`நெருங்கிவரும் புயல்… எதிர்கொள்ள அரசு தயார்’ – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கிய அமைச்சர்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

“கடலோர மாவட்டங்களில் 121 முகாம்களும், சென்னையில் மாநகராட்சியில் 162 முகாம்களும், அமைக்கப்பட்டிருக்கின்றன. 13 ஆயிரம் பேர் தங்குளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.” – அமைச்சர்

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

மணிக்கு 18 கி.மீ நகரும் இந்த காற்றாழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்றபடி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல டிசம்பர் 4-ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்றும், நாளையும், நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “எந்தெந்த பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த பகுதியிலிருக்கும் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அடுத்த இரண்டு, மூன்று நாள்களுக்கு அவரவர் ஊர்களிலேயே இருக்குமாறு முதல்வர் அறிவுரை வழங்கியிருக்கிறார். நாளை உருவாகும் புயல், டிசம்பர் 4-ம் தேதி சென்னை கடற்கரை அருகே வந்து, மசூலிப்பட்டினம் பக்கம் செல்கிறது. அதனால் நமக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

புயல் எச்சரிக்கை

புயல் எச்சரிக்கை

அதேசமயம் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கனமழை இருக்கும். சென்னையைப் பொறுத்த அளவில் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாநில பேரிடர் மீட்பு குழு, மத்திய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 425 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள். புயல் சென்னையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும், வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த பொருள்களைப் பத்திரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மின்கம்பிகள், மின்கம்பங்கள் இருக்குமிடங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கி கடற்கரை ஓரமாகவும், வெள்ளம் அதிகம் வரும் பகுதிகளிலும் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டோம். கடலோர மாவட்டங்களில் 121 முகாம்களும், சென்னையில் மாநகராட்சியில் 162 முகாம்களும், அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை தவிர 4,000 பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். மொத்தமாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்குமளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

Author