இலங்கை: ‘போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு ராணுவமே பொறுப்பு’ – நீதிமன்றம் உத்தரவு
- எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி,பிபிசி தமிழுக்காக
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் புதன்கிழமை (பிப். 07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கந்தசாமி இளரங்கன் என்ற 28 வயதான இளைஞன் ஒருவன், 2006ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி காணாமல் போனதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார். வாகன ஓட்டுநரான கந்தசாமி இளரங்கன் ஓமந்தை வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான முக்கிய சோதனைச் சாவடியாக ஓமந்தை சோதனைச் சாவடி அந்தக் காலப் பகுதியில் காணப்பட்டது.
பெரும்பாலான தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டதாக இன்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கந்தசாமி இளரங்கன் பயணி ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுவதற்காக வேன் ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செலுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்த நிலையில், கந்தசாமி இளரங்கன், அவருடன் பயணித்த பயணி ஆகியோரை ராணுவம் இடைமறித்து சோதனை செய்துள்ளதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.
”ஓமந்தை சோதனைச் சாவடியில் ராணுவம் சோதனை செய்ததன் பின்னர், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடையாது. அவர் அந்த வழியாகப் பயணித்தமைக்கான ராணுவப் பதிவு, பதிவுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால், அவர் இத்தனை மணிக்கு வந்தார் என்பது தொடர்பான பதிவு உள்ளது. ஆனால், போனமைக்கான பதிவு இல்லை,” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கடும் கட்டுப்பாடுகள் நிலவிய காலப் பகுதி என்பதால், கந்தசாமி இளரங்கனின் தாயாருக்கு உடனடியாக, அவரது மகனைத் தேட முடியாத நிலைமை அன்று காணப்பட்டுள்ளது.
அதன் பின்னரான காலத்தில் தனது மகன் தொடர்பில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் ஆராய்ந்துள்ளதுடன், தனது மகன் தொடர்பான எந்தவித தகவல்களையும் அவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அதையடுத்து, கந்தசாமி இளரங்கனின் தாயார், ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணைக்குழு, போலீஸ் உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறைப்பாடுகளைச் செய்த போதிலும், தனது மகன் தொடர்பான தகவல்களை தாயினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையிலேயே, கந்தசாமி இளரங்கனின் தாய், வவுனியா மேல் நீதிமன்றத்தில் 200ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிடுகின்றார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை ராணுவ தளபதி, ராணுவத்தின் 211ஆம் படையணியின் கட்டளை தளபதி உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
”இலங்கை ராணுவத்தால் இந்த மனு மீது ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது. அவர் வந்தது உண்மைதான். ஆனால், அப்போதே அவர் சென்றுவிட்டார்,” என இலங்கை ராணுவம் ஆட்சேபனை செய்ததாக மூத்த சட்டத்தரணி கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், இறுதிக்கட்ட யுத்தம் வலுப்பெற்ற காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அதன் பின்னர், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கந்தசாமி இளரங்கனின் தாய், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மீள தொடர்வதற்கு மேல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
இதன் பின்னரான காலத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததுடன், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
”கந்தசாமி இளரங்கன் வந்தது உண்மை. ஆனால், அவர் சென்றுவிட்டார்” என பிரதிவாதிகள் சாட்சியமளித்த பின்னணியில், அதை கந்தசாமி இளரங்கனின் தாய் நீதிமன்றத்தில் நிராகரித்துள்ளார்.
”அவர் ராணுவத்திடம் இருந்து சென்றிருந்தால், எனக்கு அறிவித்திருப்பார். அவர் அந்த இடத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்,” என தாய் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், கந்தசாமி இளரங்கனுடன் வேனில் பயணித்ததாகக் கூறப்படும் இளைஞனான உமாதரன் தொடர்பான தகவல்களும் இல்லை எனக் கூறிய மூத்த சட்டத்தரணி, அவர் தொடர்பில் யாரும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறான விடயங்களை ஆராய்ந்ததை அடுத்தே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முக்கிய தீர்ப்பொன்றை நேற்று வழங்கியுள்ளார்.
தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?
”மனுதாரர் அளித்த சாட்சியங்களிலும், ஏனைய சாட்சியங்களிலும் இருந்து கந்தசாமி இளரங்கன் அந்த இடத்திற்குப் போயிருக்கிறார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இவர் முற்று முழுதாக ஸ்ரீலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளார்.
கடைசியாக அவர் ராணுவத்தின் பொறுப்பிலேயே இருந்துள்ளார். எனவே, ராணுவமே பதிலளிக்க வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்,” என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலான மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்கள், இலங்கை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்தச் சம்பவத்திற்கு இலங்கை ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிடுகின்றார்.
நீதிபதி ராணுவத்திற்கு விடுத்த உத்தரவு
எதிர்வரும் ஜுன் 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தேதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனை, உயிருடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இலங்கை ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது தவறும் பட்சத்தில், இலங்கை ராணுவம் கந்தசாமி இளரங்கனை வலிந்து காணாமல் ஆக்கியதாக தீர்மானித்து, அதற்கு நட்டஈடாக மனுதாரருக்கு மூன்று பிரதிவாதிகளும் கூட்டாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான தீர்ப்புகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதா?
”சிங்கள பகுதிகளில் இவ்வாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழர் பகுதியில் இதுவே முதல் முறை. ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் கிடையாது.
ஏனென்றால், இது சிவில் வழக்கு. நஷ்ட ஈடு மட்டும்தான் கொடுக்கச் சொல்லலாம்,” என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிட்டார்.
இலங்கை ராணுவத்தின் பதில்
இந்தத் தீர்ப்பு தொடர்பில் இலங்கை ராணுவத்தின் சட்டப்பிரிவு சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ராணுவம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.
”இந்த வழக்கில் காணாமல் போன நபர் இருப்பாராயின், எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், மனுதாரருக்கு ஜூன் 3ஆம் தேதி ஆகும்போது ஒரு மில்லியன் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது சட்டப் பிரிவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு மேல் தாம் கூறுவது சிரமமான விடயமாகும்,” என, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழுக்கு கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
அதிகம் படிக்கப்பட்டது
-
2