காவிரிக்கரையில் ராமரின் 5 குலதெய்வக் கோயில்கள் – ஒரு ஆச்சர்யப் பகிர்வு!

ஸ்ரீராமர் வணங்கிய ஸ்ரீராமரின் குல தெய்வங்களாகக் கருதப்படும் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்திரங்களும் அயோத்தியைப் போலவே விசேஷமானவை என்கிறார்கள்.

Published:Updated:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

0Comments
Share

ஸ்ரீராமர் வணங்கிய ஸ்ரீராமரின் குல தெய்வங்களாகக் கருதப்படும் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்திரங்களும் அயோத்தியைப் போலவே விசேஷமானவை என்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீராமபிரானின் அவதாரத்தலமான அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறத் தயார் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக விழா உலக அளவில் கவனம் ஈர்த்து  இருக்கிறது. இந்நிலையில் ராமாயணத்தில்  ராமரின் வாழ்வியலோடு தொடர்புப்படுத்திப் பேசப்பட்ட பல்வேறு இடங்கள் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.

இந்த வரிசையில் ஸ்ரீராமர் வணங்கிய ஸ்ரீராமரின் குல தெய்வங்களாகக் கருதப்படும் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்திரங்களும் அயோத்தியைப் போலவே விசேஷமானவை என்கிறார்கள்.

பஞ்சம் – என்றால் ‘ஐந்து’ என்றும், ரங்கம் என்றால்  ‘ஆறு பிரியும் இடத்தில் ஏற்படும் மேடான பகுதியில் உள்ள மண்டபம்’ என்றும் க்ஷேத்திரம் என்றால் ‘வழிப்பாட்டு தலம்’ என்றும் பொருள்.

அவற்றில் ஆதிரங்கம் மட்டும் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் கரையோரமும், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என மற்ற நான்கும் தமிழ்நாட்டுப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரமும் அமைந்துள்ளது.

ஆதிரங்கம்:

ஆதிரங்கம் என்னும் க்ஷேத்திரம், தற்பொழுது ஸ்ரீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்  என்று அழைக்கப்பெறுகிறது. 984 -ம் ஆண்டு கங்கர் குல அரசவையின் படைத்தலைவராக இருந்த திருமலைய்யா என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. இத்தலம் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தின், காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக ரங்கநாத பெருமாளும்,  தாயாராக ரங்கநாயகி அம்மாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

ஸ்ரீரங்கப்பட்டணம் – ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி!’

மத்தியரங்கம்:

மத்தியரங்கம் என்னும் இந்த க்ஷேஷ்திரம் திருத்தலப் பாசுரப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 108 வைணவத் தலங்களுள் முதலாவதான, பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் ஆகும். இக்கோயில் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக அரங்கநாதர் சுவாமியும் தாயாராக அரங்கநாயகி அம்மாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள்.

இக்கோயிலின் மூலவர் விக்ரகம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியதால் இதை சுயம்பு என்று கூறுவர். இத்தகைய மூலவருக்கு, பூசை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார். ரகு வம்சத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு தனது தலைநகரமாகிய அயோத்திக்கு ரங்கநாதரைக் கொண்டு சென்று வழிபட‌ எண்ணி எடுத்துச்சென்றான்.

ராமர் உள்பட அயோத்தி அரசவை ஶ்ரீரங்கநாதரை வழிபட்ட நிலையில், ராமர் தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு இந்த மூர்த்தியைப் பரிசாகக் கொடுத்தார். விபீஷணன் அதைத் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் திருச்சி காவிரியாற்றின் கரையை அடைந்தான்.

ஸ்ரீரங்கம் கோயில்

ஸ்ரீரங்கம் கோயில்

சுவாமியைக் கீழே வைக்க கூடாது என்பதற்காக அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவனிடம் கொடுத்துக் கீழே வைத்து விடாதே எனக்கூறி காவிரியில் நீராட சென்றார் விபீஷணர். திரும்பி வருவதற்குள் அந்த சிறுவன் சுவாமியின் திருமேனியைக் கீழே வைத்துவிட, அதை எடுக்க எவ்வளவோ முயன்றும் விபீஷணரால் முடியவில்லை.

பிறகு சிறுவனாக வந்து விளையாடல் புரிந்தது விநாயக‌பெருமானே என்பார்கள். ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று  தர்மவர்ம சோழன் தவமிருந்ததாகவும் , தர்மவர்மனின் தவத்தால் மகிழ்ந்த ரங்கநாதரும் திருவரங்கத்தில் வீற்றிருக்க விருப்பம் தெரிவித்தாதகவும் தன்னை இவ்வளவு தூரம் தலையில் சுமந்து விபீஷணனுக்காக, தென்திசை இலங்கை நோக்கிப் பள்ளிக் கொண்டருள்வதாக ரங்கநாதர் உறுதியளித்தாகவும் தல வரலாறு குறிப்பிடுகிறது.

அப்பாலரங்கம்:

அப்பாலரங்கம் என்னும் இந்த க்ஷேஷ்திரம் தற்போது அப்பாலரங்கநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் சோழ மன்னர் கரிகாலச் சோழரால் கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஆறாவது திருத்தலம். இக்கோயிலின் மூலவராக அப்பக்குடத்தான் என்றழைக்கப்படும் அப்பாலரங்கநாதரும் கமலவள்ளி அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். இத்தல மூலவருக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுவதால் அப்பக்குடத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.

சதுர்த்தரங்கம்:

சதுர்த்தரங்கம் என்னும் சேஷ்திரம் தற்போது சாரங்கபாணி சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் பன்னிரண்டாவது திருத்தலம். இத்தலம் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் இக்கோயில் நம்பப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக ஆராவமுதன் சுவாமியும் கோமலவல்லி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். பொற்றாமரை குளத்தின் கரையில் தவம் செய்த ஹேமரிஷி முனிவருக்காக விஷ்ணு பெருமான் இங்கு சாரங்கபாணியாக அவதாரம் எடுத்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. சாரங்கம் என்றால் விஷ்ணுவின் வில் என்றும், பாணி என்றால் கை என்றும் பொருள் ஆகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயில்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில்

பஞ்சரங்கம்:

பஞ்சரங்கம் என்னும் க்ஷேஷ்திரம் தற்போது திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்  என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் இருபத்து ஆறாவது திருத்தலம் இது. இக்கோயிலின் மூலவராக பரிமள ரங்கநாதர் சுவாமியும் பரிமள ரங்கநாயகி அம்பாளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

ஸ்ரீராமபிரான்

ஸ்ரீராமபிரான்

ஸ்ரீராமபிரான் இந்த பஞ்ச க்ஷேத்திரங்களையும் அங்குள்ள மூலவர்களையும் வணங்கி வழிப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்தியுடன் சேர்ந்து இத்தலங்களும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

 

Author