பேடுகளில் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த மிலிட்டரி கணபதியை வணங்கி வாழ்வில் முன்னேறலாமே!

Author