“கே.எஸ் ரவிக்குமாருக்கு தில்லு இருந்தா அம்மா இருக்கும்போது சொல்லியிருக்கணும்!” – ஜெயக்குமார்

கே.எஸ் ரவிக்குமார்

“அம்மாவை வெச்சுத்தான் நீலாம்பரி கேரக்டரை எழுதினேன்னு கே.எஸ் ரவிக்குமார், அம்மா இருக்கும்போது சொல்லிட்டு வெளியில நடமாடியிருக்க முடியுமா? அவரின், இந்தப் பேச்சை ரஜினி…” – அதிமுக ஜெயக்குமார்

‘படையப்பா’ பட வில்லி நீலாம்பரி கதாப்பாத்திரத்தை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு பின்னணியை உடைத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘முத்து’ வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவையொட்டி டிசம்பர் 8 ஆம் தேதி ‘முத்து’ மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன், நிறைவு விழா கொண்டாட்டத்தில் “படையப்பா படத்துல நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா மேடம்னு எல்லோரும் சொல்வாங்க. அது உண்மைதான். நான் எழுதும்போது, ஜெயலலிதா மேடத்தை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படிப்பட்ட உடல்மொழி இருக்கணுமோ அதையெல்லாம் அவங்களை நினைச்சு ஃபீல் பண்ணி எழுதினேன்” என்று பேசினார். இது, இப்பெருமழை சூழலிலும் அதிமுக வட்டாரத்தில் அனலைக் கிளப்ப இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது…

K.S.Ravikumar wth Rajinikanth

K.S.Ravikumar wth Rajinikanth

“அம்மாவின் ஆளுமை, அறிவு, ஆற்றல், திறமை என்ன? என்பதை கே.எஸ் ரவிக்குமார் யோசித்திருக்க வேண்டாமா? அவருக்கு, உண்மையிலேயே தில்லு இருந்தா இந்தக் கருத்தை அம்மா உயிரோட இருக்கும்போது சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு, இப்போ வந்து சொல்றது கோழைத்தனம்.

அம்மா இருக்கும்போதே, இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லியிருந்தார்னா, அதுக்கு எதிர்வினை எப்படி இருந்திருக்கும்னு அவருக்கே தெரியும். இத்தனை நாளா ஒளிஞ்சிருந்துட்டு, இப்போ வந்து அம்மாவை நினைச்சுத்தான் நீலாம்பரி கேரக்டரை எழுதினேன்னு சொல்றதை ஒரு கோழையின் செயலாத்தான் தமிழ்நாட்டு மக்களும் பார்ப்பாங்க. அம்மாவா இருக்கட்டும்… புரட்சித் தலைவரா இருக்கட்டும் மறைந்த தலைவர்கள் பத்தி பேசுறது நாகரீகமற்றது; காட்டுமிராண்டித்தனம். பண்பட்டவங்க இப்படி பேசமாட்டாங்க.

ரம்யா - கிருஷ்ணன் ஜெயலலிதா

ரம்யா – கிருஷ்ணன் ஜெயலலிதா

‘முத்து’ படம் திரும்பவும் ஓடணும்னு ஆரோக்கியமில்லாத விமர்சனம் செஞ்சு அதுமூலம் வசூல் கொள்ளை அடிக்க நினைக்கிறாங்க. அதுக்கு, வேற எதையாவது உளறிட்டுப் போகட்டும். தேவையில்லாம எதுக்கு அம்மாவை இழுக்கணும்? இனிமேலும், அம்மா பத்தி பேசுனா நிச்சயம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இதே கருத்தை கே.எஸ் ரவிக்குமார், அம்மா இருக்கும்போது சொல்லிட்டு வெளியில நடமாடியிருக்க முடியுமா? அவரின், இந்தப் பேச்சை ரஜினி இந்நேரம் கண்டிச்சிருக்கணும். ஆனா, அவரு கண்டிச்ச மாதிரி தெரியல. கே.எஸ் ரவிக்குமாருக்கு என்னோட கடுமையான கண்டனங்களைத் தெரிவிச்சுக்குறேன்” என்கிறார் கோபமாக.

Author