தெலங்கானா தேர்தல்: எதிர்க்கட்சிகளின் ஆயுதமாக மாறும் கே.சி.ஆரின் ‘வாரிசு அரசியல்’
- எழுதியவர்,பல்லா சதீஷ்
- பதவி,பிபிசிக்காக
தெலங்கானாவில் காலேஸ்வரம் திட்டத்தைத்தான் பிஆர்எஸ் அரசு செய்த சாதனைகளில் ஒன்றாகக் கூறுகிறார்கள்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மேடிகட்டா தடுப்பணையின் தூண்கள்தான் சமீபத்தில் சேதமடைந்தன. அந்த தடுப்பணையும் இடிந்து விழுந்தது. இத்திட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் அனைத்தும் தெலங்கானா மாநில முதல்வர் கல்வகுண்டல சந்திரசேகர் ராவை(கே.சி.ஆர்) முன் வைத்தே பேசப்படுகின்றன.
ஏனெனில், அந்தத் திட்டத்தை மறுவடிவம் செய்தவர் கேசிஆர் தான் என்று அவரது மருமகனும், முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான ஹரிஷ் ராவே கூறியுள்ளார்.
காலேஸ்வரம் திட்டத்தில் கேசிஆர், தலையிட்டு பெரிய பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கி திட்டத்தையே மாற்றிவிட்டார் என பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி அடிக்கடி கூறி வந்தது. தெலங்கானாவில் உள்ள சில பொறியாளர்களும் இதையேதான் குறிப்பிட்டனர்.
ஆனால், சட்டம், இலக்கியம் படித்த கேசிஆர், எப்படி காலேஸ்வரம் திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய, கட்டடம் கட்டும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்க முடியும் என யாரும் கேள்வி எழுப்பவில்லை.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் மற்றும் பாஜக.வுக்கு மேடிகட்டா தடுப்பணை விவகாரம் பெரும் ஆயுதமாக மாறியது. கேசிஆர் மறுவடிவமைப்பு செய்ததால்தான், மேடிகட்டா தடுப்பணை சேதமடைந்ததாக காங்கிரஸூம், பாஜக.வும் விமர்சித்து வருகின்றன.
இந்தத் தடுப்பணை விவகாரத்தைப் போலத்தான், தெலங்கானாவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் கேசிஆர் தான் காரணம் என அனைத்தும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சுற்றியே குற்றம் சாட்டப்படுகிறது.
வாரிசு அரசியல் செய்கிறாரா கேசிஆர்?
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலக் கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கட்சியின் தலைவர் பதவியை வகிக்கின்றனர். கட்சியில் எப்போதும் நம்பர் ஒன் பதவி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான் வழங்கப்படும்.
சில நேரங்களில், கட்சியின் இரண்டாம் இடம்கூட அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்த இடங்கள்தான், மற்ற நபர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், இந்த விஷயத்தில் பிஆர்எஸ் கட்சியைப் பொறுத்தவரை, முதல் இரண்டு இடங்கள் மட்டுமல்ல, முதல் ஐந்து பதவிகளுமே கேசிஆர் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிகளுக்கு வேறு யாரும் வர முடியாது.
பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் மகன் கல்வகுந்த்லா தாரக ராமராவ்(கேடிஆர்) தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தான் கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளார்.
கேசிஆரின் மருமகன் ஹரிஷ் ராவ், நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். அவரது மகள், கல்வகுந்த்லா கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார்.
கட்சியிலும் ஆட்சியிலும், கேசிஆரின் குடும்ப உறுப்பினர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எப்போதும் இருந்து வருகிறது. மாநிலத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான ஹரகோபால் பிஆர்எஸ் கட்சிக்கு கிடைத்த வாய்ப்பை, அக்கட்சி தவறவிட்டிருப்பதாகக் கூறினார்.
“ஒரு வரலாற்றுப் போராட்டத்தில் இருந்த கட்சி என்ற வகையில், பிஆர்எஸ் மற்ற பிராந்திய கட்சிகளைப் போல இருக்காது என நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. தெலங்கானா மாநிலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்றிருந்த பேராசிரியர் கோதண்டராம் போன்ற செயல்பாட்டாளர்களை, பிஆர்எஸ் கட்சி சரியாகப் பயன்படுத்தவில்லை,” என்றார்.
தெலங்கானா தனி மாநிலமாக உருவான பின்னர், ஒரு குடும்பத்தின் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
“தெலங்கானா மாநிலத்திற்கான இயக்கம், ஜனநாயக முறையில் உருவானது. ஆனால், மாநிலம் உருவான பின்னர், அனைத்து அதிகாரமும் ஒரு குடும்பத்திடம் சென்றுவிட்டது. எந்த துறை அமைச்சரிடம் போனாலும், முதல்வரிடம்தான் கேட்க வேண்டும் என்கிறார்கள். இது ஒரு தனிநபர் சார்ந்த ஆட்சியாகவும் மாறியுள்ளது,” என்றார் பேராசிரியர் ஹரகோபால்.
இருப்பினும், தெலங்கானா மாநிலத்தை அமைப்பதற்கான இயக்கத்தில் கேசிஆரின் குடும்பத்தினர் போராடியதாகவும், அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுதான் இப்போது வகிக்கும் பதவிகளில் இருப்பதாகவும் பிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
தெலங்கானாவை தனி மாநிலம் ஆக்குவதற்குப் போராடிய இயக்கத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோதண்டராம் இதற்குப் பதிலளித்தார்.
“ஒரு செயல்பாட்டாளராக இருந்தாலும்கூட, கேசிஆரின் மகன் கேடி ராமா ராஜ்(கேடிஆர்) பெரிய பதவிகளுக்குத் தகுதியற்றவர். ஏனெனில் அவரைவிட அதிகமாகப் போராடிய நைனி நரசிம்ம ரெட்டிக்கு இரண்டாவது முறையாக அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
மற்றொரு செயற்பாட்டாளரான ராஜேந்தர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜிதேந்தர் ரெட்டி போன்றவர்களுக்கு எம்பி சீட் கொடுக்கப்படவில்லை. இப்படி தெலங்கானாவுக்காக உழைத்தவர்களுக்கே பதவிகள் வழங்கப்படவில்லை,” என்றார் கோதண்டராம்.
தெலங்கானா தனி மாநிலமாக உருவான பிறகு கேசிஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனிக்கட்சியை உருவாக்கினார் கோதண்டராம்.
ஆனால், வாரிசு அரசியல் குற்றச்சாட்டு என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானதுதான் என்கிறார் அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான சக்கரபாணி.
“நேரு இருந்தபோது, அவரது தங்கையும் மற்ற உறவினர்களும் சேர்ந்து ஐந்து பதவிகளை வகித்தனர். சொந்த குடும்பம் இல்லாத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இந்தியா முழுவதும் இதுதான் நிலை. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலங்களைவிட தெலங்கானாவில் நிலை மோசமாக இல்லை,” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “தெலங்கானா இயக்கம், புதிய தலைமையை உருவாக்கியது. 2014ஆம் ஆண்டில், தெலங்கானா சட்டமன்றத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்தார்கள். அதேநேரத்தில், ஆந்திராவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏதோ ஒரு அரசியல் பின்னணியில் இருந்து வந்திருந்தார்கள்,” என்றார் சக்கரபாணி.
மக்கள் பணத்தை செலவு செய்தாரா கேசிஆர்?
தெலங்கானா மாநிலம் ஜூன் 2, 2014 அன்று உருவாக்கப்பட்டது.
கேசிஆர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பல இந்து கோவில்களில் பிரார்த்தனை செய்தார். கொரிவி வீரபத்திரர் கோவில் முதல் திருமலை வெங்கடேஸ்வரர் கோவில் வரை, அனைத்து கோவில்களுக்கும் விலை உயர்ந்த நகைகள் வழங்கப்பட்டன. அஜ்மீர் தர்காவிற்கும் அவர் பரிசுகளை வழங்கினார். இது மதச்சார்பற்ற அரசா என்றும், பொதுப் பணத்தில் எப்படி கோவில்களுக்கு அன்பளிப்பு வழங்க முடியும் என்றும் யாரும் அவரிடம் கேள்வி எழுப்பவில்லை.
கேசிஆரின் மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், அவர் தனது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் நலன்களுக்காக பெருமளவிலான பொதுப் பணத்தைச் செலவிட்டுள்ளார்.
தெலங்கானா உருவான பிறகு, 2014-2018க்கு இடையே, ஒரு நாள்கூட, கேசிஆர் தலைமை செயலகத்திற்குச் செல்லவில்லை. இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு, சாகர் கரையில் சுமார் 25 ஏக்கரில் இருந்த தலைமைச் செயலகத்தை இடிக்கத் தொடங்கினர்.
கட்டடங்கள் எதுவும் சேதமடையாத போதும், அது இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதற்கு ஒரே காரணம், கேசிஆருக்கு பழைய தலைமைச் செயலகம் பிடிக்காததுதான்.
இந்தக் கட்டடங்கள் வெளியாட்களுக்குக் காட்ட போதுமானதாக இல்லை என்றும் சிலர் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றும் கூறி வந்தனர். சிலர் வாஸ்துவும் ஒரு காரணம் எனக் கூறினர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பழைய தலைமைச் செயலகம் இடிக்கப்பட்டது. கொரோனா பேரிடர்க் காலத்தில் படுக்கைகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டபோது, திடீரென கட்டடங்களை இடித்துவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டத் தொடங்கினார் கேசிஆர்.
இப்படியாக கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்துக்கு எத்தனை முறை கேசிஆர் வந்தார் என்ற கேள்வி எழுந்தால் அது வேறு விவாதம்.
தலைமைச் செயலகத்தை இடித்தது நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல, ஒரு சின்னமாக அது மாற வேண்டும் என்ற ஆசையாலும், வாஸ்து மீது அவருக்கு இருந்த நம்பிக்கையாலும் தான் புதிய கட்டடம் கட்டப்பட்டது என்று அவருக்கு நெருக்கமான பலர் கூறினர்.
“தெலங்கானா மாநிலம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை நன்றாக இல்லை. இப்படிப்பட்ட நேரத்தில் பல நூறு கோடிகள் செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் தேவையா என்று அவர் நினைக்கவில்லை.
பெயருக்காக கட்டமைப்புகளைக் கட்டுவதில் கவனம் செலுத்திய அவர், கல்வியில் கவனம் செலுத்தவில்லை. தெலங்கானாவுக்கு புதிய சின்னங்கள் தேவையில்லை. உள்ளதைப் பாதுகாத்தாலே போதும்,” என்றார் கோதண்டராம்.
குற்றச்சாட்டுகளை மறுத்த பிஆர்எஸ்
கேசிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பிஆர்எஸ் கட்சி நிராகரித்துள்ளது.
“கேசிஆர் மீது குற்றச்சாட்டுகள் கூற எந்த ஆதாரமும் இல்லை. அதனால்தான் ஊழலையும் குடும்ப ஆட்சியையும் விமர்சிக்கிறார்கள். கேசிஆரின் மகன் கேடிஆர், ஹரிஷ் ராவ் ஆகியோர் அரசியலில் தங்களை நிரூபித்துள்ளனர். தேர்தலில் போராடி வெற்றி பெறுகிறார்கள். தெலங்கானா கலாசார இயக்கத்திற்கு கவிதா ஆற்றிய சேவையை அனைவரும் பார்த்திருப்பார்கள்.
இங்கு குடும்ப ஆட்சி இல்லை. யாரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. பி.ஆர்.எஸ் கட்சி அரசியல் கட்சி என்ற வியூகத்தின்படி சில நேரங்களில் இயக்கத்தில் இல்லாதவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டும். அதில் தவறில்லை.
மேலும் புதிய தெலங்கானா சின்னமாக ஒரு செயலகம் கட்டுவது தவறா? நாடாளுமன்ற கட்டடத்தை பாஜக கட்டவில்லையா,” என்று பிஆர்எஸ் தலைவர் தசோஜு ஷ்ரவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியையும், கட்சியையும் கேசிஆர் நடத்தும் விதம், நம்பிக்கை மற்றும் நலன்களின் அடிப்படையில் பல்வேறு அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் விதம், கட்சியிலும் ஆட்சியிலும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம் என இவை அனைத்தும் இப்போது எதிர்க்கட்சியினருக்கு பெரும் ஆயுதங்களாக மாறியுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)