சுவையான பிரியாணி, சவாலான பிசினஸ் – தேவயானியின் ரூ.420 கோடி பந்தயம் வெல்லுமா?
சவாலான பிசினஸ், கடுமையான போட்டி. பிரியாணி தொழிலுக்காக தேவயானி நிறுவனம் போட்ட 420 கோடி ரூபாய் பந்தயம்.

பிரியாணி – biryani
உலகம் முழுவதுமே சில உணவுகள் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், வெகு சில உணவுகளுக்குத்தான் மக்கள் எமோஷனல் வெய்ட்டேஜ் கொடுக்கின்றனர். அந்த வகையில், இந்திய உணவுகளின் கிங் எனப் பிரியாணியைக் கூறலாம். அந்த அளவுக்குப் பிரியாணியை இந்தியர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். குறிப்பிட்ட சில மாநிலங்கள் என எந்த வரம்புகளும் இன்றி நாடு முழுவதுமே பிரியாணி காதல் பரவிக் கிடக்கிறது. செட்டிநாடு பிரியாணி, சென்னை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, லக்னோ பிரியாணி எனப் பிரியாணியில் ரகங்கள் பல!
பிரியாணி பிசினஸ்:
சன்டே வந்தால் கொஞ்சம் பிரியாணி. திருமண விருந்துகளிலும் அப்பப்போ. பண்டிகைகள் வந்தால் கண்டிப்பாக வேண்டும். சமீபத்தில் நள்ளிரவு பிரியாணிகள்தான் ட்ரெண்ட். பல இடங்களில் நள்ளிரவில் பிரியாணி கடைகள் முளைத்திருக்கின்றன. ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் அதிகம் டெலிவரி செய்த உணவுகளின் பட்டியலை வெளியிடுவார்கள். அதில், பல ஆண்டுகளாகப் பிரியாணிதான் முதலிடத்தில் இருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஸொமேட்டோ நிறுவனம் 17 கோடி பிரியாணிகளை டெலிவரி செய்ததாகத் தெரிவித்தது. இப்படி, உணவுத் துறையின் சூப்பர் ஸ்டார் பிரியாணிதான்.

இதனால்தான், கே.எஃப்.சி போன்ற சர்வதேச உணவக நிறுவனங்கள் கூட இந்தியாவில் பிரியாணி போன்ற காம்பினேஷன்களை வியாபாரம் செய்தன. பிசினஸ் ரீதியாகப் பார்த்தால், பிரியாணியின் சுவை சிறப்பாக இருந்தால் சக்ஸஸ்தான். இதைவிட முக்கியமாக, பார்சல் செய்வதற்கும், டெலிவரி செய்வதற்கும் எளிதாக இருப்பதுதான் பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி. இந்தியப் பிரியாணி சந்தையின் மதிப்பு சுமார் 20,000 – 25,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாலையோர கடைகள், சிறு உணவகங்கள், பெரிய உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், கார்ப்பரேட் உணவகங்கள், ஸ்டார் ஹோட்டல்கள் எனப் பிரியாணி சந்தை பரந்து விரிந்து கிடக்கிறது.
ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகப் பிரியாணி பிசினஸில் பெரியளவில் இதுவரை யாரும் வெற்றிபெறவில்லை. இவ்வளவு பிரமாண்டங்கள் அடங்கிய பிரியாணி பிசினஸில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக, 2015-ம் ஆண்டில் பிரியாணி பை கிலோ (Biryani By Kilo) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
45 நகரங்களில் 100 உணவகங்கள், சுமார் 70 கிளவுட் கிச்சன்கள் எனப் பிரியாணி பை கிலோ நிறுவனம் இப்போது வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் 2023-24 நிதி ஆண்டில் 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2018-19 நிதி ஆண்டு முதல் 55% கூட்டு வருவாய் வளர்ச்சியைச் சாதித்துள்ளது. சுவையான, பிரீமியம் பிரியாணியில்தான் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

சவால்கள்:
பிரியாணி பிசினஸ் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருந்தாலும் கூட, ஏகப்பட்ட சவால்களும் நிறைந்துள்ளது. முதலில், பிரியாணி சந்தை பயங்கர போட்டி மிக்கது. சிறு வியாபாரிகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லோரும் போட்டிப் போடுகின்றனர். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பிரியாணியிலேயே புதுப்புது ட்ரெண்டுகளை கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பங்களும் மாறிக்கொண்டே வருகிறது.
பிசினஸ் செலவுகளோ ஜாஸ்தி. தரமான சமையல் பொருள்களில் தொடங்கி, திறமையான சமையல்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் வரை, பிரியாணி வியாபாரத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தொடர்ச்சியாகச் சுவையான பிரியாணி கொடுக்க வேண்டும். சுவை மாறினால் வாடிக்கையாளர்கள் பறந்துவிடுவார்கள். இவ்வளவு சவால்கள் இருந்தாலும், பிரியாணி எனும் பிரம்மாண்டத்தில் ரிஸ்க் எடுப்பதற்காக ஒரு மெகா கார்ப்பரேட் டீல் நடந்திருக்கிறது.
பிரியாணி டீல்:
தேவயானி இன்டர்நேஷனல் (Devyani International) நிறுவனம் இந்தியாவில் கே.எஃப்.சி, பீட்சா ஹட் போன்ற உணவகங்களை நடத்தி வருகிறது. உணவகத் துறையில் முன்னணி நிறுவனமான தேவயானி இன்டர்நேஷனலுக்கு 2,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள் இருக்கின்றன. இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம்.
இந்த நிலையில், ஸ்கை கேட் ஹாஸ்பிட்டாலிட்டி (Sky Gate Hospitality) நிறுவனத்தின் 80.72% பங்குகளை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக ஏப்ரல் 24-ம் தேதி தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கை கேட் நிறுவனத்திடம்தான் பிரியாணி பை கிலோ பிராண்டு இருக்கிறது. இதுபோக கோய்லா பட்டர் சிக்கன், தி போஜன், கெட்-அ-வே போன்ற பிராண்டுகளும் ஸ்கை கேட் நிறுவனத்திடம் இருக்கின்றன. இந்த ஸ்கை கேட் நிறுவனத்தின் 80.72% பங்குகளையும் 419.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்குவதற்கு தேவயானி இன்டர்நேஷனல் முடிவு செய்திருக்கிறது.

இந்த டீல் கார்ப்பரேட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரியாணி பை கிலோ நிறுவனத்திடம் சுவையான பிரியாணியும், நிறைய உணவகங்களும் இருக்கின்றன. தேவயானி நிறுவனத்திடம் உணவகத் துறையில் வேகமாக விரிவாக்கம் செய்வதற்கான திறனும், அனுபவமும் இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் ஒன்று சேர்ந்தால், அது பிரியாணி பிசினஸில் வெற்றியும், வளர்ச்சியும் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த டீல் போடப்பட்டுள்ளது. மேலும், தேவயானி நிறுவனம் கே.எஃப்.சி, பீட்சா ஹட் போன்ற மேற்குலக உணவகங்களையே நடத்தி வருகிறது. தற்போது பிரியாணியையும் சேர்த்து, உள்நாட்டு உணவுகளையும் போர்ட்ஃபோலியோவில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
ரிஸ்க் – லாபம்:
கடும் போட்டி மிகுந்த பிரியாணி சந்தையில், ரிஸ்க் எடுத்துத்தான் தேவயானி நிறுவனம் இந்த டீலை போட்டுள்ளது. இதுதவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தேவயானி நிறுவனத்தின் கே.எஃப்.சி, பீட்சா ஹட் உணவகங்களில் விற்பனை குறைந்திருக்கிறது. கொஞ்சம் உள்நாட்டு உணவுகளையும் வியாபாரம் செய்து பார்ப்போமே என இந்த முடிவை எடுத்திருக்கிறது.
ஆனால், பிரியாணி பிசினஸ் அவ்வளவு ஈஸி அல்ல. ஏற்கெனவே பிரியாணி பிசினஸில் உள்ள சவால்களைப் பார்த்தோம். ஆனால், பிரியாணியில் பல லோக்கல் வெர்ஷன்கள் இருக்கின்றன. ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி போன்றவை சீரகச் சம்பா அரிசியில் சமைக்கப்படும். ஹைதராபாத் பிரியாணி என்றால் கட்டாயம் தம் போட்டிருக்க வேண்டும். கொல்கத்தா பிரியாணியில் உருளைக்கிழங்கு இல்லை என்றால் தொடவேமாட்டார்கள். இதற்கு மத்தியில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூரிலேயே பிரபலமான பிரியாணி உணவகங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் சமாளித்தாக வேண்டும்.

என்ன இருந்தாலும், இது ஒரு தைரியமான டீல். ஒரு வேளை, பிரியாணியின் சுவையும், தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பலமும் சேர்ந்து இது ஒரு கேம் சேஞ்சராக கூட அமையலாம். பிரியாணி பிசினஸில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் முதல் முறையாக வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் இந்த டீலுக்கு பங்குச் சந்தை பாசிட்டிவான ரியாக்ஷன் கொடுத்திருக்கிறது. டீல் பற்றிய செய்தி வெளியானதும், ஏப்ரல் 24-ம் தேதி வர்த்தகத்தில் தேவயானி இன்டர்நேஷனல் பங்கு விலை சுமார் 2.5% உயர்ந்துள்ளது.