ஞானவாபி மசூதி: ‘இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி’ – தொல்லியல் துறை ஆய்வின் முக்கியத் தகவல்கள்
வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர்.
ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொல்லியல் துறையின் நான்கு மாத கால ஆய்வில், அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், அம்சங்கள், கலைப்பொருட்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதுள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்களுக்கும் தொல்லியல் துறையின் அறிக்கையின் நகல் நள்ளிரவில் கிடைத்ததாகவும், தற்போது அந்த அறிக்கை வழக்குரைஞர்களிடம் இருப்பதாகவும் முஸ்லிம்கள் தரப்பு கூறியுள்ளது.
ஞானவாபி மசூதி நிர்வாகத்தைக் கவனிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி இணைச் செயலாளர் எஸ்.எம்.யாசின் கூறுகையில், “இது ஒரு அறிக்கைதான், முடிவு அல்ல. இந்த அறிக்கை சுமார் 839 பக்கங்கள் கொண்டது. அறிக்கையைப் பகுப்பாய்வு செய்ய நேரம் எடுக்கும். பின்னர் இதுகுறித்து நிபுணர்களிடம் ஆலோசித்து கருத்து தெரிவிக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
பேரரசர் அக்பர் காலத்திற்கு முன்பிருந்தே, சுமார் 150 ஆண்டுகளாக ஞானவாபி மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததாக மசூதி தரப்பு நம்புகிறது. “இதுகுறித்து விரக்தி அடையாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்,” என, எஸ்.எம். யாசின் கூறுகிறார்.
இந்த வழக்கின் முக்கிய வாதியான ராக்கி சிங்கின் வழக்குரைஞர் அனுபம் திவேதியிடம் இருந்து 800க்கும் மேற்பட்ட பக்க அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வு கண்டுபிடிப்புகளின் நகலை பிபிசி பெற்றுள்ளது.
ஏ.எஸ்.ஐ. அறிக்கையில், “ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரபு-பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு, மசூதி ஔரங்கசீப் ஆட்சியின் 20வது ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. எனவே, 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு அழிக்கப்பட்டு, அதன் சில பகுதிகள் மாற்றப்பட்டு, கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எஸ்.ஐ ஆய்வில், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மசூதி தரப்பு நீரூற்று என்று அழைக்கும் வசுகானாவில் சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பு கூறுகிறது.
மனுதாரர் ராக்கி சிங்கின் வழக்குரைஞர் அனுபம் திவேதி, இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். “ஔரங்கசீப் மசூதி கட்டுவதற்கு முன்பு வளாகத்தில் ஓர் இந்து கட்டடமும் கோவிலும் இருந்ததாகக் கூறும் ஏ.எஸ்.ஐ-யின் அறிக்கை, எங்கள் வழக்கு வலுப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. சாட்சியத்தின் பார்வையில் இந்த அறிக்கை மிக முக்கியப் பங்கு வகிக்கும்,” என்றார்.
என்னென்ன விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டன?
- தற்போதுள்ள கட்டமைப்பில் உள்ள மைய அறை மற்றும் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பின் பிரதான நுழைவுவாயில்
- மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர்
- ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் இருந்து நெடுவரிசைகள் மற்றும் சுவர் தூண்களை மீண்டும் பயன்படுத்துதல்
- மீட்கப்பட்ட அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகளில் உள்ளவை
- அடித்தளத்தில் உள்ள சிற்ப எச்சங்கள்
- ‘இந்து கோவில்’ போன்ற அமைப்பு
ஞானவாபியின் தற்போதைய கட்டமைப்பின் வடிவம் மற்றும் வயது குறித்து ஏ.எஸ்.ஐ அறிக்கையில், “தற்போதுள்ள கட்டடக்கலை எச்சங்களில் சுவர்களில் அலங்கரிக்கப்பட்ட வார்ப்புகள், மைய அறையின் கர்ண ரதம் மற்றும் பிரா ரதம் (Pra Ratha) ஆகியவை அடங்கும். அறை, ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட நுழைவுவாயில், முன் உருவம் கொண்ட சிறிய நுழைவுவாயில், பறவைகள் மற்றும் விலங்குகளின் செதுக்கல்கள், உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரம் ஆகியவை, மேற்கு சுவர் ஓர் இந்து கோவிலின் எச்சங்கள் என்று கூறுகின்றன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கலை மற்றும் கட்டடக்கலை அடிப்படையில், ஏற்கெனவே இருக்கும் இந்த அமைப்பை இந்து கோவிலாக அடையாளம் காணலாம்,” என அதில் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியான ஆய்வு மற்றும் அவதானிப்புக்குப் பிறகு, தற்போதைய கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு, அங்கு ஒரு பெரிய இந்து கோவில் இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
‘மசூதி கட்டப்பட்ட தேதி கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது’
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (1676-77) ஆட்சியின்போது மசூதி கட்டப்பட்டது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருந்ததாக ஏஎஸ்ஐ தெரிவித்துள்ளது.
மசூதியின் சஹான் (முற்றம்) பழுதுபார்க்கப்பட்டதாகவும் அந்தக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் புகைப்படம் 1965-66 ஏ.எஸ்.ஐ. பதிவுகளில் உள்ளது.
ஆய்வின்போது இந்தக் கல்வெட்டு மசூதியின் அறையிலிருந்து மீட்கப்பட்டதாகவும் ஆனால் மசூதியின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டிருந்ததாகவும் ஏ.எஸ்.ஐ தன் அறிக்கையில் கூறியுள்ளது.
ஔரங்கசீப்பின் சுயசரிதையான மாசிர்-இ-ஆலம்கிரியில் ஔரங்கசீப் தனது அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் சமய நம்பிக்கையவற்றவர்களான காஃபிர்களின் பள்ளிகள் மற்றும் கோவில்களை இடிக்க உத்தரவிட்டதாக எழுதப்பட்டுள்ளது என்று ஏ.எஸ்.ஐ கூறுகிறது.
ஏஎஸ்ஐயின் கூற்றுப்படி, 1947இல் ஜாதுநாத் சர்க்காரின் மாசிர்-இ-ஆலம்கிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாதுநாத் சர்க்கார் எழுதிய மாசிர்-இ-ஆலம்கிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டி, ஏ.எஸ்.ஐ தனது அறிக்கையில், “செப்டம்பர் 2, 1669 அன்று, பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவைத் தொடர்ந்து, காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது,” என்று எழுதுகிறார்.
கல்வெட்டு
மசூதியின் அமைப்பில் மொத்தம் 34 கல்வெட்டுகள் மற்றும் 32 அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எஸ்.ஐ அறிக்கை கூறுகிறது.
இந்தக் கல்வெட்டுகள் ஏற்கெனவே மசூதியின் கட்டுமானத்திலும் பழுதுபார்ப்பிலும் பயன்படுத்தப்பட்ட இந்து கோவிலின் கற்களில் இருந்ததாக ஏ.எஸ்.ஐ கூறுகிறது.
இந்தக் கல்வெட்டு தேவநாகரி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உள்ளது.
இது ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள கட்டமைப்பின் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பதில் பயன்படுத்தப்பட்டது என்ற முடிவுக்கு ஏ.எஸ்.ஐ இட்டுச் சென்றுள்ளது.
இந்தக் கல்வெட்டுகளில் ஜனார்தன், ருத்ரா மற்றும் உமேஷ்வரா ஆகிய மூன்று கடவுள்களின் பெயர்களும் இருப்பதாக ஏ.எஸ்.ஐ தெரிவித்துள்ளது.
மகாமுக்தி மண்டபத்தின் மூன்று கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை ஏ.எஸ்.ஐ மிக முக்கியமானதாக விவரித்துள்ளது.
அடித்தளத்தில் என்ன கிடைத்தது?
ஏஎஸ்ஐயின் கூற்றுப்படி, மசூதியில் வழிபாட்டுக்காக, அதன் கிழக்குப் பகுதியில் அடித்தளங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் மசூதியில் அதிகமான மக்கள் தொழுகை நடத்தும் வகையில் மேடைகள் மற்றும் அதிக இடவசதியும் ஏற்படுத்தப்பட்டது.
கிழக்குப் பகுதியில் அடித்தளம் அமைக்க கோவிலின் தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏ.எஸ்.ஐ. அறிக்கை கூறுகிறது. என்2 (N2) எனப் பெயரிடப்பட்ட ரகசிய அறையில் மணிகள், விளக்கு நிலை மற்றும் சம்வத் கல்வெட்டுகள் அடங்கிய தூண் உள்ளது.
S2 எனப் பெயரிடப்பட்ட அடித்தளத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளும் மீட்கப்பட்டன.
தூண்கள்
ஏ.எஸ்.ஐ அறிக்கையின்படி, மசூதியைப் பெரிதாக்கவும், முற்றத்தை உருவாக்கவும், ஏற்கெனவே இருக்கும் கோவிலின் தூண்கள் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஏஎஸ்ஐயின் கூற்றுப்படி, மசூதியின் தாழ்வாரத்தில் உள்ள தூண்களை முழுமையாக ஆய்வு செய்ததில், அவை முதலில் ஏற்கெனவே இருந்த இந்து கோவிலின் ஒரு பகுதியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்தத் தூண்களை மசூதி கட்டுவதற்குப் பயன்படுத்துவதற்காக, அதில் இருந்த தாமரை பதக்கத்திற்கு அடுத்துள்ள வியாலா உருவங்கள் (சிங்க தலையும் தந்தங்களுடன் கூடிய யானையின் உடற்பகுதியையும் கொண்டுள்ள சிலை) அகற்றப்பட்டு, மலர் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது.
மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர்
தற்போதுள்ள கட்டடத்தின் (மசூதி) மேற்கு சுவரின் எஞ்சிய பகுதி ஏற்கெனவே இருக்கும் இந்து கோவில் என்று ஏ.எஸ்.ஐ கூறுகிறது.
இந்த மேற்கு சுவர், “கல்லால் கட்டப்பட்டு கிடைமட்ட வார்ப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கு சுவர், மேற்கு அறைகளின் எச்சங்கள், மைய அறையின் மேற்கு கணிப்புகள், வடக்கு மற்றும் தெற்கு அறைகளின் மேற்கு சுவர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுவருடன் இணைக்கப்பட்ட மைய அறை முன்பு போலவே உள்ளது மற்றும் இரண்டு பக்க அறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன,” என ஏ.எஸ்.ஐ கூறுகிறது.
கோவிலின் வடக்கு மற்றும் தெற்கு நுழைவுவாயில்கள் படிக்கட்டுகளாக மாற்றப்பட்டு, வடக்கு மண்டப வாசலில் உள்ள படிக்கட்டுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
மைய மண்டபம் மற்றும் பிரதான நுழைவாயில்
கோவிலில் ஒரு பெரிய மைய அறையும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் தலா ஒரு அறையும் இருந்ததாக ஏ.எஸ்.ஐ அறிக்கை கூறுகிறது.
ஏ.எஸ்.ஐ-யின் கூற்றுப்படி, முந்தைய கட்டமைப்பின் (கோவில்) மைய அறை தற்போதைய கட்டமைப்பின் (மசூதி) மைய அறையாக உள்ளது.
கோவிலுடைய மைய அறையின் பிரதான நுழைவுவாயில் மேற்கில் இருந்து கற்களால் அடைக்கப்பட்டதாக ஏ.எஸ்.ஐ நம்புகிறது.
ஞானவாபி ஆய்வு சவாலானது: ஏஎஸ்ஐ
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏஎஸ்ஐ தனது ஆய்வைத் தொடங்கியது.
ஏ.எஸ்.ஐ குழுவில் அத்துறை பேராசிரியர் அலோக் திரிபாதி, முனைவர். கௌதமி பட்டாச்சார்யா, முனைவர். ஷுபா மஜும்தார், முனைவர். ராஜ் குமார் படேல், முனைவர். அவினாஷ் மொஹந்தி, முனைவர். இசார் ஆலம் ஹாஷ்மி, முனைவர். அஃப்தாப் ஹுசைன், முனைவர். நீரஜ் குமார் மிஸ்ரா மற்றும் முனைவர். வினய் குமார் ராய் உள்ளிட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பதற்றங்களைத் தவிர்க்க ஆய்வின்போது ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. கட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மண் மற்றும் குப்பைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன் குப்பைகள் அகற்றப்பட்டன.
ஞானவாபியை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு முகமைகள் சுற்றி வளைத்திருந்ததால் மசூதிக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாக இருந்தது. நான்கு மாதங்கள் நீடித்த இந்த ஆய்வில், வெப்பம் மற்றும் பருவமழை நாட்களில் ஏ.எஸ்.ஐ குழு மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.
சில அடித்தளங்களில் மின்சாரம் இல்லை, ஆரம்ப நாட்களில் டார்ச் மற்றும் பிரதிபலிப்பு விளக்குகள் (Reflector lights) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
அடித்தளத்தில் பணிபுரிந்தபோது, ஏஎஸ்ஐ குழுவினருக்குப் போதுமான காற்று கிடைக்காமல் இருந்தது. பின்னர், விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் பொருத்தி வேலை செய்யப்பட்டது.
மழைக்காலங்களில், தோண்டப்பட்ட இடத்தில், தார்ப்பாய் போட்டு, முகாம் அமைத்து ஆய்வு செய்தனர். ஏஎஸ்ஐ குழுவினரை அங்கிருந்த குரங்குகள் தொல்லை செய்தன. மேலும் தார்ப்பாயையும் கிழித்து குரங்குகள் தொந்தரவு செய்தன.
ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்
ஏஎஸ்ஐ ஆய்வுக்கு உத்தரவிடும்போது, வாரணாசி மாவட்ட நீதிபதி தனது உத்தரவில், “மசூதி நிலம் மற்றும் கட்டமைப்பை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தால், நீதிமன்றத்தில் உண்மைகளின் அடிப்படையில் நியாயமான மற்றும் சரியான முறையில் வழக்குக்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்தார்.
அதன் உத்தரவில், குடியிருப்பு பிளாட் எண். 9130 (தற்போதுள்ள ஞானவாபி வளாகம்) நிலம் மற்றும் கட்டடத்தின் (மசூதி கட்டடம்) ஆய்வை ஏ.எஸ்.ஐ-யின் சாரநாத் வட்டத்தின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என, தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆய்வின்போது, அகழாய்வு நடத்தப்படாது, கட்டடம் இடிக்கப்படாது என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
ஆய்வுக் குழுவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் வேதியியலாளர்கள், கல்வெட்டு நிபுணர்கள், சர்வே செய்பவர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் விசாரணை மற்றும் ஆவணப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். நிபுணர்கள் குழு ஜிபிஆர் எனப்படும் தரையில் ஊடுருவும் ரேடார் மூலம் ஆய்வை நடத்தியது.
ஏ.எஸ்.ஐ மேற்கொண்ட அறிவியல் விசாரணையின் நோக்கம்
ஏற்கெனவே உள்ள கோவிலின் மேல் தற்போதுள்ள கட்டடம் கட்டப்பட்டதா என்பதை அறிய ஏ.எஸ்.ஐ ஆய்வு நடத்த வேண்டியிருந்தது. ஞானவாபியின் மேற்குச் சுவரின் கட்டுமானத்தின் வயது மற்றும் தன்மையைக் கண்டறிய அறிவியல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தேவைப்பட்டால், மேற்குச் சுவரின் கீழ் ஆய்வு செய்ய ஏ.எஸ்.ஐ தரை ஊடுருவும் ரேடாரை பயன்படுத்த வேண்டும். ஞானவாபியின் மூன்று குவிமாடங்களின் கீழும் ஞானவாபியின் அனைத்து அடித்தளங்களிலும் ஏ.எஸ்.ஐ ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.
ஏ.எஸ்.ஐ தனது விசாரணையில் மீட்கப்பட்ட அனைத்து கலைப் பொருட்களின் பட்டியலையும் உருவாக்க வேண்டும். மேலும், எந்தெந்த கலைப்பொருட்கள் எங்கிருந்து மீட்கப்பட்டன என்பதையும் பதிவுசெய்து, அந்தக் கலைப்பொருட்களின் வயது மற்றும் தன்மையை கால மதிப்பீடு மூலம் அறிய முயல வேண்டும்.
ஞானவாபி வளாகத்தில் காணப்படும் அனைத்து தூண்கள் மற்றும் தளங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அவற்றின் வயது, வடிவம் மற்றும் கட்டுமான பாணியை ஏ.எஸ்.ஐ கண்டறிய வேண்டும்.
ஞானவாபி கட்டமைப்பின் வயது மற்றும் கட்டுமானத்தின் வடிவத்தை அடையாளம் காண கால நிர்ணயம் செய்தல், தரையை ஊடுருவும் ரேடார் மற்றும் பிற அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஆய்வின்போது மீட்கப்பட்ட தொல்பொருட்கள், கட்டடத்தில் மற்றும் அதன் அடியில் காணப்படும் வரலாற்று மற்றும் மதப் பொருட்களையும் ஏ.எஸ்.ஐ ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், கட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது.
ஆய்வுக்கு மசூதி தரப்பு எதிர்ப்பு
நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி ஆதாரங்களில் இருந்து நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்றால் மட்டுமே ஆய்வை மேற்கொள்ள முடியும் என்று மசூதி தரப்பு நம்பியது.
நீதிமன்றத்தில், இந்து தரப்பு, கட்டுமான பாணியைக் கருத்தில் கொண்டு, கட்டமைப்பின் செயற்கைச் சுவர்களுக்குப் பின்னால் சில பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியது.
இந்து தரப்பின் கூற்றுக்கு ஆதாரங்களைச் சேர்க்க தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை என்று மசூதி தரப்பு நம்பியது. ஏ.எஸ்.ஐ ஆய்வு 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாகும், இது சுதந்திரத்திற்கு முன்பிருந்த மதத் தலங்களின் மதத் தன்மையை மாற்ற அனுமதிக்காது என்று மசூதி தரப்பில் கூறப்பட்டது.
ஞானவாபி அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஏ.எஸ்.ஐ ஆய்வுக்கு தடை விதித்துள்ளதாகவும் மசூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த சர்ச்சைக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண ஏஎஸ்ஐ ஆய்வு உதவும் என்றும் கோவில் தரப்பு (இந்து தரப்பு) நம்பியது.
ஏஎஸ்ஐ ஆய்வு முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு தரப்புக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று முஸ்லிம் தரப்பு கூறுகிறது.
கடந்த 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ஆய்வு நடத்துவதற்கு இடையூறாகக் கருதவில்லை என்றும், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்துக்கள் அங்கு வழிபாடு செய்து வருவதாகவும் கோவில் தரப்பு கூறுகிறது.
ஏ.எஸ்.ஐ-யின் பணி வரலாற்று கட்டமைப்புகளைப் பாதுகாப்பது என்று இந்து தரப்பு நம்புகிறது. எனவே, ஆய்வில் ஞானவாபிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற முஸ்லிம் தரப்பின் அச்சம் அடிப்படையற்றது எனக் கூறுகிறது.
அயோத்தி வழியில் ஞானவாபியில் ஏ.எஸ்.ஐ ஆய்வு நியாயமானதா?
இது குறித்து மசூதி தரப்பு வழக்குரைஞர் எஸ்.எஃப்.ஏ.நக்வி கூறும்போது, “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, ஆகஸ்ட் 15, 1947இல் பாபர் மசூதியின் உரிமை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாகக் கூறுகிறது.
அதில், ஞானவாபி குறித்தோ அல்லது மற்ற வழக்குகள் குறித்தோ குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லுபடியை நீதிமன்றம் நிறுவியுள்ளது,” என்றார்.
“அயோத்தியில் ஏஎஸ்ஐ ஆய்வு வெவ்வேறு சூழ்நிலைகளில் நடத்தப்பட்டது. அயோத்தியில் ஏஎஸ்ஐ ஆய்வு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடத்தப்பட்டது, அதற்கு முன் அல்ல. 1992க்குப் பிறகு நடத்தப்பட்டது,” என நக்வி கூறுகிறார்.
இந்தக் கட்டுரை வெளியிடப்படும் வரை, ஏ.எஸ்.ஐ ஆய்வறிக்கையின் முடிவுகள் குறித்து மசூதி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)