தமிழ்நாட்டில் ஆசிரியை சுடிதார் அணியக் கூடாதா? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

ஆசிரியை சுடிதார் அணியலாமா?

பட மூலாதாரம்,CHENNAI COPORATION / FACEBOOK

  • எழுதியவர்,சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி,பிபிசி நியூஸ்

நீ இப்படி தான் உடை உடுத்த வேண்டும், நான் சொல்வது போல் தான் நடக்க வேண்டும், எனக்கு எப்படி பிடிக்குமோ அப்படிதான் இருக்க வேண்டும் என்று யாராவது உங்களுக்கு கட்டளை இட்டால், “அதை செய்யாமல் உங்கள் அறிவுக்கும், அறிவியலுக்கும் எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்” என்று நமக்கு கற்பிப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஆனால், அந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் இப்படிதான் உடை உடுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் தொடங்கி சில அதிகாரிகள் வரை பாடம் எடுப்பதாக அவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். எல்லா மனிதர்களை போல சட்டம் வழங்கியுள்ள ஆடை சுதந்திரம் ஆசிரியர்களுக்கும் பொருந்தும், அந்த அடிப்படை உரிமை கூட அவர்களுக்கு கிடையாது என்று மறுப்பது எந்த வகை நியாயம் என்று குமுறுகின்றனர் தமிழ்நாட்டை சேந்த ஆசிரியர்கள்.

சமீபத்தில் சிதம்பரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரை கல்வி அதிகாரி ஒருவர் பள்ளியில் வழக்கமான கண்காணிப்புக்கு வந்தபோது , அவர் அணிந்திருந்த சுடிதார் குறித்து கேள்வி எழுப்பியதாக முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். நான் சுடிதார் அணிந்து பள்ளிக்கு செல்வதால் கற்றல் அல்லது கற்பித்தல் நிகழ்வுகளில் எந்த இடையூறும் ஏற்படாத போது எதற்காக இதற்கு இவ்வளவு புகார் எழுகிறது என்பது போன்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதிலிருந்து ஒரு சில மாவட்டங்களில் இதே பிரச்னையை ஆசிரியர்கள் எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் நீண்ட காலமாகவே ஆசிரியர்களி உடை குறித்தான சர்ச்சை நிலவி வருகிறது. முன்பு ஆசிரியர்கள் வேட்டி சட்டை மற்றும் ஆசிரியைகள் புடவை போன்ற ஆடைகளை பயன்படுத்தி வந்தனர். கால மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்ப ஆடையில் மாற்றம் ஏற்பட்டு சுடிதார், ஃபேண்ட் சட்டை போன்ற உடைகளும் பெரும்பான்மையான பொது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடையாக மாறிவிட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் அலுவல் ரீதியாக என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் பெரும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதற்காகவே, கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

பட மூலாதாரம்,TAMILNADU GOVERNMENT

படக்குறிப்பு,அரசு ஊழியர்கள் சுடிதார் அணிய அனுமதிக்கும் அரசாணை.

அரசாணை 67 என்ன சொல்கிறது?

பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து அரசாணை உள்ளது. அதன்படி, பெண்கள் புடவை அல்லது சல்வார் கம்மீஸ் மற்றும் ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது ஃபார்மல் ஃபேண்ட் சட்டை அணியலாம் என்று வழிகாட்டுதல் உள்ளது என்று கூறுகிறார்.

என்னதான் அரசாணை இருந்தாலும் அது வருவாய் சார் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று பலரும் நினைப்பதாக கூறுகிறார் வேலூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சிநேகலதா.

ஆனால், இந்த அரசாணை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்களும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பாரம்பரிய உடைகளாக கருதப்படும் வேட்டி சட்டை, சேலையை தாண்டி சுடிதார் மற்றும் ஃபேண்ட் சட்டையை அணியலாம் என்கிறார் அறிவொளி.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆசிரியர்கள் சுடிதார் அணிவதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆசிரியை சுடிதார் அணியலாமா?

சமீபத்தில் ஆசிரியர்கள் கலந்துகொண்ட ஒரு பயிற்சிக்கு சென்ற போது கூட என்னையும், மற்றுமொரு ஆசிரியையும் சுடிதாரை மாற்ற சொல்லியும், மாற்றாவிட்டால் பொதுவில் மைக்கில் அறிவிக்க வேண்டி வரும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கூறியதாக தெரிவிக்கிறார் கடலூரை சேர்ந்த ஆசிரியை கேத்தரின்.

இதே போல்தான் சில நாட்களுக்கு முன்பு ஜவ்வாது மலை அரசுப்பள்ளிக்கு வந்த கூடுதல் திட்ட இயக்குனர் ஒருவர் மாணவர்களின் சீருடை போல் சுடிதார் அணிந்திருந்த ஆசிரியை மகாவின் உடை குறித்து கடுமையாக பேசியுள்ளார். இந்த உடை அணியக்கூடாது என்ற அரசாணை ஏதும் இருக்கிறதா என்று அவர் கேட்டவுடன் அமைதியாக சென்றுள்ளார் அந்த அதிகாரி.

கடந்த 5 வருடங்களாக தொடக்கப்பள்ளி தொடங்கி இப்போது பணிபுரியும் உயர்நிலை பள்ளி வரை இந்த சீருடையையே அணிந்து வருகிறேன். இது மாணவர்களிடம் மேலும் நெருங்கி பழகி அவர்களுக்கான கற்பித்தலை மேம்படுத்த உதவுகிறது. அதே சமயம் அதிகாரிகள் முதலில் என்ன சுடிதார் அணிந்திருக்கிறீர்கள் என்று கேள்வியை முன்வைத்தாலும் பெரும்பாலும் எதிர்ப்பாக இருப்பதில்லை என்று கூறுகிறார் ஜவ்வாது மலை அரசு உண்டு உறைவிட பள்ளி ஆசிரியை மகாலக்ஷ்மி.

இதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றும் செய்திகள் வெளியே வந்தாலும் பல இடங்களில் அறிவிக்கப்படாத அழுத்தம் தங்கள் மீது இருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். இதனால், தங்களுக்கு தேவை இருந்தும் கூட ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வருவதில்லை.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆசிரியர்கள் உடலியல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

உடல் சார்ந்த பிரச்னைகள்

40 முதல் 50 வயதுக்கு மேல் ஆகும் ஆசிரியைகளுக்கு பலவகையான உடல் பிரச்னைகள் உள்ளன. அதிக நேரம் நின்றே பணி புரிவதால் அவர்கள் இடுப்பு வலி முதல் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். அதற்காக பெல்ட் அணிந்து வரும்போது புடவை அவர்களுக்கு உகந்த ஆடையாக இருக்காது. அதே போல் மாதவிடாய் சுழற்சி நிற்றல் காலங்களில் அவர்களுக்கு எந்த உடை உகந்ததோக இருக்குமோ அதையே அணிய முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். இது மட்டுமின்றி பல ஆசிரியர்களும் தனிப்பட்ட உடல்சார் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புடவை ஆசிரியர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் ஆடையாக இருக்கிறது.

உளவியல் சிக்கல்கள்

ஆசிரியர்களுக்கு உடை என்பது உளவியல் சிக்கல் தரும் ஒரு காரணியாகவும் இருப்பதாக கூறுகின்றனர். உதாரணத்திற்கு புடவை என்னதான் பார்க்க அழகாக கண்ணியமாக தோன்றினாலும் வகுப்பில் பாடம் நடத்தும்போது எந்த கவனச்சிதறலும் இல்லாமல் பணிபுரிய அது ஒரு தடைதான் என்கிறார் ஆசிரியை சிநேகலதா.

புடவை சரியாக இருக்கிறதா என்ற எண்ண ஓட்டம் எப்போதும் சிந்தனையில் ஓடி கொண்டிருப்பதால் அது கற்பித்தலை பாதிக்கிறது. முந்தைய காலம் போல் இப்போது மாணவர்கள் இல்லை. யாருக்கும் தெரியாமல் எளிதில் வகுப்பறைக்குள் மொபைல் போன்களோடு வருகிறார்கள். எங்கிருந்து எதை படம் எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அதுபோல் எத்தனையோ வீடியோக்கள் வைரலாவதை பார்க்கிறோம். எனவே உடை மீது கவனத்தை வைத்து கொள்ள வேண்டியுள்ளதால் எப்போதும் ஆசிரியைகள் பதற்றத்தில் இருக்க வேண்டியுள்ளது.

இதையே தான் ஆசிரியை கேத்தரினும் கூறுகிறார். புடவை என்பது ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு சில இடங்களில் மாணவர்கள் வெளிப்படையாக ஆசிரியரின் காது படவே உள்ளாடை குறித்து கேலி செய்யும் நிலை கூட இருக்கிறது என்கிறார் அவர்.

அந்த பிரச்னையும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதில் மாணவர்களை முழுமையாக குற்றம்சாட்ட முடியாது என்கிறார் ஆசிரியை மகாலட்சுமி. உதாரணத்திற்கு 5வது படிக்கும் சிறுவன் ஒருமுறை என்னிடம் என் தோள்பட்டையில் தெரிந்த உள்ளாடையை பார்த்து விட்டு ‘என்ன பெல்ட் மாதிரி தெரிகிறதே’ என்று கேட்டான். அதற்காக நான் கூனி குறுகி போகவில்லை அல்லது அந்த மாணவனை கண்டிக்கவில்லை.

மாறாக அவனுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைத்தேன். ஆனாலும், அடுத்த நாள் என்னுடைய கவனம் முழுவதும் என் முந்தானையை எடுத்து தோள்பட்டையை மறைப்பதில் சென்று விட்டது. இரண்டாம் நிலை வளர்ச்சி பருவத்தில் இருக்கும் குழந்தைக்கு என்னால் எந்தவித தவறான புரிதலும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக ஒரு ஆசிரியராக நான் யோசிக்க வேண்டியதுள்ளது. இதுவே சுடிதார் என்றால் இந்த பிரச்னைகள் இல்லை என்கிறார்.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,MAHALAKSHMI

படக்குறிப்பு,கடந்த ஐந்து வருடங்களாக மாணவர்கள் போல் சீருடை அணிந்து வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி.

சுடிதார் ஏன் அவசியமாக இருக்கிறது?

“பள்ளியில் ஒருமுறை புடவை இடறி கீழே விழுந்தபோது மாணவர்களே என்னிடம் வந்த ஏன் நீங்கள் இந்த உடையை அணிந்திருக்கிறீர்கள், வேறு அணியலாமே என்று கேட்டு அவர்களுக்குள்ளே விவாதமும் செய்து கொண்டனர். மேலும் அவர்களுடன் இயல்பாக கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் போது புடவை உகந்த உடையாக இல்லை.

அதேபோல் பெரும்பான்மையான மலைவாழ் மாணவர்கள் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய இடத்தை சேர்ந்தவர்கள். அதில் ‘சில குழந்தைகள் என்னிடம் வந்து இந்த சேலை நல்லாருக்கு, எங்க அம்மாக்கு நான் வாங்கி தரணும்’ என்று கூறும்போது அவர்களுக்குள் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டோமே என்ற குற்றவுணர்வும் எனக்குள் ஏற்பட்டு விடுகிறது.

அப்போதுதான் சுடிதார் அணியலாம் என்ற யோசனை வந்தது. அதற்காகவே மாணவர்கள் அணியும் சீருடை போலவே நானும் சுடிதார் தைத்து போட்டு கொண்டேன். இது மாணவர்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளியை குறைத்து அவர்களின் கற்பித்தலை மேம்படுத்தவும் உதவுகிறது” என்கிறார் மகாலட்சுமி.

“யாரை காட்டிலும் ஆசிரியர்களுக்கு சமூக பொறுப்பு அதிகம். கண்ணியமான உடை என்று வரும்போது அதை எப்படி பொறுப்புடன் அணிய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எனவே பயணங்கள், உடல் ரீதியான பிரச்னைகள், வகுப்பறையில் பாதுகாப்பான உணர்வு என எல்லா வகையிலும் சுடிதார் சவுகரியமான உடையாக இருக்கிறது” என்கிறார் தலைமையாசிரியர் சிநேகலதா.

இப்படி ஒவ்வோர் ஆசிரியருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் உடல் ரீதியான பிரச்னைகள் தொடங்கி மனரீதியான பிரச்னைகள் வரை அடங்கும்.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,PRINCE GAJENDRABABU

படக்குறிப்பு,ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது அவர்களை சிறுமை படுத்துவதாகும்.

கல்வியாளர் கருத்து

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, “ஒரு ஆசிரியர் என்பவர் வெறும் எண்ணறிவு, எழுத்தறிவு கற்றுக்கொடுக்கும் நபர் மட்டுமல்ல, அவர் ரோபோ அல்ல, அவரும் ஒரு இயல்பான மனிதர். தன்னிடம் வர கூடிய குழந்தைகளுக்கு முன்னுதாரணமான வாழ்க்கை கல்வியை கற்பிக்க கூடியவர். தன்னுடைய செயல்பாடுகள் வழியாக மாணவர்களுக்கு வழிகாட்ட கூடிய பொறுப்புடன் இருக்க கூடியவர். அவர்களுக்கு உடை கட்டுப்பாடு என்பது அவர்களது பணியையே சிறுமைப்படுத்துவது போன்றதாகும்” என்கிறார்.

“ஆடை என்பது மற்றவர்கள் பார்வைக்கானது அல்ல, தனக்கு எது வசதியானது என்பதை பொறுத்தது. அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், மாணவர்களுக்கு முன்னுதாரணமானதாகவும் இருத்தல் வேண்டும். அப்படி கண்ணியமான உடை அணிய அந்த ஆசிரியருக்கு தெரியாதா?

என்னுடைய உடலை மறைப்பதற்கு, வெயில் மழையில் இருந்து பாதுகாப்பதற்கு எது வசதியானதோ அதைத்தானே நான் உடுத்த முடியும். காலநிலையும், நிலத்தின் அமைப்பும்தான் ஒருவரின் உடையை தீர்மானிக்கின்றன. உடை ஒரு பண்பாட்டின் கூறு. அதனால்தான், ராஜஸ்தானில் இருக்கும் ஒருவரின் உடையும், தமிழ்நாட்டில் இருக்கும் நபரின் உடையும் வெவ்வேறாக இருக்கிறது.

அந்த சூழலை பொறுத்தே உடை அமையும் என்ற பட்சத்தில் இதில் இதுதான் சிறந்தது என்று ஒரு உடையை சொல்ல முடியாது. வசதியான உடையை எப்படி அணிய வேண்டும், கண்ணியமாக அணிய வேண்டும் என்பதைத்தான் தீர்மானிக்க முடியும். எனவே , ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு என்பது அவர்களை சிறுமைப்படுத்துவது மட்டுமே” என்கிறார் அவர்.

ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரசாணை இன்னும் பரவலாக்கப்படவில்லை.

அரசாணை மட்டும் போதுமா?

அரசாணை இருந்தும் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்று கேட்டபோது, “அரசாணையை மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் வழங்கி அவர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி விட்டோம். ஒரு சில இடங்களில் இதுபோன்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று என்னிடமும் சில ஆசிரியர்கள் கூறினார்கள். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது. இது குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக அதை கொண்டு செல்வோம்” என்றார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி.

ஆனால், எங்கள் பள்ளிக்கு அப்படி ஏதும் சுற்றறிக்கை இன்னும் வரவில்லை என்கிறார் ஆசிரியை மகாலட்சுமி. என்னதான் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இந்த அரசாணை குறித்து விளக்கம் அளித்திருந்தாலும் இன்னும் இது பரவாலாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் அவர்.

அதே சமயம், சென்னை கொடுங்கையூரில் உள்ள கார்பரேஷன் பள்ளி ஒன்றில் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரே மாதிரி சீருடை அணிந்து வரும் வழக்கத்தை ஊக்குவித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் – ஆசிரியர்கள் உறவை வளர்ப்பது மற்றும் கற்றல் செயல்பாடுகளை வலுப்படுத்துவது போன்ற முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றனர்.

எனவே, சென்னை போன்ற நகரங்களில் இந்த அரசாணை ஓரளவு பின்பற்றப்படுவதையும், பல கிராமப்புற பள்ளிகளில் இதை பின்பற்றுவதில் சிக்கல்களையும் பார்க்க முடிகிறது.

ஆசிரியை சுடிதார் அணியலாமா?

பட மூலாதாரம்,CHENNAI COPORATION / FACEBOOK

மாற்றம் எப்படி வரும்?

“இந்த உடையை தொடர்ந்து போட ஆரம்பித்துவிட்டாலே போதும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு பொதுவான அரசாணை போட்டால் மட்டும் போதாது, ஆசிரியர்களுக்கு என தனியாக அரசாணை போட்டு அதை பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் இது சென்று சேரும்” என்கிறார் மகாலட்சுமி.

“அதே சமயம் இது வெறும் அரசு மற்றும் அதிகாரிகளோடு தொடர்புடையது மட்டுமல்ல, மக்கள் மனதில் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி பழைய நம்பிக்கைகளை உடைக்க வேண்டும். இதற்காக மருத்துவர்கள், காவல்துறை என பிற அரசு ஊழியர்களுக்கு கொடுப்பது போல எங்களுக்கும் சீருடையே கூட வழங்கலாம்” என்கிறார் அவர்.

நான் அணியும் உடை என் தேவைக்கான உடை என்பதையும், சீதோஷ்ண நிலைகளில் இருந்து உடலை பாதுகாப்புக்கான உடை என்பதையும் மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“ஆசிரியைகள் சுடிதார் அணியலாம் என்று சொல்லும்போதோ அல்லது அணிந்து கொண்டு செல்லும்போதோ பெற்றோர்களே அவர்களை வசைபாடுவது, சமூக வலைத்தளங்களில் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். புடவை அணிந்தால்தான் உனக்கு பாதுகாப்பு, அப்படியிருந்தால் தான் நீ ஆசிரியை என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த மனநிலையை மாற்றுவதில் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும்” என்கிறார் சிநேகலதா.

ஒரு புதிய மாற்றத்தை தொடங்கும்போது எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றினோம் என்றால் நினைத்தது சாத்தியமாகும் என்கிறார்கள் இந்த ஆசிரியைகள்.

அரசும் பள்ளிக்கல்வித்துறையும் மாணவர்களுக்கு உடை குறித்து பாடம் எடுக்கும் அதேநேரத்தில், ஆசிரியர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட உடைக்கு தடை போடும் அதிகாரிகளுக்கும் அறிவுரையும், வகுப்புகளும் எடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author