அதானியால் இந்தியாவின் பிடியில் சிக்குகிறதா? இலங்கை முன்னுள்ள 5 சவால்கள்

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,சம்பத் தசநாயக்க
  • பதவி,பிபிசி சிங்களம்

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த இலங்கை, பல சவால்களுக்கு மத்தியில் 2024ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது.

ஆண்டொன்று முடிவடைந்து, புதிய ஆண்டொன்று பிறக்கும் போது பலர், பல்வேறு சவால்கள் மற்றும் இலக்குகளை கொண்டிருப்பார்கள். குறிப்பாக வீடொன்றை நிர்மாணித்தல், காரொன்றை வாங்குதல் உள்ளிட்ட இலக்குகளை தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.

எனினும், அந்த இலக்கை நோக்கி நகர்வதை விடவும், 2024ம் ஆண்டு தமக்கு கிடைக்கும் வருமானத்தில் அடிப்படை செலவுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்கு, அது இலகுவான விடயமாக இருக்காது. பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு, 2024ம் ஆண்டு மேலும் பிரச்னைகளை எதிர்நோக்கும் ஆண்டாக அமையும் என்பதாகும்.

2022ம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு, ஐ.எம்.எப் கடன் திட்டத்தின் ஊடாக 2023ம் ஆண்டு குறிப்பிடத்தக்களவு நிவாரணம் கிடைத்திருந்தது. நான்கு வருட கடன் திட்டத்தின் கீழ், இரண்டாவது தவணை கடனுதவி இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் என்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும். அந்த பயணம் மிகவும் கடினமானது. சாதாரண மக்களுக்கு பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

வங்குரோத்து அடைந்த நாடொன்று, ஏனைய நாடுகளிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளாமையினாலும், வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளாமையினாலும் 2024ம் ஆண்டில் இலங்கை அதே கடின பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும் என அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கையிலிருந்து சுமார் 1500 முதல் 2000 வரையான மருத்துவர்கள் வரை கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றனர்.

‘இதற்கு அப்பால் ஒரு சிக்கல் உள்ளது’

”ஆடு பாலத்திலிருந்து வெளியில் வந்தாலும், இதற்கு அப்பால் பிரம்மையொன்றே உள்ளது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

”சரியான பாதையில் செல்லாவிட்டால், கஷ்டத்தில் வீழ்வோம். வனத்திற்குள் செல்வோம்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

”சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, இந்த வழியாக சென்று, வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் மாத்திரமே, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிலிருந்து வெளியில் வர முடியும்” எனவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமையே 2023ம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய பாரிய சவாலாக காணப்பட்டது. அதிக வரிச் சுமையே அதற்கான காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 1500 முதல் 2000 வரையான மருத்துவர்கள் வரை கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றிருந்ததுடன், 500 பேர் வரை பிரித்தானிய சுகாதார சேவைக்கு சென்றிருந்தனர். மருத்துவர்களுக்கு மேலதிகமாக தாதியர்கள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி சென்றிருந்தார்கள்.

கடும் போர் நிலவிய இஸ்ரேல் நாட்டிற்கு கூட இந்த நாட்டு இளைஞர், யுவதிகள் செல்லும் அளவிற்கான பாரிய பட்டியலொன்று காணப்பட்டது. தமது உயிரை பணயம் வைத்தேனும், தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அமைந்தது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்;, 2024ம் ஆண்டு காலப் பகுதியிலும் பெருந்திரளான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணிக்கையில் குறைவு காணப்படாது.

இந்த நிலைமையின் கீழ் 2024ம் ஆண்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மிகவும் விரைவான மற்றும் புத்திசாலிதனமான விதத்தில் நடாத்தி செல்ல வேண்டியுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி கூறும் விதத்தில் ஆடு பாலத்திலிருந்து வெளியேறியிருந்தாலும், பிரம்மைக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்ன?

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2022ம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு, ஐ.எம்.எப் கடன் திட்டத்தின் ஊடாக 2023ம் ஆண்டு நிவாரணம் கிடைத்திருந்தது.

1. வாழ்க்கை செலவு

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்றால், அது மிகையாகாது. 15 வீதமாக இதுவரை காணப்பட்ட வருமானம் சேர் வரி (வட் வரி), ஜனவரி முதலாம் தேதி முதல் 18 வீதமாக அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும். இதுவரை வட் வரிக்கு உட்படுத்தப்படாத சுமார் 250 பொருட்கள் மற்றும் சேவைகள் மீதும் இந்த ஆண்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வட் வரி அறவீட்டு விநியோக வரம்பு, ஆண்டொன்றிற்கு 80 முதல் 60 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை வட் வரி செலுத்தாத குழுவொன்று, இந்த வட் வரி செலுத்துவதற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்படி, வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கப்படும்.

டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு வட் வரி உரித்தாவதுடன், இதுனூடாக அனைத்து பொருட்களுக்குமான விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி, போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கப்படுகின்றன.

உணவகங்களில் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், உணவு பொதி ஒன்றின் விலை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகின்றது.

இந்த மாதத்திற்கு நீர் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

2024ம் ஆண்டு வட் வரியின் ஊடாக அரசாங்கத்திற்கு 1400 பில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட் வரி அதிகரிப்பினால், தொலைபேசி கட்டணங்கள், டேடா கட்டணங்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளின் கட்டணங்களும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வட் வரி விதிப்பினூடாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்கள், SMS சேவைகள் உள்ளிட்ட மேலதிக சேவைகள் மற்றும் Pay TV சேவை ஆகியவற்றுக்கு 42.02 வீதத்தினால் வரி அதிகரிக்கப்படுகின்றது.

Data, Wi-Fi சேவை மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணங்கள் 23.50 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றன.

முற்கொடுப்பனவு Data கார்ட்டிற்கான Data கோட்டா குறைக்கப்பட்டுள்ளதுடன், அதில் வரி உள்ளிட்ட கட்டணத்தில் மாற்றம் கிடையாது.

அத்துடன், கையடக்கத் தொலைபேசியின் விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என கையடக்கத்தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வரி திருத்தம் காரணமாக மேலதிக செலவீனமொன்று ஏற்படுகின்ற போதிலும், சிலர் கூறும் விதத்தில் அதிகரிப்பு ஏற்படாது என நிதி அமைச்சு குறிப்பிடுகின்றது.

2024ம் ஆண்டு தலா தேசிய உற்பத்திக்கு ஒத்ததாக, வட் வரி வருமானம் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் 22 முதல் 25 ரூபாவாக காணப்பட்ட உள்நாட்டு முட்டையின் விலை, தற்போது 50 முதல் 55 ரூபா வரை காணப்படுகின்றது.

2. ஊட்டச்சத்து

பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே, அதிக சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது.

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்பமொன்றின் மாதாந்த செலவீனமாக 177,687.44 ரூபா பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான செலவீனமொன்றை செலவிடும் அளவிற்கு மத்திய தர குடும்பமொன்றிற்கு முடியுமா?. நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்குமா?

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இந்த மக்கள் 2024ம் ஆண்டு மேலும் வறுமை நிலைமையை நோக்கி நகருவார்கள். அவர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கான சம்பளம் கடந்த காலங்களில் அதிகரிக்கப்படவில்லை.

வீட்டு கூலி, நீர், மின்சார, எரிபொருள், தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், மக்கள் அசாதாரண நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். மீன், இறைச்சி ஆகியவற்றை உட்கொள்வதை விடவும், மூன்று வேளை உணவு உட்கொள்வதே மிகவும் சிரமமான சவாலாக காணப்படுகின்றது.

2024ம் ஆண்டு வாழ்க்கை செலவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்வதும் மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

குறைந்த விலையில் புரோட்டின் தேவைகளை முட்டையின் ஊடாகவே பலர் நிவர்த்தி செய்துக்கொள்கின்றனர். 2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் 22 முதல் 25 ரூபாவாக காணப்பட்ட உள்நாட்டு முட்டையின் விலை, தற்போது 50 முதல் 55 ரூபா வரை காணப்படுகின்றது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பின்னணியில், ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு பதிலாக, பசியை போக்கும் உணவை மாத்திரம் உட்கொள்ள மக்கள் முயற்சிக்கின்றனர்.

புரோட்டீன் உள்ளடங்கிய மீன், இறைச்சி, முட்டை அல்லது நபரொருவருக்கு நாளானொன்றில் உட்கொள்ள வேண்டிய மரக்கறி மற்றும் பழ வகைகள் உரிய வகையில் கிடைக்குமா என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறார்கள் முதல் பெண் பிள்ளைகள் வரை ஊட்டச்சத்து தொடர்பில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

வருமான வழிகள் தடைப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைப்பாடுக்கு மேலதிகமாக, மக்கள் மன அழுத்த சூழ்நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு பாரிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பின்னர், 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

3. அரசியல் ஸ்திரத்தன்மை

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதில், நாடு 2024ம் ஆண்டு பாரிய சவால்களை எதிர்நோக்க உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை போன்று, 2024ம் ஆண்டு இலங்கைக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. 69 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு நாட்டை விட்டு தப்பிச் சென்று, பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஊடான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவான ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பின்னர், 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு கடந்த ஆண்டு வேட்பு மனு கோரப்பட்ட போதிலும், தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கத்தினால் வழங்க முடியாமை காரணமாக, திட்டமிட்ட வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவில்லை.

இலங்கை சோசலிச குடியரசின் 9வது நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு, இரண்டரை ஆண்டுகள், 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் தேதி பூர்த்தியாகியிருந்தது.

இதன்பிரகாரம், இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வசமாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக பலரும் நம்புகின்றனர்.

”இதுவொரு கலப்பு அரசாங்கம். இது ஒரு அரசாங்கம் கிடையாது. இந்த நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பி, நிலையான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.” என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் தலைவர் மூத்த விரிவுரையாளர் சட்டத்தரணி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

”மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றே தற்போது காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமை அல்ல காணப்படுகின்றது. அதனால், நிச்சயமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும்.”

”நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும். மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகவாதிகளின் சிறந்த அடையாளம் இல்லை இது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், தேர்தல் முறையின் ஊடாக மக்களின் விருப்பம் முதலில் கோரப்பட்டிருக்க வேண்டும். இதனூடாகவே இந்த அரசாங்கம் அடுத்த கொள்கையை வகுக்க வேண்டும்.”

”அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால், நல்ல அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்க வேண்டும்” என மூத்த விரிவுரையாளர் சட்டத்தரணி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,”நாம் சுயாதீனம் என கூறினாலும், நாம் பூகோள அரசியலில் சிக்குண்டுள்ளோம்” – வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா.

4. பூகோள அரசியல்

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 2024ம் ஆண்டு தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இலங்கையின் பிரதான கடன் வழங்குநராக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இலங்கை பொருளாதார வங்குரோத்து நிலைமையை எதிர்நோக்கியிருந்த தருணத்தில், அயல் நாடான இந்தியா 3 பில்லியன் டாலர் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கியிருந்தது.

”நாம் சுயாதீனம் என கூறினாலும், நாம் பூகோள அரசியலில் சிக்குண்டுள்ளோம்” என வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார்.

”நாம் எதிர்காலத்தில் இந்தியாவின் கடும் பிடியில் சிக்குவோம். அதானி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் அதற்கான காரணமாகும். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி, திருகோணமலை அபிவிருத்தி ஆகியன இந்தியாவிலிருந்து கிடைக்கும் அபிவிருத்தி திட்டங்கள். அதேபோன்று, சீன எமது பாரிய கடன் வழங்குநர்.” என அவர் குறிப்பிட்டார்.

”நாம் இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதென்பது, நாம் சீனாவிற்கு எதிராக செயற்படுகின்றோம் என்று கூற முடியாது. எனினும், அதனூடாக பாரிய அழுத்தங்கள் வரக்கூடும்.”

”இதனூடாக இணைந்து நடாத்தப்படும் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக, பூளோக அரசியலில் பாரிய தாக்கம் செலுத்தக்கூடும். ஏனெனில், இந்தியாவில் தேர்தல் வருகின்றது. அமெரிக்காவில் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நாம் ஒரு தரப்பாக இருக்கின்றோம். அதனுடன் தொடர்புப்படுகின்றோம். மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” என அவர் கூறுகின்றார்.

சர்வதேச நாடுகளின் பொருளாதார வங்குரோத்து நிலைமையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையை பெரிதும் பாதித்துள்ளது. ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல ஏற்றுமதி துறைகளில் கடந்த காலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இலங்கை ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,“தேர்தலை நடாத்துவது மற்றும் கருத்து வேறுபாட்டிற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்படுவதும் அவசியம்”

5. சீர்திருத்த திட்டம், எதிர்ப்புகள் & அடக்குமுறைகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசாங்கம் பொருளாதார சீர்த்திருத்த திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இதன்படி, மறுசீரமைப்பு செய்ய வேண்டிய மற்றும் நட்டத்தில் இயங்கும், முறையற்ற முகாமைத்துவத்துடனான அரச நிறுவனங்களின் பட்டியலொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது.”

பிரச்னை உள்ள 80 அரசு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 40 நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

”இதுவும் பாரிய சவாலாக காணப்படுகின்றது. இதன்போது, தொழிற்சங்கங்களின் தலையீடு காரணமாக, அரசாங்கத்தினால் அந்த இடத்திற்கு செல்ல முடியுமா என்பது சவால் நிறைந்ததே. வேலை நிறுத்தங்கள் எதிர்காலத்தில் அதற்கு சவாலாக அமையலாம்.

குறிப்பாக பாரிய வேலை நிறுத்த போராட்டங்கள் நடத்தப்படலாம். தேர்தல் ஒன்று நடாத்தப்படும் போது, வேலை நிறுத்த போராட்டங்கள் எப்படியும் வரும்” என வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமித்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடும் அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்தியதுடன், அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து விதமான போராட்டங்களையும் கடும் போலீஸ் அதிகாரங்களை பயன்படுத்தி அடக்கி, எதிர் கருத்துக்களை வெளியிட்ட நபர்களை கைது செய்த விதத்தை கடந்த காலங்களில் காண முடிந்தது.

”எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், கருத்து வேறுப்பாட்டிற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பிபிசிக்கு தெரிவித்தார்.

”எந்தவொரு அரசாங்கத்தின் கொள்கையுடன் இணைந்தோ அல்லது எதிர்த்தோ செயற்படுவதற்கு மக்களுக்கு இயலுமை காணப்பட வேண்டும். குறிப்பாக அடிப்படையற்ற விதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை பிற்போட்டுள்ளார்கள். அதனால், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது இயலுமை கிடையாது. ”வாயை மூடும் சட்டத்தை” கொண்டு வருவதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம், இலத்திரனியல் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பேசுகின்றார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம், போலீஸாரின் யுக்திய சோதனை திட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களின் ஊடாக அடக்குமுறையை பயன்படுத்தி, நாட்டை ஆட்சி செய்ய முடியும் என அரசாங்கம் நினைக்கின்றது. எனினும், அடக்குமுறை ஊடாக நீண்ட காலம் வெற்றிகரமாக பயணிக்க முடியாது என்பதை நாம் அவதானித்துள்ளோம்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலம் மற்றும் அதன் பின்னரான அடக்குமுறை ஆட்சி காலத்தை நாம் அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியும். அது வெற்றியளிக்காது. தேர்தலை நடாத்துவது மாத்திரமே ஜனநாயகத்தின் முக்கியமான பகுதி என நான் நம்புகின்றேன். இரண்டாவது, கருத்து வேறுபாட்டிற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்படும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என அவர் கூறுகின்றார்.

”சீர்த்திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும், அழுத்தங்களின் ஊடாக இது தான் மக்களுக்கு சரியானது என கூறி, அவர்கன் மீது சுமைகளை சுமத்துவது இல்லை என நான் நினைக்கின்றேன்.”

2024ம் ஆண்டு தொடர்பில் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

மீள் எழுச்சி பெறும் சவால் மற்றும் எதிர்பார்ப்பு மிக்க ஆண்டான 2024ம் ஆண்டிற்குள் இலங்கை பிரவேசிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

நாம் அனைவருக்கும் ஆயிரத்தொரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் வெற்றியடையச் செய்வதற்கு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பது இன்றியமையாதது என 2024ம் அண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

”கடந்த ஆண்டு முழுவதும் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்நோக்கிய கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் ஆரம்ப கட்டம் வெற்றிகரமாக செய்வதற்கு முடிந்த போதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இதேபோன்று முன்னோக்கி செல்ல வேண்டும். இது மலர்களினால் பாதை கிடையாது. சவால்மிக்க மிகவும் கஷ்டமான பயணம்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1
Author