‘அன்னபூரணியாக’ உணவு அரசியல் பேசும் நயன்தாரா ரசிகர்களின் மனதை ஈர்த்தாரா? – திரை விமர்சனம்

அன்னபூரணி திரை விமர்சனம்

பட மூலாதாரம்,X/NILESHKRISHNAA

‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் அவரது 75-வது படமாக ‘அன்னப்பூரணி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்தப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறதா?

முன்னோட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு முழுப்படத்திற்கும் ரசிகர்கள் இடையே கிடைத்திருக்கிறதா?

பிராமண பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா

அன்னபூரணி திரைப்படத்தின் கரு குறித்து தினமணி நாளிதழின் விமர்சனத்தில் கூறியிருப்பதாவது, “அசைவ உணவுகளையே விரும்பாத உயர்சாதி என சொல்லப்படும் பிராமண குடும்பப் பெண்ணாக வரும் அன்னபூரணிக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் எனும் லட்சியம் இருக்கிறது. தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அவர் தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இத்திரைப்படத்தில், சிறு வயது முதலே ருசி அறிவதில் தனித்துவமான திறமை நயன்தாரா கதாபாத்திரத்திற்கு சமைப்பதில் அவ்வளவு ஆர்வம். ஆனால் கோயிலில் வேலை பார்க்கும் தனது தந்தைக்கு அசைவம் பிடிக்காது என்பதால் அவருக்கு தெரியாமல் சமையல் கலை பயில்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா வித்தியாசமில்லாத வழக்கமான நடிப்பை வழங்கியுள்ளார்,” என தினமணி தெரிவித்துள்ளது.

‘ராஜா ராணி’ திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா உடன் ஜெய் ஜோடி சேர்ந்து இந்த படத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கமெர்ஷியல் படங்களில் கதாநாயகிகள் பொம்மை போல் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்தப் படத்தில் ஜெய் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளார் என தினமணி தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

அன்னபூரணி திரை விமர்சனம்

பட மூலாதாரம்,X/NILESHKRISHNAA

அன்னபூரணி படம் பேசும் அரசியல் என்ன?

அன்னபூரணி திரைப்படத்தில் பெண்கள் முன்னேற்றம், உணவு அரசியல், மதம் நல்லிணக்கம் சார்ந்த கருத்துகள் என தேவைக்கு அதிகமான கருத்துகளை இயக்குநர் திரைக்கதைக்குள் திணித்திருப்பதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொடக்கத்தில் அசைவ உணவுகளை வெறுப்பதாக வரும் காட்சிகளையும், வசனங்களையும் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வோடு இயக்குநர் அமைத்திருக்கலாம் என தனது விமர்சனத்தில் தினமணி தெரிவித்துள்ளது.

‘தி இந்து’வின் விமர்சனத்தில், சமையல் துறையில் பெண்கள் இயங்குவதில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசும் இத்திரைப்படம் அது குறித்து ஆழமாக பேச தவறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல பல சமூக பிரச்னைகள் குறித்து மிகவும் மேலோட்டமாகவே அன்னபூரணி திரைப்படம் பேசி கடந்து செல்வதாக தி இந்து தெரிவித்துள்ளது.

அன்னபூரணி திரை விமர்சனம்

பட மூலாதாரம்,X/NILESHKRISHNAA

ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா அன்னபூரணி?

ஒட்டுமொத்தமாக அன்னபூரணி திரைப்படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா என்ற கேள்விக்கு, கதையாகச் சுவராஸ்யமாக இருந்தாலும், திரைக்கதியை சிறப்பாக கோர்க்காததால், எளிதில் யூகிக்கக்கூடிய ஒரு படமாகவே இந்த ‘அன்னபூரணி’ நமக்கு பரிமாறப்பட்டிருப்பதாக விகடன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே அன்னபூரணி திரைப்படம் போலியாக தெரிந்ததாகவும் படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் செயற்கையாக இருந்ததாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

‘பெண்களுக்கு தங்களது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் உரிமைகூட இருப்பதில்லை’ மற்றும் ‘உன் உணவு உன்னோட உரிமை’ போன்ற வசனங்கள் ஈர்ப்பதாகவும் தினமணி தெரிவித்துள்ளது.

பிரபல சமையல் கலைஞராக நடித்துள்ள சத்யராஜ் படத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் ஜெய் கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை ஊக்குவிப்பதை தவிர படத்தில் வேறு நோக்கம் இல்லை எனவும் ‘இந்தியா டுடே’ தெரிவித்துள்ளது.

‘தி இந்து’ கூறுகையில், “பார்வையாளர்களுக்கு அன்னபூரணி திரைப்படம் ஒரு நொறுக்குத்தீணியைப் போல்தான் உள்ளது. பார்வையாளர்கள் மிகுந்த பசியோடு போனால் அன்னபூரணி ஏமாற்றம்தான் அளிக்கும்,” எனத் தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Author