தேர்தல் பத்திரம்: உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் பல கோடி ரூபாய் கைமாறியது எப்படி?

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,ராகவேந்திர ராவ்
  • பதவி,பிபிசி செய்தியாளர்

கடந்த 2023 அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர வழக்கு விசாரணையைத் தொடங்கியது.

அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய இந்த விசாரணை நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி வரை தொடர்ந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

ஆனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகும், புதிய தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கும் பணியை அரசு தொடர்ந்தது என்பது அதன்பிறகு வெளியான தகவல்களில் இருந்து தெளிவாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், 8,350 தேர்தல் பத்திரங்களின் கடைசி தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு வாங்குபவர்களுக்கு கிடைக்கப் பெற்றதாகக் காட்டுகின்றன.

இந்தத் தொகுதி இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சப்ளை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று அதை ரத்து செய்தது. கூடவே தேர்தல் பத்திரத் திட்டத்தை நடத்தும் பாரத ஸ்டேட் வங்கி, சுமார் 12 கோடி ரூபாயை (ஜிஎஸ்டி உட்பட) அரசிடம் கமிஷனாக கோரியதாகவும், அதில் 8.57 கோடியை அரசு செலுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பத்திரங்களை அச்சடித்ததற்காக 1.93 கோடி ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட) அரசுக்கு பில் வந்துள்ளது. அதில் 1.90 ரூபாய் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கோடிக்கணக்கான ரூபாயை ரகசிய நன்கொடையாக வழங்கிய எந்தவொரு நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ எந்த சேவைக் கட்டணத்தையும் வசூலிக்காத திட்டம் இது.

உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தை இயக்க பொதுக் கருவூலத்தில் இருந்து, அதாவது வரி செலுத்துவோரின் பணம் அல்லது எளிய வார்த்தைகளில் சொன்னால் பொதுப் பணத்தில் இருந்து சுமார் 13.98 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன?

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,ANI

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கமடோர் லோகேஷ் பத்ரா வெளிப்படைத்தன்மை தொடர்பான விஷயங்களில் பணியாற்றி வருகிறார்.

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் பல ஆர்டிஐ விண்ணப்பங்களைச் செய்துள்ளார். 2024 மார்ச் 14ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, ஆர்டிஐக்கு பதிலளிக்கும் விதமாக, எந்த ஆண்டில் எத்தனை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன என்று கூறியது.

இந்தத் தகவலின்படி, 2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 250 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச பத்திரங்கள் 1,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் மதிப்பிலானவை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 60,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. அந்த ஆண்டு 1,000 மற்றும் 10,000க்கான ஒரு பத்திரம்கூட அச்சிடப்படவில்லை. அச்சிடப்பட்ட பத்திரங்களின் அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். 2022ஆம் ஆண்டில் 10,000 பத்திரங்கள் அச்சிடப்பட்டன. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை.

சுமார் 8,350 பத்திரங்களின் மிக சமீபத்திய தொகுதி 2024ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புடையவை. வேறு எந்த மதிப்பின் பத்திரங்களும் அச்சிடப்படவில்லை. 2020, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8,350 பத்திரங்களின் கடைசி தொகுதி 2023 டிசம்பர் 27க்கு பிறகு அச்சிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (DEA), இரண்டு ஆர்டிஐகளுக்கு அளித்த பதில்களில் இருந்து இது தெரிய வருகிறது.

அன்றைய தேதி வரை மொத்தம் 6,74,250 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று 2023 டிசம்பர் 27 அன்று டிஇஏ அறிவித்தது.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஆர்டிஐக்கு பதிலளித்த இந்தத் துறை, அதுநாள் வரை மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக 2024 பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்துள்ளது.

அதாவது 2023 டிசம்பர் 27 முதல் 2024 பிப்ரவரி 27 வரை 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதேநேரம் உச்சநீதிமன்றம் இந்த முழு விவகாரம் மீதான தனது தீர்ப்பை நவம்பர் 2ஆம் தேதியே நிறுத்தி வைத்துவிட்டது.

‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசுக்கு நம்பிக்கை இருந்தது’

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது அரசு அதிக நம்பிக்கை வைத்திருந்ததால், அது தொடர்ந்து பத்திரங்களை அச்சடித்தது என்பது இந்தத் தகவலின் மூலம் தெளிவாகிறது,” என்கிறார் கமடோர் லோகேஷ் பத்ரா.

கடைசி தொகுதியாக 8,350 பத்திரங்கள் அச்சடிப்பதற்கு முன்பே பாரத ஸ்டேட் வங்கியிடம் சுமார் 20,363 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகாமல் இருந்தன. இந்தப் பத்திரங்களில் 17,369 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் 1 கோடி ரூபாய் மதிப்பிலானவை என்று ஆர்டிஐ மூலம் இந்திய ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஏற்கெனவே பெரும் எண்ணிக்கையில் பத்திரங்கள் இருந்தன. இருந்த போதிலும் அரசு 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பத்திரங்களை அச்சிட்டது. 2024 தேர்தலுக்கு முன் பத்திரங்கள் அமோகமாக விற்பனையாகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரிகிறது,” என்று கமடோர் பத்ரா கூறினார்.

அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமை சட்டம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விஷயங்களில் பணியாற்றும் சமூக ஆர்வலர்.

“நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் வரை அரசு வழக்கம் போல் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது. உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை அரசமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்து அதற்கு தடை விதிக்கக்கூடும் என்ற விஷயத்தை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னரும் அரசு அதிக பத்திரங்களை அச்சிட்டது. எனவே இந்தத் திட்டம் அரசமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்படும் என்று அரசு நினைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்று அஞ்சலி பரத்வாஜ் குறிப்பிட்டார்.

ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளன பல சுவாரஸ்யமான தகவல்கள்

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல்களில் இருந்து மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன:

  • விற்பனை செய்யப்பட்ட பத்திரங்களின் மொத்த மதிப்பு 16,518 கோடி ரூபாய்.
  • விற்கப்பட்ட பத்திரங்களில் சுமார் 95 சதவிகித பத்திரங்களின் மதிப்பு தலா ஒரு கோடி ரூபாய்.
  • முப்பது கட்டங்களாக விற்கப்பட்ட பத்திரங்களில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 219 பத்திரங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படவில்லை.
  • இந்த 25 கோடி ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது.
  • கடந்த 2018 முதல் 2024 வரை மொத்தம் 6,82,600 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 28,030 மட்டுமே. இது அச்சடிக்கப்பட்ட மொத்த பத்திரங்களில் 4.1 சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கும் மற்றொரு விஷயம்.

மிக அதிக பத்திரங்கள் எங்கிருந்து விற்கப்பட்டன?

தேர்தல் பத்திரங்கள், உச்சநீதிமன்றம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை பிரதான கிளையில் இருந்து அதிகபட்சமாக 4009 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டன.
  • இரண்டாவது இடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஹைதராபாத் முதன்மைக் கிளை உள்ளது. அங்கு 3554 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை விற்றுள்ளது.
  • கொல்கத்தா முதன்மைக் கிளை 3333 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும், புது டெல்லி முதன்மைக் கிளை 2324 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும் விற்றுள்ளன.
  • பாட்னா பிரதான கிளையில் இருந்து குறைந்தபட்சமாக 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்டது.

பெரும்பாலான பத்திரங்கள் எங்கே பணமாக்கப்பட்டன?

பாரத ஸ்டேட் வங்கியின் புது தில்லி பிரதான கிளையிலிருந்து 10,402 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிகபட்ச பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தின் பிரதான கிளையில் இருந்து 2,252 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும், கொல்கத்தா மெயின் கிளையில் இருந்து 1,722 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களும் பணமாக்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்த அளவாக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் ஸ்ரீநகரின் பாதாமி பாக் கிளையிலிருந்து பணமாக்கப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author