ஆளுநரும் புது சர்ச்சையும்

 

 

Mayu   / 2024 ஜூலை 12 , பி.ப. 11:43 – 0      – 74

twitter sharing button
print sharing button
facebook sharing button
pinterest sharing button
மொஹமட் பாதுஷாஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பும், அதனை ஒத்திவைப்பதற்கு இன்னுமொரு தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு.   எது எவ்வாறிருப்பினும் மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை வரும் என்ற அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நகர்வுகளையும் சமகாலத்தில் சிறிய, பெரிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

சிறுபான்மை முஸ்லிம், தமிழ்க் கட்சிகள் தமது வாக்குத் தளங்களைப் பலப்படுத்துவதற்காகப் பல வருடங்களுக்குப் பிறகு மக்கள் மன்றத்திற்குள் இறங்கியிருக்கின்றன. பெருந்தேசியக் கட்சிகள் பெரும்பான்மை மக்களை மட்டுமன்றி, சிறுபான்மை மக்களையும் வசப்படுத்துவதற்கான வழிகளைத் தேடி நாட்டின் நாலாபுறமும் ஓடிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இம்மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்க முற்பட்டமை கடுமையான சர்ச்சையையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இது முதற்தடவையல்ல! கிழக்கு மாகாண முதலமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டதில் இருந்தே அவரது செயற்பாடுகள் அல்லது அவரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியமை ஞாபகமிருக்கலாம். அவற்றை அவர் கடந்து வந்திருக்கின்றார். ஆனால், அவர் செய்த எல்லாமும் சரி என்றும் இல்லை தவறு என்றும் சொல்ல முடியாது.

கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் மக்களிடம் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இந்த தருணத்தில்தான் பல முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்களும் அடிபட்டன.

அதேபோன்று, தமிழ்த் தேசியத்தைத் திருப்திப்படுத்தக் கூடிய ஒருவர் ஆளுநராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது. இந்த குழப்பங்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் சிங்களவர் ஒருவரை மீண்டும் ஆளுநராக நியமிக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன.

ஆனால், அதனையெல்லாம் மீறி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிக நுணுக்கமான ஒரு நகர்வைச் செய்து கிழக்குக்கு ஆளுநராக செந்தில் தொண்டமானை நியமித்தார். மலையகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி சார்ந்த அரசியல்வாதியைக் கிழக்கிற்கு ஆளுநராக நியமித்ததன் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கும் இருந்ததாகப் பரவலாக நம்பப்படுகின்றது.
இதன்மூலம் தமிழ் மக்களையும் இந்தியாவையும் ஏதோ ஒருவகையில் திருப்திப்படுத்த ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், முஸ்லிம் தரப்பில் சில விமர்சனங்கள் எழுந்தாலும், அதனை மிக சாதுரியமான முறையிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் செந்தில் கையாண்டு வருகின்றார் என்றே தோன்றுகின்றது.
இங்கே, கிழக்கு ஆளுநரை விமர்சிக்கின்ற தரப்புக்களும் உள்ளன. அவரிடம் தமது வேலைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆதரவளிக்கும் தரப்புக்களும் உள்ளன. இவரது நியமனத்தின் பின்னணி, சில செயற்பாடுகள் எவ்வாறு இருந்த போதும், தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதைச் சாதகமாகவே நோக்க வேண்டியுள்ளது எனலாம்.

எவ்வாறாயினும், செந்தில் தொண்டமானைச் சுற்றும் விமர்சனங்கள், சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. ‘ஆளுநராக நியமிப்பதற்குக் கிழக்கைச் சேர்ந்த ஒருவர் இல்லையா?’ என்று எழுந்த கோஷங்களில் இருந்து, அவர் மீதான சர்ச்சைகள் இன்று வரை தொடர்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, சகஜமானதுதான்.

இந்தப் பின்னணியில், அண்மையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மேயர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார். அத்துடன், அவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும் அதனைத் தொடர்ந்து சில வசதிகளை வழங்குவதற்கும் முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாகவோ அல்லது தனது சொந்த தீர்மானத்தின் படியோ ஆளுநர் ஒருவர் இணைப்பாளர்களை நியமிப்பது அவரது திட்டங்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் மக்களுக்கு உதவலாம் என்பதை
மறுப்பதற்கில்லை. ஏனென்றால், போலி இணைப்பாளர்களும், இடைத்தரகர்களும் படுத்துகின்ற பாடு சொல்லி மாளாது.

ஆயினும்,  தேர்தல் ஒன்று நெருங்கி வரும் காலத்தில் இவ்வாறான பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதன் பின்னணியில் ஒரு ‘அரசியல்’ இலக்கு இருக்கின்றது என்பதையும் அறியாத அளவுக்கு மக்களும் ஏனைய தரப்புகளும் அரசியல் அறிவற்றவர்கள் அல்லர். இந்தக் கோணத்திலேயே இவ்விடயம் விமர்சிக்கப்படுகின்றது.

இவ்வாறான நியமனம் வழங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டித்துள்ளதுடன், ஆளுநரால் வழங்கப்படும் இப்பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று இக்கட்சி தனது உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மு.கா. கட்சி, இது குறித்துத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. இவர்களுள் பலர் ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களின் வேட்பாளர்கள் என்றும் மு.கா. சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் தனது முன்னாள் உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கு விடுத்திருக்கின்றது.
இதனையடுத்து, ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் வேட்பாளர்களை இணைப்பாளர்களாக நியமிப்பதற்குக் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துள்ள முயற்சி சட்ட விரோதமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நியமன முயற்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே,  இது ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை என கண்டித்துள்ளது.

இது இவ்வாறிருக்க,  ஊடகத்திற்குக் கருத்து தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கின்றார். தனது பணிகளை மேற்கொள்வதற்காகவே இப்பதவிகள் வழங்கப்படுவதாகவும் தேர்தல் நோக்கமில்லை என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிகின்றது. மாறாக, அவர் உத்தியோகப்பூர்வமாக மறுப்பறிக்கையை வெளியிட்டதாக அறியக் கிடைக்கவில்லை.

இத்தனை சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள பின்னரும் ஆளுநர் செந்தில் ஒரு சிலருக்கு இணைப்பாளர் நியமனங்களை வழங்கியுள்ளதாகவும், கட்சிகளின் தீர்மானங்களை மீறி இப்பதவிகளைப் பொறுப்பேற்கச் சிலர் காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆளுநர் ஒருவர் தனது பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஆட்களை நியமிப்பதில் தப்பில்லை. அது மக்கள் சேவையை இலகுவாக்கும் என்று ஆளுநர் கருதுவதும் பிழையில்லை. ஆனால்,  இலங்கையில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் உள்ள யதார்த்தங்களை இங்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதாவது, இணைப்பாளர் பதவிகளுக்காக ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்ற காலப் பகுதியில் கட்சிகளில் கட்டுப்பாடுகள் இல்லாது போய்விட்ட சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் அல்லது மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் உத்தரவுகளுக்கு உறுப்பினர்கள் கட்டுப்படுவார்கள் என நம்ப முடியாது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கி விட்டன.

அதேபோல்,  ஆளுநர் செந்தில் உண்மையில் தனது பணிகளைச் செய்வதற்காகவே இணைப்பாளர் நியமனங்களை வழங்குகின்றார் என்று எடுத்துக் கொண்டாலும், ஆளுநர்களே அரசியல் செய்கின்ற போது,
நடைமுறைச் சூழலில் இப் பதவிகள் தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்பதையும் மறுதலிக்க முடியாது.

ஆளுநர்களால் அல்லது அரசியல் தலைவர்களால் வழங்கப்படும் இவ்வகையான பிரதேச ரீதியான பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் எல்லோரும் பல்லாயிரம் வாக்குகளைக் கொண்டு வருவதும் இல்லை.  பெரிய ஆளுமைகளாக இருப்பதும் இல்லை.

ஆகவே, இந்நியமனங்களால் முஸ்லிம் கட்சிகளுக்குச் சிறிய தாக்கங்கள் ஏற்படலாம். சமகாலத்தில் ஆளுநரே சிலவேளை, சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்படலாம். அதற்கப்பால் இந்நியமனங்களால் பெரிதாக எதுவும் ஆகிவிடப் போவதில்லை.

09.07.2024

Author